நகரசூரக்குடி தேசிகநாதர் கோயில்

நகரசூரக்குடி தேசிகநாதர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் நகரசூரக்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இத்தலம் முன்னர் தேசிகநாதபுரம் என்றழைக்கப்பட்டது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 10°09'11.5"N, 78°45'46.3"E (அதாவது, 10.153200°N, 78.762863°E) ஆகும்.

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக தேசிகநாதர் உள்ளார். இறைவி ஆவுடைநாயகி ஆவார். கோயிலின் தல மரம் மாமரம் ஆகும். கோயிலில் தல தீர்த்தமாக பைரவர் தீர்த்தம் உள்ளது. ஆனி மற்றும் ஆடியில் பத்து நாள்கள் விழா நடைபெறுகிறது. பைரவர் ஜென்மாஷ்டமி, ஆனி உத்திர விழா, பங்குனியில் ஆருத்ரா தரிசனம், அறுபத்துமூவர் குரு பூசை உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன.[1]

அமைப்பு

காசி விசுவநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, சரசுவதி, ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், நாவுக்கரசர் உள்ளிட்ட அறுபத்து மூவர், காவல் தெய்வமான முனீசுவரர் ஆகியோர் உள்ளனர். கையில் சூலத்துடன் பொதுவாகக் காணப்படுகின்ற பைரவர் இங்கு கதாயுதத்துடன் உள்ளார். நவக்கிரக மண்டபம் கோயிலில் உள்ளது. சிவன் கோயில்களில் விழாக்களின்போது இறைவன், இறைவி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் ஆகியோர் பஞ்ச மூர்த்திகளாக உலா செல்வர். ஆனால் இக்கோயிலில் இவர்களுக்குப் பதிலாக பைரவர் செல்கிறார். கோஷ்டத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் உள்ளார். நடராஜர் தெற்கு நோக்கிய நிலையில் காணப்படுகிறார். பார்வதியின் தந்தையான தட்சம் யாகம் நடத்தியபோது சிவனை முறையாக அழைக்காததால் அவர் அவன் மீது கோபம் கொண்டு, வீரபத்திரரை அனுப்பி யாகத்தை நிறுத்தக் கூறினார். வீரபத்திரர் யாகத்தை நிறுத்தியதோடன்றி அதில் கலந்துகொண்டவர்களையும் தண்டித்தார். சிவனின் கோபத்திற்கு ஆளான சூரியன் இங்கு வந்து மூலவரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.[1]

மேற்கோள்கள்