பட்டீஸ்வரம் கோதண்டராமசுவாமி கோயில்

பட்டீஸ்வரம் கோதண்டராமசுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வைணவக் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் பட்டீஸ்வரத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் கதிர்வேய்ந்த மங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது. [1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக கோதண்டராமர் உள்ளார். இறைவி சீதை ஆவார். இக்கோயில் மூன்று நிலை ராஜ கோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. அடுத்து முன் மண்டபம் காணப்படுகிறது. அங்கு கருடாழ்வார், கொடி மரம், மடப்பள்ளி ஆகியவை உள்ளன. இங்குள்ள மண்டபம் வௌவால் நத்தி மண்டப முறைப்படி அமைந்துள்ளது. துவார பாலகர்களாக ஜயன், விஜயன் உள்ளனர். கருவறையில் கோதண்டராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் காணப்படுகிறார். கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. இக்கோயிலில் ராமானுஜர், மணவாள மாமுனிகள் சன்னதிகள் உள்ளன. [1]

வரலாறு

சாலியர் என்ற மகரிஷி நெசவுத்தொழில் செய்து வந்தார். அத்தொழிலில் பட்டுப்புழுக்களைக் கொன்ற தோஷம் உள்ளதாக அவர் கருதினார். ராமனை வேண்டி தம் தோஷம் நீங்க வழிவகை செய்யும்படி கேட்டுக்கொண்டார். அவருடைய குறையைக் கேட்ட ராமர் இத்தலத்தில் தங்கியிருந்து அவருடைய தோஷத்தைப் போக்கினார். [1] ராமர், ராவணனைக் கொன்றதால் வீர ஹத்தி தோஷமும், பிரம்மஹத்தி தோஷமும், படையினரைக் கொன்றதால் இதர தோஷங்களையும் பெற்றார். ராமேஸ்வரத்தில் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காகவும், வேதாரண்யத்தில் வீரஹத்தி தோஷம், சாயஹத்தி தோஷம் நீங்குவதற்காகவும், இதர தோஷம் நீங்குவதற்காகவும் இத்தலத்தில் கோமகமல புஷ்கரணி ஏற்படுத்தி சிவனை வழிபட்டதாகக் கூறுவர். [2]

திருவிழாக்கள்

ராம நவமி, அனுமன் ஜெயந்தி, மார்கழி மாத வழிபாடு, நவராத்திரி போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும். [1]

குடமுழுக்கு

இக்கோயிலில் 11 பிப்ரவரி 1976இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு காணப்படுகிறது.

மேற்கோள்கள்