தொல்காப்பியம் தொகைமரபுச் செய்திகள்
தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் ஐந்தாவது இயல் தொகைமரபு. இந்த இயலில் 30 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
- ஒருவரிடம் கொஞ்சம் ஐந்து உரூபாய் தாள்களும், கொஞ்சம் பத்து உரூபாய் தாள்களும், பிறவும் இருந்தன. அவை அவரிடம் உள்ள தொகை. இவ்வாறு பல்வேறு வகையான சொற்கள் தொகையாவதைக் கூறுவது தொகைமரபு.
- பகுத்துப் பார்ப்பது போல் தொகுத்துப் பார்ப்பதும் ஒன்று. தொகுத்துப் பார்ப்பது தொகை.
- காய்கனி என்னும்போது உம்மை தொகைபட்டுக் கிடக்கிறது. செம்மொழி என்னும்போது பண்பு தொகைபட்டுக் கிடக்கிறது. அறம் செய் என்னும்போது வேற்றுமை தொகைபட்டுக் கிடக்கிறது. செய்பொருள் என்னும்போது முக்கால வினை தொகைபட்டுக் கிடக்கிறது. கடல்நீலம் என்னும்போது உவமை தொகைபட்டுக் கிடக்கிறது. தேன்மொழி வந்தாள் என்னும்போது தேனோ மொழியோ அல்லாத பெண் தொகைபட்டுக் கிடக்கிறாள். இப்படி இரண்டு சொல்லில் தொகைப்பாடு நிகழ்வது தொகை.
- மரபு என்பது முன்னோர் வழி நம்மிடம் மரத்துப்போய் இருப்பது.
செய்தியின் இறுதியில் தொல்காப்பியம் தொகைமரபு நூற்பா வரிசையெண் தரப்பட்டுள்ளது.
வருமொழி நோக்கு
- க, ச, த, ப வரும்போது இன-எழுத்து ங, ஞ, ந, ம ஒற்றாக மாறுவது உண்டு. -1
- விளங்கோடு, விஞ்செதில், விளந்தோல், விளம்பூ (விள = விளாமரம்)
- ஞ, ந, ம, ய, வ வரும்போது வேற்றுமைப்-பொருளிலும், அல்வழிப்-பொருளிலும் இயல்பாகும். -2
- விள ஞான்றது, (=விளாம்பழம் தொங்கியது), விள நீண்டது (=விளாமரம் நீண்டது), விள மாண்டது (=சிறப்புற்றது), விள யாது, விள வலிது, விள ஆடிற்று
- தாழ் ஞான்றது (தாழ்=தாழை), தாழ் நீண்டது, தாழ் மாண்டது, தாழ் யாது, தாழ் வலிது, தாழ் ஆடிற்று
- ஞ, ந, ம, ய, வ வரும்போது (வேற்றுமைப் பொருளில்) அந்த எழுத்து கூடுதலும் உண்டு. -3
- பூஞெரி (ஞெரி=கொத்து) - பூஞ்ஞெரி, பூநுனி - பூந்நுனி, பூமுரி - பூம்முரி,
- கதிர்ஞெரி - கதிர்ஞ்ஞெரி, கதிர்நுனி - கதிர்ந்நுனி, கதிர்முரி - கதிர்ம்முரி
ண ன ல ள
- ண, ன புள்ளி முன்னர் யா, ஞா வரும்போது வினைச்சொல் சேர்வது போல் இயல்பாகும். -4
- மண் யாத்த (யா=கட்டு கூடையில் மண் கட்டிவிடல்), மண் ஞாத்த (=மண் பிணைதல்)
- பொன் யாத்த, பொன் ஞாத்த
- ண, ன புள்ளி முன்னர் எந்த எழுத்து வந்தாலும் அல்வழிப்-புணர்ச்சியில் இயல்பாகும். -5
- மண் கடிது, மண் சிறிது, மண் தீது, மண் பெரிது
- பொன் கடிது, பொன் சிறிது, பொன் தீது, பொன் பெரிது
- ண, ன புள்ளி முன்னர் வேற்றுமைப்-புணர்ச்சியிலும் வல்லினம் அல்லாத எழுத்து வரின் இயல்பாகும். -6
- மண் ஞாட்சி (மண்ணடுக்கு), மண் நீட்சி (தனி மண்ணின் தடிமம்)
- பொன் ஞாட்சி (பொன் திணிவு), பொன் நீட்சி (பொற்கம்பியின் நீளம்)
- ல, ன புள்ளி முன்னர் த, ந வந்தால் ற, ன ஆகும். -7
- கஃறீது (கல் தீது), கன்னன்று (கல் நன்று)
- பொன்றீது (பொன் தீது), பொன்னன்று (பொன் நன்று)
- ண, ள புள்ளி முன்னர் த, ந வந்தால் ட, ண ஆகும் -8
- மண்டீது (மண் தீது), மண்ணன்று (மண் நன்று)
- முஃடீது (முள் தீது), முண்ணன்று (முள் நன்று)
முன்னிலைக் கிளவி
- முன்னிலைக்-கிளவி உயிரீறு ஆயினும், மெய்யீறு ஆயினும் அதன் முன் வரும் எல்லா மொழியும் இயல்பாகும். -9
- எறி கொற்றா, கொணா கொற்றா
- எறி சாத்தா, கொணா சாத்தா
- எறி தேவா, கொணா தேவா
- எறி பூதா, கொணா பூதா
- ஔ-ல் முடியும் கௌ, வௌ ஞ ந ம வ-மெய்யில் முடியும் சொல், குற்றியலுகரத்தில் முடியும் சொல் ஆகியவை எல்லா வழியிலும் இயல்பாகும். -10
- கௌவு கொற்றா, கௌவுக் கொற்றா, வௌவு கொற்றா, வௌவுக் கொற்றா
- பொருநு கொற்றா, பொருநுக் கொற்றா, திருமு கொற்றா, திருமுக் கொற்றா, தெவ்வு கொற்றா, தெவ்வுக் கொற்றா
- பொருநு=போரிடு, திருமு=திரும்பு, தெவ்வு=பகைவனை அழி
நிலைமொழி - திணைநோக்கு
- உயர்திணைப்-பெயர் நிலைமொழி ஆனால் எல்லா வழியும் இயல்பாகும். 11
- நம்பி குறியன், நம்பி சிறியன், நம்பிதீயன், நம்பி பெரியன், நம்பி ஞான்றான், நம்பி நீண்டான், நம்பி மாண்டான், நம்பி யாவன், நம்பி வலியன், நம்பி அடைந்தான், நம்பி ஔவியத்தான் (=பொறாமைப் பட்டான்)
- நம்பி கை, நம்பி செவி, நம்பி தலை, நம்பி புறம், நம்பி ஞாற்சி (=வளைந்து கொடுத்தல்), நம்பி நீட்சி, நம்பி மாட்சி (=சிறப்பு), நம்பி யாப்பு (=நட்பு), நம்பி வலிமை, நம்பி அடைபு, நம்பி ஔவியம்
- குமர கோட்டம் (குமரன் கோட்டம்), குமரக் கோட்டம் (குமரத்தன்மை உடைய கோட்டம்)
- அவற்றில் இகரத்தில் முடியும் சொல் திரிதலும் உண்டு. -12
- எட்டிப்பூ. எட்டிப்புரவு, காவிதிப்பூ, காவிதிப்புரவு
- (எட்டி = வணிகருள் சிறந்தவருக்கு வழங்கப்பட்ட விருது. காவிதி = உழவரில் சிறந்தவருக்கு வழங்கப்பட விருது)
- (பூ - 'பத்மசிரீ' போன்றது. புரவு = இறையிலியாக, மானியமாக வழங்கப்பட்ட நிலம்)
- அஃறிணை விரவுப்பெயரிலும் இயல்பு உண்டு. -13
- சாத்தன் குறியன், சாத்தன் கை, (கணந்தோறும் ஒட்டிக்கொள்க)
- (சாத்தன் என்பது சாத்தன் என்னும் பெயர் கொண்ட ஒருவனை உணர்த்தும்போது உயர்திணை. சாத்தன் என்பது எருதை உணர்த்தும்போது அஃறிணை)
உறழ்பு
- தம்மின் ஆகிய தொழிற்சொல் முன்வரின் உயிரீறும் மெய்யீறும் மெய்மையாகலும் உறழத் தோன்றலும் உண்டு. -14
- நாய்கோட்பட்டான், புலிகோட்பட்டான் - இயல்பு
- சூர்கோட்பட்டான், சூர்க்கோட்பட்டான், வளிகோட்பட்டான், வளிக்கோட்பட்டான் - உறழ்பு
இரண்டாம் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமைத்தொகை திரியுமிடங்கள் உண்டு. -15
- விளக்குறைத்தான் - ங் ↔ க் - மொல்லெழுத்து மிகுவழி வல்லெழுத்து மிக்கது
- மரங்குறைத்தான் - ங் ↔ க் - வல்லெழுத்து மிகுவழி மெல்லெழுத்து மிக்கது
- தாய்க்கொலை - இயல்பு ஆகவேண்டிய இடத்தில் மிக்கது
- பலாக்குறைத்தான் - பலாஅக்குறைத்தான் என உயிர்மிக வருவழி உயிர் கெட்டது
- வண்டு கொணர்ந்தான் - சாரியை உள்வழிச் சாரியை கெட்டது
- வண்டினைக் கொணர்ந்தான் - சாரியை உள்வழித் தன்னுருபு நிலைத்தது
- புளி குறைத்தான், புளிக் குறைத்தான், பூல் குறைத்தான், பூற் குறைத்தான் - சாரியை இயற்கை உறழத் தோன்றின
- நம்பியைக் கொணர்ந்தான் - உயர்திணை மருங்கின் ஒழியாது வந்தது
- கொற்றனைக் கொணர்ந்தான் - விரவுப் பெயர்க்கு அவ்வியல் நிலவியது
- மண் கொணர்ந்தான் - மெய்பிறிது ஆகுமிடத்தில் இயற்கையாய் வந்தது
இ, ஐ
- இ ஐ இறுதி வல்லினம் வரும்போது 1.இயல்பு, 2.வல்லெழுத்து மிகுதல், 3.உறழ்தல் என்னும் 3 நிலைகளையும் பெறும்.. -16
- பருத்தி குறிது, பருத்தி சிறிது, பருத்தி தீது, பருத்தி பெரிது - இயல்பு
- அரை குறிது, அரை சிறிது, அரை தீது, அரை பெரிது (அரை என்னும் மரம்) - இயல்பு
- அலிக்கொற்றன், புலிக்கொற்றன் - மிகல்
- கிளி குறிது ↔ கிளிக் குறிது, தினை குறிது ↔ தினைக் குறிது - என உறழ்ந்தன
- அதோளி, ஆண்டை, எதோளி, யாண்டை போன்றவை இயல்பும் உறழ்வும் கொள்ளும். -17
- அதோளிக் கொண்டான், இதோளிக் கொண்டான், உதோளிக் கொண்டான், எதோளிக் கொண்டான் - மிகல்
- அதோளிச் சென்றான், இதோளிச் சென்றான், உதோளிச் சென்றான், எதோளிச் சென்றான் - மிகல்
- அதோளித் தந்தான், இதோளித் தந்தான், உதோளித் தந்தான், எதோளித் தந்தான் - மிகல்
- அதோளிப் போயினான், இதோளிப் போயினான், உதோளிப் போயினான், எதோளிப் போயினான் - மிகல்
- அவ்வழி கொண்டான் (=அவ்வாறு கொண்டான்), அவ்வழிக் கொண்டான் (அவ்விடத்தில் கொண்டான்)- உறழ்தல்
குற்றொற்று
- நெடியதன் முன் ஒற்றுமெய் திரிதல், குறியதன் முன் தன்-உரு இரட்டல் ஆகியவை உயிர் வரின் நெறிவழி நிகழும். -18
- கோறீது (கோல் தீது), கோனன்று (கோல் நன்று) - நெடியதன் முன் ஒற்று கெடுதல்
- மண்ணகல் (மண் அகல்), பொன்னகல் (பொன் அகல்) - குறியதன் முன் ஒற்று இரட்டல்
- அது-உருபும், கு-உருபும் வரும்போது ஒற்று இரட்டாது அகரமொடு நிலையும் -19
- தமது (தம் அது), தமக்கு, நமது, நமக்கு
- நும் என்னும் பெயரும் அது-உருபும், கு-உருபும் வரும்போது ஒற்று இரட்டாது அகரமொடு நிலையும் -20
- நுமக்கு, நுமது
உரிஞ், பொருந்
- உரிஞ் என்னும் நிலைமொழி யா, உயிர் வரும்போது இரட்டாது. -21
- உரிஞ் யானா (யானா என்பது ஒருவன் பெயர்), உரிஞ் அனந்தா, உரிஞ் ஆதா
- பொருந் யானா, பொருந் அனந்தா, பொருந் ஆதா
- (உரிஞ் யானா = யானா! தோல்-படையில் முன்செல்), (பொருந் யானா = யானா! போரிடு)
அளவை, நிறை, எண் - பெயர்
- அளவுப்பெயரோடு அளவுப்பெயர், நிறைப்பெயரோடு நிறைப்பெயர், எண்ணுப்பெயரோடு எண்ணுப்பெயர் புணரும்போது ஏ என்னும் சாரியை பெறும். -22
- உழக்கே ஆழாக்கு, கலனே தூணி - (முகத்தல்) அளவைப்பெயர்
- தொடியே கஃசு, கொள்ளே ஐயவி - நிறைப்பெயர்
- ஒன்றேகால், காலேகாணி - எண்ணுப்பெயர்
- (தூணி = ஒரு கல நெல்லில் மூன்றில் ஒரு பங்கு)
- (4 கஃசு = 1 தொடி) (காணி = 80-இல் 1 பங்கு)
- அரை என்னும் சொல் வரும்போது ஏ சாரியை வராது. -23
- ஒன்றரை
- குறை என்னும் சொல் வரும்போது வேற்றுமைப் புணர்ச்சியாக அமையும். -24
- கலத்துக்குறை, தொடிக்குறை, காற்குறை (கால் குறைய மூன்று எனல்)
- அவை குற்றியலுகரச் சொற்களாயின் இன் சாரியை பெறும். -25
- உழக்கின் குறை, கழஞ்சின் குறை, ஒன்றின் குறை
- கலம் என்னும் சொல்லுக்கு அத்துச் சாரியை -26
- கலத்துக்குறை
- பனை என்னும் அளவுப்பெயரும், கா என்னும் நிறைப்பெயரும் இன் சாரியை பெறும். -27
- பனையின் குறை (பனை = பனைமர அளவு உயர அளவை), காவின் குறை (கா = தூக்கு என்னும் நிறையளவு)
- அளவு, நிறை ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் ஒன்பது முதலெழுத்துகளைக் கொண்டவை. -28
- 1.க - கலம், 2.ச - சாடி, 3.த - தூதை, 4.ந - நாழி, 5.ப - பானை, 6.ம - மண்டை, 7.வ - வட்டில், 8.அ - அகல், 9.உ - உழக்கு (முகத்தல் அளவை)
- 1.மழஞ்சு, 2.சீரகம், 3.தொடி, 4.நிறை, 5.பலம், 6.மா, 7.வரை, 8.அந்தை, 9.(அ) -
- (இம்மி போன்றவை தொல்காப்பியர் வரையறுத்த ஒன்பதின் மிக்கவை என்பது இளம்பூரணர் கூற்று)
புறனடை
- வழக்கு நோக்கிப் புணர்மொழி-நிலையை உணர்ந்துகொள்ள வேண்டும். -29
- விதிகள் வழக்கு நோக்கிச் சொல்லப்பட்டன. இவற்றைப் போன்று பிற வரின் அவற்றையும் கொள்ளவேண்டும்.
- மருவின் பாத்தி (மருவின் பகுதி)
- யார் என்பது யாவர் என்று வரும்.
- யாது என்பது யாவது என்று வரும். -30