நக்கண்ணையார்
நக்கண்ணையார் பெண்பாற்புலவர் ஆவார். ’பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணை’ எனவும் கூறப்படுவார்.[1]
உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி ஆவான். அவன் தந்தையோடு பகைத்துக் கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வருந்தியிருந்தான். அந்நிலையிலும் ஆமூர் மல்லன் என்பானைப் போரில் வெற்றி கொள்கின்றான். அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய புறநானூற்று 83[2], 84[3], 85[4] ஆம் பாடல்கள் மூலம் அறியலாம். அகநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் இரண்டும் மொத்தம் ஆறு பாடல்கள் இவர் பாடியவை.
இவரது பாடல்களில் இவர் சொல்லும் செய்திகள்
புறத்திணைப் பாடல்கள்
புறநானூற்றில் காணப்படும் இவரது 3 பாடல்களும் பழிச்சுதல் என்னும் துறையைச் சேர்ந்தவை.
- பழிச்சுதல் = புகழ்தல்
போர்வைக் கோப்பெருநற்கிள்ளிமீது இவர் கொண்டிருந்த காதலை வெளிப்படுத்தும் பாடல்கள் இவர் மட்டும் அவன்மீது கொண்டிருந்த ஒருதலைக் காதல் ஆதலால் இவரது இந்தப் பாடல்கள் அகத்திணைப் பாடல்களில் சேர்க்கப்படாமல் புறத்திணைப் பாடல்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
புறநானூறு 83-ல்
போர்வைக் கோப்பெருநற்கிள்ளியை மணக்க விரும்பியதால் என் தோள்கள் அவனை எண்ணி எண்ணி என் தோள் மெலிந்தது. அதனால் தோள்வளை கழல்வளை கழல்வதைப் பார்த்துத் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என அஞ்சுகிறேன். பலர் முன்னிலையில் அவனைத் தழுவுவதை என் நாணம் தடுக்கிறது.
ஊரும் அப்படித்தான் உள்ளது. மற்போரில் தோற்ற மல்லன் தன் நாட்டு அரசன் அரசன் என்பதால் அவனைப் புகழ்வதா? வென்ற போர்வைக் கோப்பெருநற்கிள்ளியின் மற்போரின் திறமையைப் பாராட்டுவதா? என்னும் இரு வேறு எண்ணங்களோடு திண்டாடிக்கொண்டுதான் உள்ளது.
புறநானூறு 84-ல்
என் தலைவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி புல்லரிசிச் சோற்றைத் தின்றாலும் போரில் வெல்லும் திறம் பெற்றிருக்கிறான். நான் அவன் போரிடும் ஊருக்கு வெளியே எங்கோ ஓர் ஒதுக்கிடத்தில் பாதுகாப்பாக இருந்தாலும் என் மேனி வாடிப் பொன்னிறம் (பசலை) பூத்து வலிமையற்றுக் கிடக்கிறது.
ஊரில் திருவிழா முடிந்த மறுநாள் உப்பு விற்க வந்த உமணர் வெறுப்புடன் காணப்படுவர். ஊரில் உள்ள மள்ளர்(=உழவர்) எப்போதும்போல மகிழ்வுடன் காணப்படுவர்.
நான் (புலவர் நக்கண்ணையார்) உமணர் நிலையில் இருக்கிறேன். மல்லனும் உமணர் நிலையில் இருக்கிறான். போர்வைக் கோப்பெருநற்கிள்ளியோ மள்ளர் போல் மகிழ்வுடன் இருக்கிறான்.
புறநானூறு 85-ல்
ஆமூர் அரசன் மல்லன். அவனது ஊரில் மற்போர். அவனை எதிர்த்துப் போரிடுபவன் வேற்றூரை, வேற்றுநாட்டைச் சேர்ந்த போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. ஆமூர் மக்களில் சிலர் கிள்ளிக்கு வெற்றி என்கின்றனர். சிலர் வெற்றி இல்லை என்கின்றனர். நான்(புலவர் நக்கண்ணையார்) பனை மரத்தைப் பற்றிக்கொண்டு நின்று நேரில் பார்த்தேன். அவன் வெற்றி பெற்றான்.
அகத்திணைப் பாடல்கள்
அகநானூறு 252-ல்
குளம் காப்போன்
மழை பெய்துகொண்டிருக்கும்போது ஊரின் பெருங்குள ஏரிக் கரையைக் காவல் காப்பவன் போல யாய் தூங்காமல் என்னைப் பாதுகாக்கிறாள்.
தலைவி நிலை
புலிக்கு அஞ்சாமல் திரியும் யானையின் தந்தத்தைப் புய்த்துச் சிலர் எடுக்கும் வழியில் தலைவன் என்னை அடைய வருகிறான். அவன் வரும் வழியை எண்ணித் தலைவி துன்புறுகிறாள். வரவேண்டாம் என்று சொல்லிவிட்டுத் தனியே இருக்கவும் அவளால் முடியவில்லை. என்ன செய்யலாம் என்பதே தலைவியின் கவலை.
நற்றிணை 19-ல்
தலைவன் சிலநாள் வந்து போகிறான். அவன் வாராமல் போனால் தலைவி உயிர் வாழ மாட்டாள். எனவே திருமணம் செய்துகொண்டு தலைவியைக் காப்பாற்ற வேண்டும் என்று தோழி தலைவனுக்கு எடுத்துரைக்கிறாள்.
உவமை
- தடவு என்னும் மரம் இறால் மீனின் செதில்கள் போல் இருக்குமாம்.
- தாழை மரம் சுறா மீனின் கொம்புகள் போல் இருக்குமாம்.
- தாழம் பூ யானைத் தந்தம் போலப் பூக்குமாம்.
நற்றிணை 87-ல்
- உள்ளூர் மா மரத்து வௌவால் அழிசி அரசன் காட்டு நெல்லிக்காயின் புளிப்புச் சுவையை உண்ண ஏங்கிக் கிடப்பது போலவும்,
- அழிசி நாட்டு புன்னை மரத் துறையில் மேயும் இப்பியால் பரதவர் மகிழ்வது போலவும்,
கனாக் கண்ட தலைவி அவற்றைத் தன் தோழியிடம் சொல்கிறாள்.