நன்னாகனார், புலவர்
நன்னாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் 5 பாடல்கள் பாடியுள்ளார். ஓய்மான் நல்லியக்கோடன், ஓய்மான் வில்லியாதன், கரும்பனூர் கிழான் ஆகியோர் அந்தப் பாடல்களில் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளனர்.
ஓய்மான் நல்லியக் கோடன்
- புறநானூறு 176[1]
ஓய்மான் நாட்டுத் தலைநகர் இலங்கை. இதனை நன்மாவிலங்கை என்று சிறுபாணாற்றுப்படை நூல் குறிப்பிடுவது போல, இப்பாடல் பெருமாவிலங்கை என்று குறிப்பிடுகிறது.
பாரியின் பறம்பு மலையிலுள்ள பனிச்சுனை நீரை ஒருமுறை உண்டவர் என்றென்றும் அதனை நினைத்துக்கொண்டிருப்பது போல நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்ற நான் அவனை மறக்கமுடியாமல் எண்ணி எண்ணி மகிழ்ந்துகொண்டிருக்கிறேன் - என்கிறார் நன்னாகனார்.
பாரி பறம்பில் பனிச்சுனை
பாரி கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவனது நாடு பறம்பு மலை. அந்த மலையில் பனி போன்ற நீர் நிறைந்த சுனை ஒன்று இருந்ததாம். அந்தச் சுனைநீர் மிகவும் இனிமையானதாம்.
ஓரை விளையாட்டு
ஓரை விளையாடும் மகளிர் பாவை செய்யச் சேற்றைக் கிண்டுவர். அப்போது அவர்கள் ஆம்பல் கிழங்கையும், ஆமை முட்டையையும் பெற்று இன்புறுவர்.
ஓய்மான் வில்லியாதன்
- புறநானூறு 376[1]
ஓய்மான் நாட்டு அரசன் வில்லியாதன். சிறந்த கொடைவள்ளல்களில் இவனும் ஒருவன். புலவர் மாலை வேளையில் இவனது அரண்மனை முன் நின்றாராம். நிலா ஒளி வீசிற்றாம். இமைத்தவர் விழிப்பது போல வில்லியாதன் அங்கு வந்தானாம். நள்ளிரவிலேயே புலவரின் கிழிந்த ஆடைகளை நீக்கிப் புத்தாடை உடுத்தச் செய்தானாம். பருகத் தேறல் தந்தானாம். சுட்ட கறிகள் தந்தானாம். நரக வேதனையில் நலிந்த புலவரது வறுமையைப் போக்கினானாம். அன்று முதல் புலவர் பிற வள்ளல்களை நாடிச் செல்லும் நிலையே இல்லாமல் போயிற்றாம்.
- புறநானூறு 379[1]
வில்லியாதன் 'இலங்கை கிழவோன்' என்று போற்றப்படுகிறான். இவனது வள்ளண்மை பற்றிக் கிணை முழக்கும் பாணர் கூறக் கேட்டுப் புலவர் அவனிடம் சென்றாராம். தாய்பால் உண்ணாத குழவி போல் சென்றாராம். அவனது திருமனையில் வந்தவருக்கெல்லாம் வழங்கச் சமைக்கும் புகையின் மணம் மழைமேகம் போலத் தெருவெல்லாம் மூடிக்கொண்டிருந்ததாம். புலவரும் உண்டு மகிழ்ந்தாராம்.
கரும்பனூர் கிழான்
- புறநானூறு 381
வேங்கட நாட்டு மன்னனாகக் கரும்பனூரில் இருந்துகொண்டு அரசாண்ட மன்னவன் கரும்பனூர் கிழான்.
இவனைப் புலவர் அறத்துறை அம்பி என்று போற்றுகிறார். மக்களின் வாழ்க்கை என்னும் பேராற்றில் கொடை வழங்கும் அறத்தின் படித்துறையாக விளங்கியவன் இந்த மன்னன். ஆற்றைக் கடக்க உதவும் அம்பி என்னும் தெப்பம் உறுவர்களையும் (பெரியவர்களையும்) சிறுவர்களையும் அக்கரைக்கும் இக்கரைக்கும் கொண்டுசெல்லும். அதுபோல இவன் வாழ்க்கையின் குறிக்கோளை அடைய உதவி வந்தான். ஊனும் ஊணும் (கறியும் சோறும்) தின்று சலிக்கும்போது பால்சோறு தருவானாம். பிரியும்போது பிறரிடம் சென்று கையேந்தாவண்ணம் கொடை நல்குவானாம்.
- புறநானூறு 384
இந்தப் பாடலில் அடிகள் சிதைந்துள்ளன.
முயல் தாவும்போது இரும்பைப் பூ கொட்டுமாம். விழா இல்லாவிட்டாலும் உழவரின் மண்பானையில் சோறு மலர்ந்திருக்குமாம். புலவர் போதும் போதும் என்று தடுத்தாலும் கரும்பனூர் கிழான் கொடை வழங்குவதை நிறுத்தமாட்டானாம். இவனது கொடைப்புகழைக் கண்டு உணவை நல்கும் மண்ணே நாணிற்றாம். இவன் விருந்தினர்க்கு ஊற்றும் நெய்யைக் கண்டு நீரே நாணம் கொண்டதாம். மழை வழங்கும் வெள்ளி எங்கு போனால் என்ன? கரும்பனூர் கிழானின் கொடை தடையின்றி வழங்கப்படுமாம்.
அருஞ்சொல்
இவர் பல அரிய அருஞ்சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.
- உறுவர், சிறுவர் = பெரியவர் சிறியவர்
- ஊனும் ஊணும் = கறியும் சோறும்
- சேயை இவணை = தொலைவிலுள்ளாய் இங்குள்ளாய்
- பூங்கள் (உழவர் மண்டையில்) = பூத்திருக்கும் சோறு
- மென்பால், வன்பால் = ஆற்றுப்படுகை, வானம் பார்த்த பூமி
பழந்தமிழ்
விழா இல்லாவிட்டாலும் உழவர் மண்டையில்(உழவர் உண்கலத்தில்) 'பூங்கள் வைகுந்து' என்னும்போது 'உம்' என்னும் இடைச்சொல் 'உந்து' வினைமுற்று இடைச்சொல்லாக வழங்கப்பட்டுவந்த பழந்தமிழைக் காணமுடிகிறது.
சொல் விளக்கம்
நறவு - கனற்றக் கொண்டது. கன்றறல் = மண்ணில் புதைத்துச் சூடேற்றுதல்.