நரிவெரூஉத் தலையார்

நரி வெரூஉத் தலையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல்கள் 4 சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை குறுந்தொகை 5, 236, புறநானூறு 5[1], 195 ஆகியவை.

பெயர்க் காரணம்

பிணம் தின்னும் நரியே கண்டால் வெருவி(அஞ்சி) ஓடும் வண்ணம் இப் புலவரின் தலை இருந்ததாம். சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப் பெருஞ்சேரல் என்னும் அரசனைக் கண்டவுடன் இந்த வெறுக்கத்தக்க தலையின் தோற்றம் மாறிவிடும் என்று அவருக்குக் கூறியிருந்தனராம். அவ்வாறே இந்தப் புலவர் அந்தச் சேர அரசனைக் கண்டவுடன் வெறுக்கத் தக்க அவரது தலைத்தோற்றம் மாறி நல்லுடம்பு வரப்பெற்றாராம். இவ்வாறு புறநானூறு ஐந்தாம் பாடலுக்கு நூலைத் தொகுத்தவர் தந்துள்ள கொளுக் குறிப்பு தெரிவிக்கிறது.

இவர் தமது பாடலில் சொல்லும் செய்திகள்

புறநானூறு 5

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை

தமிழ்நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் சேர மன்னர்கள் சிறப்புற்றிருந்தனர். அவர்களில் முதலாவதாக மேலை மலைத்தொடரைத் தாண்டிக் கிழக்கு நோக்கி வந்து கொங்கு நாட்டுக் கருவூரில் சேர மன்னர்களின் ஆட்சியை நிறுவியவன் ஆதலால் இந்தச் சேரமான் ஒள்வாள் கோப் பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் 'கருவூர் ஏறிய' என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது. இவனைப் புலவர் 'கானக நாடன்' என்று குறிப்பிடுகிறார்.

பொருண்மொழிக் காஞ்சி என்னும் அறநெறி

  • அரசன் தன் நாட்டைத் தான் பெற்ற பிள்ளையைப் போலப் பேணவேண்டும்.
  • அன்பும் அருளும் தனிமனிதனிடம் காட்டக்கூடாது.

புறநானூறு 195

அறநெறி

  • அறநெறியைப் பொருள் மொழிக் காஞ்சி என்றனர்.

இவர் கூறும் அறநெறி மிகவும் உயர்ந்தது. எமனுக்குப் பயப்படுவதில் பயனில்லை. உடலில் தெம்பு இருக்கும்போதே அறம் செய்ய வேண்டும்.

நல்லது செய்தல் ஆற்றீர்; ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்! அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே

உவமை

அகவையில் மூத்த சான்றோரின் நரைமுடி கயல்மீனின் முள் போல இருக்குமாம்.

குறுந்தொகை 5

காமம் என்றார் என்ன

அவர் பிரிந்தார் என்று என் கண் தூங்காமல் இருக்கிறதே அதுதான் காம நோயோ என்கிறாள் தலைவி.

குறுந்தொகை 236

குவிமணல் மேட்டை உரசிக்கொண்டிருக்கும் புன்னை மரத்தில் நாரை அமர்ந்திருக்கும் நாட்டை உடையவனே! நீ என்னைப் பிரியும் நாள் வந்தால் நீ என்னிடம் உண்ட நலனைத் தந்துவிட்டுச் செல்க என்று தலைவி சொல்வதாகத் தோழி சொல்கிறாள்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நரிவெரூஉத்_தலையார்&oldid=11938" இருந்து மீள்விக்கப்பட்டது