நாதன் கோயில்

[1]

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
நாதன் கோயில் (திருநந்திபுரவிண்ணகரம்) [2]
படிமம்:Natankovil1.jpg
பெயர்
புராண பெயர்(கள்):நாதன் கோயில், திருநந்திபுரவிண்ணகரம்
பெயர்:நாதன் கோயில் (திருநந்திபுரவிண்ணகரம்) [2]
அமைவிடம்
ஊர்:நாதன் கோயில்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நாதநாதன், விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன், ஜகந்நாதன்
உற்சவர்:ஜெகந்நாதன்
தாயார்:செண்பகவல்லி
தீர்த்தம்:நந்தி தீர்த்த புஷ்கரிணி
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:மந்தார விமானம்
கல்வெட்டுகள்:உண்டு

நாதன் கோயில் என்ற திருநந்திபுரவிண்ணகரம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட (மங்களாசாசனம் ) இத்தலம் கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது. பழங்காலத்தில் இவ்விடம் செண்பகாரண்யம் என அழைக்கப்பட்டது. மன்னார்குடி தொடங்கி இந்த நாதன் கோயில் முடிய உள்ள பகுதிக்கே செண்பகாரண்யம் என்று பெயர்.[3] இக்கோவிலின் மூலவர் ஜெகந்நாதன் (வீற்றிருந்த திருக்கோலம்) இறைவி செண்பகவல்லி ஆவார். இக்கோயிலின் தீர்த்தம் நந்தி தீர்த்த புஷ்கரிணி ஆகும். இக்கோயிலின் விமானம் மந்தார விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. காளமேகப் புலவர் பிறந்த ஊர்.

இத்திருக்கோயில் தக்ஷிண ஜகந்நாதம் என்று அழைக்கப்படுகின்றது.

படிமம்:Natankovil2.jpg
தாயார் சன்னதி

தலவரலாறு

சிவபெருமானின் வாகனமாகவும், கயிலாய மலையில் வாயிற்போக்கனாகவும், பூதகணங்களின் தலைவராகவும் உள்ளவர் நந்தி தேவர். சிவ பக்தியில் சிறந்தவர் இவர். இவருடைய அனுமதி பெற்றுவிட்டுத் தான் சிவாலயங்களில் நாம் தரிசனம் செய்ய முடியும். கயிலை மலைக்குள் அனுமதி இல்லாமல் இராவணன் நுழைய முற்பட்டபோது அவனுக்கும், நந்தி தேவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது குரங்கு ஒன்றால் உன் நாடு இலங்கை அழிந்து போகும் என்று சாபமிட்டார். சிவனை அவமதிக்கும் வகையில் தாட்சாயணியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். அந்த யாக சாலையில் பூத கணங்களுடன் புகுந்து அதகளம் செய்தார். தட்சனின் தலை அறுபட்டு விழவும், யாகத்துக்கு துணை போன தேவர்கள் சூரபதுமனால் வதைபடவும் சாபம் கொடுத்தவர் நந்தி தேவர் தான்.

இத்தகைய நந்தி தேவர் திருவைகுண்டம் வந்த பொழுது, அங்கு காவலாக இருந்த துவாரபாலகர்களின் அனுமதி பெறாமல் உள்ளே நுழைய முயன்றார். அவர்கள் தடுத்தபோது அதை பொருட்படுத்தாமல் உள்ளே சென்றார். இதனால் கோபமடைந்த துவாரபாலகர்கள், நந்தி தேவரின் உடல் முழுதும் வெப்பம் ஏறி சூட்டினால் துன்பமுறுவாய் என்று சாபமிட்டனர். அவர் துடித்துப் போனார். பலரிடமும் உபாயம் கேட்டார். எரிச்சல் தீரவில்லை. இறுதியில் சிவனிடம் இதைச் சொல்லி தீர்வு கேட்டார். அதற்கு இறைவன், 'சகல விதமான பாவங்களையும் போக்கும் செண்பகாரண்யம் எனும் தலம் கும்பகோணத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. அங்கு போய் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து விமோசனம் பெற்றுக்கொள்' என்றார்.

அதன்படி நந்தி தேவர் இங்கு வந்து தவம் செய்து, சாப நிவர்த்தி பெற்றார். அத்துடன், தான் இங்கு வந்து தவம் செய்து பேறு பெற்றமையால், தன் பெயராலேயே இத்தலம் விளங்க வேண்டும் என்று அருள் பெற்றார்.அதன் பிறகு நந்திபுரம் என்றும், நந்திபுர விண்ணகரம் என்றும் பெயர் பெற்றது.

திருமாலின் திருமார்பில் திருமகள் உறையும் பாக்கியம் பெற்றதும் இங்குதான். திருப்பாற்கடலில் பரந்தாமனின் பாதங்களையே பற்றி எந்நேரமும் அவரது திருவடியிலேயே இருந்த அன்னை, ஒளி வீசும் அவர் மார்பைப் பார்த்து ஒரு முறை பிரமித்தார். தான் எந்நேரமும் அங்கேயே வாசம் செய்யவேண்டும் என்று விரும்பினார். அதற்காக, செண்பகாரண்யம் எனப்படும் இந்த தலம் வந்து திருமாலை வேண்டி கடும் தவம் செய்தார். பாற்கடலில் திருமகளைப் பிரிந்து தனித்திருந்த திருமாலும் ஓர் ஐப்பசி மாத சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் அலைமகளுக்குக் காட்சி அளித்தார். அன்னை மனம் மகிழ்ந்தாள். 'உன் விருப்பப்படி நீ எம் மார்பில் இனி உறையும்' என்று ஆசிர்வதித்தார். கிழக்கு நோக்கி திருமகளை எதிர்கொண்டு ஏற்றமையால் இங்கு பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

திருமாலைப் பிரிந்து தவம் இருந்து மீண்டும் தரிசனம் பெற்று இணைந்தமையால் திருமணப் பிரார்த்தனைக்கு இது உகந்த தலமாகும். தாயாருக்கு ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் வைத்து பிரார்த்தித்து வர நினைத்த காரியம் கைகூடும்.

சிபிச் சக்கரவர்த்திக்குப் பெருமாள் காட்சி தந்து அருளிய தலமாகும். தன்னிடம் வந்து அடைக்கலமான புறாவின் எடைக்குச் சமமாக, தானே தராசின் மறு தட்டில் அமர்ந்து தன்னை காணிக்கை ஆக்கிய சிபிச் சக்கரவர்த்தியைக் காண பெருமாள் அவருக்கு காட்சி அளித்தார். இதற்காக கிழக்கு நோக்கி இருந்த பெருமாள் மேற்கு நோக்கி திரும்பினார்.

சிறப்புகள்

விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் என்னும் நாயக்க மன்னர் தன் அன்னைக்குத் தோன்றிய காரணம் காண இயலா (குணமநோய்) நோயை நீக்க வேண்டி இப்பெருமானிடம் இரைந்து நிற்க, அவ்விதமே நோய் நீங்கியதால் இக்கோவிலுக்கு பல அரிய திருப்பணிகள் செய்தார். ஒரு ராஜா அணிய வேண்டிய சகல ஆபரண அணிகலன்களுடன் நாயக்க மன்னர் தமது இரண்டு மனைவியருடனும், தாயுடனும் இங்கு நின்றுள்ள (சிற்பங்கள்) கோலம் மிகவும் அழகானதாகும்.[3] நாதன் கோயில் காளமேகப் புலவரின் பிறப்பிடம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. "அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில்". பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2015.
  2. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=159
  3. 3.0 3.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
"https://tamilar.wiki/index.php?title=நாதன்_கோயில்&oldid=131444" இருந்து மீள்விக்கப்பட்டது