பண்டையக் கால இந்தியா : ஒரு வரலாற்று சித்திரம் (நூல்)

இந்து தேசியவாதம் மற்றும் இந்துத்துவம் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வரும் முனைவர் திவிஜேந்திர நாராயண் ஜா வின் நூல் ‘Ancient India in Historical outline’ .[1]அசோகன் முத்துசாமி இந்நூலை ‘பண்டையக் கால இந்தியா : ஒரு வரலாற்று சித்திரம்’ என்கிற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார். வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி குப்தர்கள் காலம் வரையிலான வரலாற்று நிகழ்வுகளை ஜா இந்த நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.[2]

சிந்து சமவெளி நாகரிகம்

பிரம்மாண்ட நகர அமைப்பும், மாட மாளிகைகளும் இருந்த அதே நேரத்தில், நகருக்கு வெளியே வறியவருக்கான இருஅறைக் குடில்கள் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன என்பதை ஆசிரியர் விவரிக்கிறார் . சிந்து சமவெளி மக்கள் வலமிருந்து இடமாக எழுதும் முறையைக் கொண்டிருந்தனர் என்பதையும், இறந்தவர்களைப் புதைத்துக் கல்லறை கட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதையும் ஆசிரியர் விளக்குகிறார்.[2]

மாட்டிறைச்சி மற்றும் பசு மாமிசம்

மாட்டிறைச்சி மற்றும் பசு மாமிசம் உண்ணும் வழக்கம் இஸ்லாமியர் வருகையை ஒட்டியே இந்தியாவிற்குள் நுழைந்தது, பசு புனிதமானது, அதைக் கொல்வது இந்து மத விரோதம் என்ற கூற்றுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை வரலாற்றுச் சான்றுகள் வாயிலாக ஜா நிரூபிக்கின்றார். ‘கோக்னா’ எனப்படும் விருந்தாளிகளுக்கு பசு மாட்டு இறைச்சியை வழங்கி வேதகால ஆரியர்கள் கௌரவித்தனர்; ரிக்வேதம் பல்வேறு பலிச் சடங்குகளை விவரிக்கும் 428 பாடல்களைக் கொண்டது; ராஜரூய யாகம், அசுவமேத யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்களின் போது பசு மாடுகள் பலியிடப்பட்டு அவற்றின் இறைச்சி விருந்தாக வழங்கப்பட்டது என்பன போன்ற ஆதாரங்களை முன்வைக்கிறார். அறியப்பட்ட வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறுகளே என்கிற புரிதலுடன் , வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்னோட்டத்துடன் கூடிய நூலாசிரியரின் தேடுதலும் ஆய்வும் நூலின் மையமாக அமைகின்றன.[2]

மேற்கோள்கள்