பட்டுராசு
பட்டுராசு அல்லது பட்டுராசு களப்பாடியார் என்பவர் தொழிற்சங்கப் போராட்டவாதி. சமூக நீதி செயல்பாட்டாளர். தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடியவர். இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் காரியதரிசி பதவியில் இருந்தவர்.[1]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பட்டுராசு |
---|---|
பிறந்ததிகதி | 1912 |
பிறந்தஇடம் | இந்தியா தமிழ்நாடு கீழ நெம்மேலி, தஞ்சாவூர் |
பணி | தேசிய தொழிற்சங்கவாதி |
வாழ்க்கை சுருக்கம்
தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திலுள்ள, கீழ நெம்மேலி கிராமத்தில் பிறந்தார். 1930 ஆம் ஆண்டு தன்னுடைய சிறுவயதில் மலாயாவிற்கு வேலை தேடிச்சென்றார். அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள், சீனர்கள், மலேசியர்களின் தோட்டங்களில் இந்தியர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு மனம்வெதும்பினார். இதனால் அவருக்கு பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது. பி. வீரசேனன், எஸ். ஏ. கணபதி, வாட்டாக்குடி இரணியன் போன்றவர்களுடன் சேர்ந்து இரும்பாலைத் தொழிற்சங்கத்தை தொடங்கினார். தொழிலார்களுக்காக பல போராட்டங்களையும், துப்பாக்கி குண்டடிகளையும் பெற்றார்.[1]
மலாயா துறைமுகத் தொழிற்சங்கம் பலமாக இருந்தால் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கும் என ஆங்கிலேய அரசு, அதை நசுக்குவதில் கவனமாக இருந்தது. ஏறத்தாழ 12000 தொழிலாளிகள் இருந்த அந்தச் சங்கத்தை வலுப்படுத்த அதன் தலைவர் பதவி இரணியனுக்கும், காரியதரிசி பதவி பட்டுராசுவிற்கும் வழங்கப்பட்டது. துறைமுக தொழிற்சங்கம் மிகச் சிறப்பாக செயலாற்றியது. பட்டுராசுவின் நேர்மையான நடவடிக்கையால் சந்தாத் தொகை லட்சக்கணக்கான வெள்ளிகள் சேர்ந்தன. பட்டுராசு தொழிலாளர்கள் நிதியிலிருந்து ஒரு வெள்ளி கூட எடுத்து செலவு செய்யமாட்டார். அத்தகைய நேர்மையாளராக நடந்து கொண்டார்.[2]
1946 ல் தமிழர்களை கொத்தடிமைகளாக பயன்படுத்திய மலாயா ரவுடிகள் ஆதிகத்தை எதிர்த்து போராடினார். ஆயுதம் தாங்கியப் போரட்டத்தில், ரவுடிகளின் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அதில் பட்டுராசு, வீரசேனன், கணபதி, இரணியன் மேல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இவர்களுக்காக வாதடியவர் சிங்கப்பூர் அதிபராக இருந்த லீ குவான் யூ. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்டதால், இவர்களை ஆங்கிலேய அரசு சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது. இவர் தலைமறைவாக இருந்தார். கோலாலம்பூர் அருகில் போர்டீசன் துறைமுகத்தில் தலைமறைவாக இருந்து, பின் ரகசியமாக 1949 ஆண்டு சிங்கப்பூரில் இருந்து அந்தமான் வழியாக இந்தியா திரும்பினார்.
தமிழகத்தில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் அந்த காலகட்டத்தில் பண்ணையாட்கள் உரிமைக்காக, நிலவிய கொடுமைகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களான வெங்கடேச சோழகர், எஸ். ஜி. முருகையன் போன்றவர்களோடு இணைந்து போராடத் தொடங்கினார்.
தோழர் பட்டுராசு பெண்ணடிமையை எதிர்த்து தன் மனைவிக்கு மோதிரம் மட்டுமே மாற்றி சுயமரியாதையாகத் திருமணத்தை நடத்தியும், வாழ்ந்து காட்டினார்.[3]
ஆலயநுழைவு
தோழர் பட்டுராசு தனது கிராமமான நெம்மேலியில் பள்ளிக்கூடம் ஆரம்பித்து அதில் தன்னுடன் சிங்கப்பூரில் வேலை செய்த தாழ்த்தப்பட்ட ஆசிரியர்களைப் பணியமர்த்தினார். அனைத்து மாணவர்களையும் ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச்சென்று அதிர்வை ஏற்படுத்தினார்.[4]
இவர் 1970-களில் நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதிக்கு, பொதுவுடைமை கட்சி சார்பாக போட்டியிட்டு தோற்றுப்போனார்.
தியாகி பென்சனுக்காக கேட்டபோது, மக்களுக்காக போராடியதற்காக கூலி வாங்குவது தவறு என அதை மறுத்தவர். அவரை மதிக்கும் விதமாக மன்னார்குடியை அடுத்த கீழநெம்மேலி என்ற கிராமத்தில் பறையர் மக்கள் தங்கள் வாழும் பகுதிக்கு கே. பி நகர் என்று பெயர் வைத்து சிறப்பித்தனர்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "தென்பறை முதல் வெண்மணி வரை". https://books.google.ae/books?id=QjGqWGRIzLgC&pg=PA66&lpg=PA66&dq=%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&source=bl&ots=bbQrrILXMA&sig=ACfU3U1HMlljWFJr7oCna6xt_Y_BlcgljQ&hl=en&sa=X&ved=2ahUKEwiOzYbMscz1AhXkAmMBHVYkDS0Q6AF6BAgCEAM#v=onepage&q&f=false.
- ↑ "வாட்டாக்குடி இரணியன்". வினவு. https://www.vinavu.com/2021/01/29/nool-arimukam-vattakudi-iranian-subhash-chandra-bose-karuppaiah/.
- ↑ "தஞ்சை மாவட்ட களநாயகர்கள் வழியாக சமூக வரலாறு". கீற்று (இணையத்தளம்). https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagammay2014/26611-2014-05-28-10-18-52.
- ↑ "வெண்மணியிலிருந்து வாய்மொழி வரலாறு". https://books.google.ae/books?id=NsSWo7eM9UcC&pg=PA26&lpg=PA26&dq=%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&source=bl&ots=uDzzS-Bm2f&sig=ACfU3U2qVVT_1L5yNNBRXsOFcgKnWJJPzg&hl=en&sa=X&ved=2ahUKEwiOzYbMscz1AhXkAmMBHVYkDS0Q6AF6BAgDEAM#v=onepage&q&f=false.