நல்வெள்ளியார்

நல்வெள்ளியார் என்றும் நல்லொளியார் என்றும் அழைக்கப்பட்ட இவர் மதுரையைச் சேர்ந்த பெண்பாற் புலவர். இவர் பாடியதாக நற்றிணையில் இரண்டு பாடல்கள் (பாடல்: 7, 47), குறுந்தொகையில் ஒரு பாடல் (பாடல்:365), அகநானூற்றில் ஒரு பாடல் (பாடல்: 32) ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.

அகநானூறு 32 பாடல் தரும் செய்தி

  • அண்கணாளன் = நெருக்கமான கண்ணாளன்

அவன் புரவலன் போல வந்தான். இரவலன் போலப் பணிவோடு பேசினான். 'சூர மகளிர் போல நின்று என்னை வருத்துகின்றாயே! யார் ஐயோய்?' என்றான். என்னை என் முதுகுப் பக்கம் தழுவி நான் கிளி ஓட்டும் தட்டையைத் தானும் பிடித்துக்கொண்டு புடைத்தான்.

அதுமுதல் நான் மழையில் கரையும் மண் போல ஆனேன். என் தோள் அவனுக்குத்தான்.

தலைவி தோழியிடம் சொல்கிறாள். 'இன்னும் ஏன் உன்னிடம் வந்து கெஞ்சவேண்டும்?'

குறுந்தொகை 365 பாடல் தரும் செய்தி

தோழி தலைவனிடம் சொல்கிறாள்.

நீ பலாப்பழம் மிக்க நாட்டுக்குத் தலைவன். உன் நாட்டில் மட்டுந்தான் அருவி முழக்கத்துடன் நீரைக் கொட்டுகிறது என்று நினைக்கிறாயா? உன் காதலியின் கண்ணுந்தான்.

நற்றிணை 7 பாடல் தரும் செய்தி

தலைவன் பொருள் தேடச் சென்றுள்ளான். அவன் வரவை எண்ணி ஏங்கும் தலைவியைத் தோழி தேற்றுகிறாள்.

வயலில் வெண்ணெல் மேய்ந்த யானை காட்டில் துஞ்சும். அந்தக் காட்டிலும் மழை பெய்ய வானம் மின்னுவதைப் பார்.

மழைகாலத்தில் அவர் திரும்பிவிடுவார்.

நற்றிணை 47 பாடல் தரும் செய்தி

உழுவை தன் களிற்றை அட்டுக் கொன்றது என்று பெண்யானை தன் கன்றைத் தழுவிய வண்ணம் நெய்தல் இலை போன்ற தன் காதை ஆட்டிக்கொண்டு வருத்தத்தோடு சுழன்றுவரும் நாடன் அந்தத் தலைவன்.

வேலன் கழங்கு போட்டு வீடு கட்டிக் காட்டி இவளுக்கு வெறி என்று தணிக்க முயன்றால் அம் முயற்சி பயன்படுமா? - தோழி தலைமகளுக்குச் சொல்வது போல, காத்திருக்கும் அவன் கேட்குபடி சொல்கிறாள்.

"https://tamilar.wiki/index.php?title=நல்வெள்ளியார்&oldid=12540" இருந்து மீள்விக்கப்பட்டது