நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை
நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை (1910 – 1964) என்பவர் ஒரு புகழ்பெற்ற தமிழ்நாட்டுத் தவில் கலைஞர்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை |
---|---|
பிறந்ததிகதி | நவம்பர் 8, 1910 |
இறப்பு | ஏப்ரல் 10, 1964 |
பெற்றோர் | பக்கிரியாப் பிள்ளை கண்ணம்பாள் |
துணைவர் | ஜெயலட்சுமி |
வாழ்க்கைக் குறிப்பு
இராகவப்பிள்ளை தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள நாச்சியார்கோயிலில் பாரம்பரிய இசைவேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த நடன ஆசிரியர் பக்கிரியாப் பிள்ளை, கண்ணம்பாள் ஆகியோருக்கு மகனாக நவம்பர் 8, 1910ல் பிறந்தார். இவரது சகோதரர்கள் நடன ஆசிரியர் இராமச்சந்திரம் பிள்ளை மற்றும் இசைக்கலைஞர்கள் ரெங்கசாமி பிள்ளை, நடராஜப் பிள்ளை ஆகியோர். இவருக்கு காமு, அம்மணி, வஞ்சுவள்ளி என்ற சகோதரிகளும் உண்டு.
இராகவப்பிள்ளை திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளையிடம் இரண்டு ஆண்டுகளும், பின்பு நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் குருகுல வாசமாக பதினோரு ஆண்டுகளும் தவில் பயின்றார். இவரது திறமையையும், பண்பையும் கண்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தன் மகள் ஜெயலட்சுமியை மே 7, 1935ல் இவருக்குத் திருமணம் செய்து வைத்தார்.
இராகவப்பிள்ளைக்கு கமலா, கோமதி, வேம்பு, பிரேமா, சித்திரா என்ற ஐந்து மகள்களும், வாசுதேவன் என்ற மகனும் பிறந்தார்கள். இவர் இரத்த அழுத்த நோயால் ஏப்ரல் 10, 1964 இயற்கை எய்தினார்.
கலை வாழ்க்கை
உடன் வாசித்த நாதசுரக் கலைஞர்கள்
- கீரனூர் சகோதரர்கள்
- செம்பனார்கோவில் கோவிந்தசாமி பிள்ளை சகோதரர்கள்
- திருவீழிமிழலை சகோதரர்கள்
- டி. என். ராஜரத்தினம் பிள்ளை
- திருவெண்காடு சுப்பரமணியபிள்ளை
- பெரம்பலூர் அங்கப்பாப்பிள்ளை
- அய்யம்பேட்டை வேணுகோபால்பிள்ளை
- இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணு சகோதரர்கள்
- திருவாடுதுறை கக்காயி என்கிற நடராஜசுந்தரம் பிள்ளை
- குளிக்கரை பிச்சையப்பா
- குழிக்கரை காளிதாஸ் பிள்ளை
- திருச்சேறை சிவசுப்பிரமணியப்பிள்ளை
- திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை
- நாச்சியார்கோயில் என்.கே.ராஜம், என்.கே.துரைக்கண்ணுப்பிள்ளை
- திருவாரூர் ராஜரத்தினம்பிள்ளை
- திருவிடைமருதூர் பி.எஸ். வீராசாமிபிள்ளை
- வேதாரண்யம் வேதமூர்த்திபிள்ளை
- நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்
- காருக்குறிச்சி அருணாசலம்
பயிற்றுவித்த மாணவர்கள்
- வலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை
- யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை
- பெரும்பள்ளம் வெங்கடேசபிள்ளை
- திருவிழந்தூர் வேணுகோபாலப்பிள்ளை
- இலுப்பூர் ஆர். சி. நல்லகுமார்
- அன்னாவரவு பஸ்வய்யா
- வெல்டூரி நாராயணி
- புஸலூரி குருவய்யா
- தஞ்சாவூர் டி. ஆர். கோவிந்தராஜன்
பெற்ற பட்டங்கள்
- இலங்கை வல்வெட்டித்துறையில் அகில இந்திய தவில் சக்கரவர்த்தி
- 16-01-1943-ல் பாலநந்தீஸ்வர பூஷண
- 04-04-1949-ல் நாதலாயபிரம்மதவில் அரசு
சிறப்புகள்
- டி. என். ராஜரத்தினம் பிள்ளை இவரது தேதி கிடைக்கவில்லை என்றால் தன் நிகழ்ச்சியை ஒத்திவைப்பார்.
- திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணாத்துரைக்கு தந்த வரவேற்பு நிகழ்ச்சில் திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை நாதசுரமும் இராகவப்பிள்ளை தவிலும் வாசித்தனர். மேடை ஏறிய அண்ணா, ”மிக அருமையான நாதசுரத் தவில் நிகழ்ச்சியை ஊர்வலத்தில் வைத்துவிட்டீர்கள், நான் கேட்டு ரசிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே" என்று வருத்தப்பட்டார்.
- சிவாஜி கணேசன் திருமணத்தில் காருக்குறிச்சி பி. அருணாசலம் நாதசுரமும் இராகவப்பிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல், கும்பகோணம் தங்கவேல்பிள்ளை, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை ஆகியோர் நாதசுரமும் வாசித்தார்கள். தனி ஆவர்த்தனம் 2 மணி நேரம் வாசிக்கப்பட்டது. ரசிகர்கள் இராகவப்பிள்ளையை மீண்டும் வாசிக்கச்சொல் ”ஓன்ஸமோர் ஓன்ஸமோர்” என்றனர். பிள்ளை 3/4 மணிநேரம் வாசித்தார். சிவாஜி கணேசன் ரூபாய் நோட்டுகளை கூடையில் எடுத்து வந்து இராகவப்பிள்ளைக்கு கனகாபிஷேகம் செய்தார்.
- இவரது தவில் வாசிப்பு பற்றி சுதேசமித்திரன் நாளிதழ் இவர் நாதசுரத்திற்கு லாகவமாக வாசிப்பதால் இவர் தன் பெயரை ”ஸ்ரீஇலாகவப் பிள்ளை” என்று பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று பாராட்டி செய்தி வெளியிட்டது.
- ஜி. கே. மூப்பனார் வார இதழ் ஓன்றில் ”நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது என் தந்தையார் எங்கள் ஊர் கோவிலில் சாமி புறப்பாடு நடத்துவார்கள், அதற்கு திருவீழிமிழழை சுப்பரமணிய பிள்ளையும், நடராஜசுந்தரம் பிள்ளையும் நாதசுரம் வாசிக்க நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நாச்சியார்கோயில் இராகவப்பிள்ளையும் தவில் வாசிப்பார்கள் நான் இவர்கள் வாசிப்பதைக் கேட்டுக்கொண்டு எல்லா வீதிகளிலும் நடந்தே வருவேன், அது முதல் எனக்கு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் ஏற்பட்டது.” என்று கூறியுள்ளார்.
நூற்றாண்டு விழா
இராகவப்பிள்ளையின் நூற்றாண்டு விழா நவம்பர் 11, 2011 அன்று கும்பகோணத்தில் உள்ள எஸ். ஈ. டி. மஹாலில் காலை 06.30மணிக்குத் தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெற்றது. முன்னணி தவில் மற்றும் நாதசுவரக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் மாண்டலின் யு. ஸ்ரீநிவாஸ், நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரின் கச்சேரிகளும் நடைபெற்றன. தமிழக அமைச்சர் கோ.சி.மணி நூற்றாண்டு விழா மலரை வெளியிட ஜி. ரெங்கசாமி மூப்பனார் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சிகளை நூற்றாண்டு விழாச் செயலாளர் ஆர். இளங்கோவன் நடத்தினார்.