நீலக்குயில் (சிற்றிதழ்)

நீலக்குயில் என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கோவில்பட்டியில் 1970களில் வெளியான ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும்.[1]

வரலாறு

நீலக்குயில் கோவில்பட்டியில் 1974இல் இருந்து வெளியானது. எஸ். அண்ணாமலை அதன் ஆசிரியரும் வெளியிட்டாளருமாக இருந்தார். ‘உண்மை இலக்கியங்களுக்கு ஒரு மேடை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் வெளியிடப்படுவதுதான் இந்த இலக்கியப் பத்திரிகை' என்று அதன் முதல் இதழில் அறிவிக்கப்பட்டது.

அண்ணாமலை ஒரு எழுத்தாளர் அல்ல. கோவில்பட்டி வணிக பிரமுகர்களில் ஒருவர். அவ்வூருக்கு அருகில் உள்ள இடைசெவல் சிற்றூரில் வசிக்கும் கி. ராஜநாராயணன் அவருக்கு நல்ல நண்பர். காலம் சென்ற கு. அழகிரிசாமியையும் அவர் அறிவார். கோவில்பட்டியில் வளர்ந்து கொண்டிருந்த இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரும் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். ஆகவே, இயல்பாக அவருக்கு இலக்கியத்தில் ஒரு ஈடுபாடு இருந்தது. இதனால் 'ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்த வேண்டும்' என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது.

தனது இதழுக்கு 'நீலக்குயில்' என்ற பெயரை வைக்க வேண்டும் எனும் ஆசை அவருக்கு ஏற்பட்டது. அந்தக் காலத்தில் நீலக்குயில் என்றொரு மலையாள திரைப் படம் வெற்றிகரமாக ஓடிப் பெயர் பெற்றிருந்தது. அதன் கதை, நடிப்பு, இனிய பாடல்களினால் அண்ணாமலை வசீகரிக்கப்பட்டிருந்தார். ஆகவே, அவர் தமது பத்திரிகைக்கு அந்தப் பெயரையே வைத்துவிட்டார்.[2]

‘நீலக்குயில்' முதலாவது இதழ் 1974 மே முதல் நாள் வெளி வந்தது. காசி விஸ்வநாதன், தேவதச்சன், பரணிகுமார், பானு கவிதைகள் (புதுக் கவிதை), பூ மணி, கௌரிஷங்கர் கதைகள், 'குறியீட்டுக் கொள்கை ( ஸிம்பலிஸிம்) பற்றிய ஒரு கட்டுரை (கோபி எழுதியது ) அதில் இடம் பெற்றிருந்தன. அன்றைய விகடன் அளவில் 22 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. தனி அட்டை இல்லாமல் வெளியானது.

முதல் இதழில் 'சிம்பலிலம்' குறித்த கட்டுரை வெளியானது. ஆனால் அத்தகைய கட்டுரை பின்னர் வரவேயில்லை. எழுதப்பட வேண்டிய ஒரு ஆய்வு-குறித்து இரண்டாவது இதழில் அறிவிப்பு வந்தது. ‘சிறுகதை : சில புதிய சேர்க்கைகள், (ஆய்வுத்தொடர் ) கோ. ராஜராம் எடுத்துப் பேசும் இளைய முகங்கள்; அஸ்வகோஷ், வண்ணதாசன், பூமணி, ம. ராஜாராம், வண்ண நிலவன், சா. கந்தசாமி.' இந்த அறிவிப்பு பின்னர் செயல் வடிவம் பெறவில்லை.

மாத இதழாகத் தயாரிக்கப்பட்ட நீலக்குயில் கால ஓட்டத்தில் தாமதமாக வெளிவருவது தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது. அதன் மூன்றாம் ஆண்டில் அது காலாண்டு ஏடாக மாற்றப்பட்டது.[1]

படைப்புகள்

புதுக் கவிதை, சிறுகதை, கட்டுரைகளில் 'நீலக்குயில்' கவனம் செலுத்தியது. நீல. பத்மநாபன், துரை சீனிச்சாமி, கல்யாண்ஜி, கே. ராஜகோபால், சி. ஆர். ரவீந்திரன், ந. ஜயபாஸ்கரன், ஷண்முக சுப்பையா, சே. சேவற் கொடியோன், தேவதேவன், தேவதச்சன் மற்றும் பலரது கவிதைகள் இப்பத்திரிகையில் வெளியாயின. இலங்கை எழுத்தாளர் சிறீபதி புதுக் கவிதை பற்றி எழுதிய கட்டுரையையும் இது வெளியிட்டுள்ளது.

நகுலன் அஞ்சலி என்ற தலைப்பில் படைத்த ஒரு நீண்ட கவிதை-சோதனை முயற்சி-தொடர்ந்து வெளிவந்தது. கி. ராஜநாராயணன், பா. செயப்பிரகாசம், பிரபஞ்சன், நீல. பத்மநாபன், மாலன், வா. மூர்த்தி, சிந்துஜா, இரா. கதைப்பித்தன், காசியபன் மற்றும் பல புதிய எழுத்தாளர்கள் கதைகள் எழுதியுள்ளனர். வல்லிக்கண்ணன் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்தன. ஒரு கதையும் அச்சாயிற்று.

காரை சிபி, தமிழவன் கட்டுரைகளையும் நீலக்குயில் வெளியிட்டது. விமர்சனக் கட்டுரைகளைப் வெளியிடுவதில் ஆர்வம் காட்டியது. அந்தச் சமயத்தில் வெளிவந்த பல புத்தகங்களைப் பற்றிய விரிவான, நேர்மையான கருத்துகளை எழுத்தாளர்கள் கட்டுரையாக்கியிருக்கிறார்கள்.

கி. ராஜநாராயணன் சேகரித்த தமிழ்நாட்டு நாடோடிப் பாடல்கள் சில இதழ்களில் வெளிவந்தன. ஆராமுதம் எழுதிய ஒரு நாடகமும் வெளிவந்திருக்கிறது. சோவியத் சிறுகதைகள் சிலவற்றையும் 'நீலக்குயில் வெளியிட்டது. முதல் ஆண்டு முடிந்ததும், இரண்டாவது ஆண்டின் முதல் இதழை (மே 1975) 'கடித இலக்கியச் சிறப்பிதழ்’ என தயாரித்தது.

23-வது இதழில் ‘சிறந்த எழுத்துக்களைப் படைத்த பசித்த வயிறுகள்'-ஒரு குறிப்பு: ஏ. ஏ. ஹெச். கே. கோரி கவிதை வல்லிக்கண்ணன் கதை 'ரசிகன்', அகல்யாவின் அபிப்பிராயங்கள்; சோவியத் வீர விருது பெற்ற தென்னிந்தியர் பற்றிய ஏ. ஏஸ். மூர்த்தி கட்டுரை, ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவலிலிருந்து சில பக்கங்கள், உமாபதி கவிதை 'என் தம்பி'- போன்றவை வெளியாயின.

'கோபல்ல கிராமம்' புதினம் பற்றி நகுலன் எழுதிய மதிப்புரை சீனக் கவிஞன் வாங் வெய் கவிதைகள்; துரை சீனிச்சாமி தமிழில்; மற்றும் சில கதைகள் ஆகியவற்றைத் தாங்கி வந்த 24-வது இதழ் தான் (அக்டோபர் 1976) கடைசியாக வெளிவந்த இதழாகும்.[1]

நிறுத்தம்

25-வது இதழ் தயாரிக்கப்பட்டது. ஆனாலும் அதை திரு. அண்ணாமலை என்ன காரணத்தினாலோ வாசகர்களுக்கு அனுப்பவேயில்லை.[1]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நீலக்குயில்_(சிற்றிதழ்)&oldid=17676" இருந்து மீள்விக்கப்பட்டது