தொல்காப்பியம் உருபியல் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்களாக உள்ளது.
ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் உள்ளன.
முதலாவது எழுத்ததிகாரத்தில் ஆறாவது இயலாக உள்ளது உருபியல். இந்த இயலில் 30 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

பொருளை வேற்றுமைப்படுத்துவது வேற்றுமை உருபு. அது பெயரை வழிமொழிந்து வரும். இயல்பாக இரண்டு சொற்களுக்கு இடையில் வரும். பெயருக்கும் வேற்றுமை உருபுக்கும் இடையில் வருவது சாரியை உருபு. இந்தச் சாரியை உருபு வருவது பற்றி விளக்குவது உருபியல்.

உயிரில் முடியும் சொற்கள்

பெயர்ச்சொல்லோடு வேற்றுமை உருபு சேரும்போது இடையில் சாரியை வரும். அல்லது வராமல் புணரும்

இதனை எல்லாவற்றுக்கும் கொள்க

செய்தியின் இறுதியில் உள்ள எண் இந்த இயலில் அச் செய்தி சொல்லப்பட்டுள்ள நூற்பாவைக் குறிக்கும்
  • அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் 5 எழுத்துக்களில் முடியும் சொற்களுக்கு இன்-சாரியை வரும். -1
(அ) விளவினை, விளவினோடு, விளவிற்கு, விளவினது, விளவின்கண், (ஆ) பலாவினை, பலாவினோடு, -(இ) கடுவினை, கடுவினோடு, -(உ,ஊ) கழூஉவினை, கழூஉவினோடு, -(ஏ)சேவினை, சேவினோடு, -(ஔ) வௌவினை, வௌவினோடு
  • பல்லவைஎன்னும் சொல் வற்றுச்சாரியை பெறும். -2
பல்லவற்றை, பல்லவற்றோடு, (இக்காலத்தில் பலவற்றை, பலவற்றோடு என்கிறோம்)
  • யா என்னும் வினாவும் வற்றுச்சாரியை பெறும். -3
யாவற்றை, யாவற்றோடு
  • அது, இது, உது என்னும் சுட்டுமுதல் உகரச் சொற்கள் அன்-சாரியை பெறும். -4
அதனை, அதனோடு, -இதனை, இதனோடு, -உதனை, உதனோடு
  • அவை என்னும் சொல் வற்றுச்சாரியை பெறும். -5
அவையற்றை, அவையற்றோடு, (இக்காலத்தில் அவற்றை, அவற்றோடு என்கிறோம்)
  • யாவை என்பது வற்றுச்சாரியை பெறும். -6
யாவற்றை, யாவற்றோடு
  • நீ என்னும் சொல் சாரியை பெறாமல் திரியும். -7
நின்னை, நின்னோடு
  • ஓ எழுத்தில் முடியும் சொல் ஒன்-சாரியை பெறும். -8
கோஒனை, கோஒனோடு, (சோவினை, சோவினோடு என்னும்போது சோ-என்பது காவல்-காட்டு அரணைக் குறிக்கும்)
  • அ ஆ எழுத்தில் முடியும் மரப்பெயர் அத்துச்சாரியை பெறும். -9
விளவத்துக்கண், பலாவத்துக்கண்

(குறிப்பு – உயிர்-எழுத்து முடிபுகளுக்கு ஓடு என்றும், மெய்-எழுத்து முடிபுகளுக்கு ஒடு என்றும் மூன்றாம் வேற்றுமை உருபு காட்டப்பட்டுள்ளது. ஏனைய வேற்றுமை உருபுகளோடும் பொருத்திக்கொள்ள வேண்டும்)

மெய்யில் முடியும் சொற்கள்

  • ஞ ந மெய்யில் முடியும் சொற்கள் இன்-சாரியை பெறும். -10
உரிஞினை, உரிஞினொடு, -பொருநினை, பொருநினொடு.
  • வ மெய்யில் முடியும் அவ் என்னும் சுட்டு வகையானது அவை என்பது போல் வந்தாலும் அவ்-இயல்போடு முடியும். -11
அவற்றை, அவற்றொடு, -இவற்றை, இவற்றொடு, -உவற்றை, உவற்றொடு
  • தெவ் எனச் சொல்லில் முடியும் வ் இன்-சாரியை பெறும். -12
தெவ்வினை, தெவ்வினொடு
  • ம் முடிபு அத்துச்சாரியை பெறும். -13
மரத்தை, மரத்தொடு
  • ம் முடிபு இன்-சாரியை பெறும் சொற்களும் உண்டு. -14
உருமினை, உருமினொடு (உரும் = இடிமுழக்கம்)
  • நும் என்பது இயல்பாகும். -15
நும்மை, நும்மொடு
  • தாம், நாம், யாம் என்பன திரிந்து வேற்றுமை உருபு கொள்ளும், -16
தம்மை, தம்மொடு, -நம்மை, நம்மொடு, -எம்மை, எம்மொடு
  • எல்லாம் சொல்லின் முடிபு -17
எல்லாவற்றையும் (எல்லாம்+வற்று+ஐ+உம்), எல்லாவற்றொடும்
  • எல்லாம் சொல்லின் உயர்திணை முடிபு -18
எல்லாநம்மையும், எல்லாநம்மொடும்
  • எல்லார், எல்லீர் சொல்லின் முடிபு -19
எல்லார்நம்மையும், எல்லார்நம்மொடும், -எல்லீர்நும்மையும், எல்லீர்நும்மொடும்
  • தான், யான் சொல்லின் முடிபு -20
தன்னை, தன்னொடு, -என்னை, என்னொடு
  • அழன், புழன் சொல்-முடிபு. -21
அழத்தை (அழன்+அத்து+ஐ), அழத்தொடு, -அழனினை (அழன்+இன்+ஐ), அழனினொடு, -புழத்தை, புழத்தொடு, புழனினை, புழனினொடு
  • ஏழ் என்னும் எண்ணுப்பெயர் அன்-சாரியை பெறும் -22
ஏழனை, ஏழனொடு

குற்றியலுகரம்

  • குற்றியலுகரச் சொல் இன்-சாரியை பெறும். -23
வரகினை, வரகினொடு, -நாகினை, நாகினொடு
  • குற்றியலுகரம் நெடில்-தொடர் ஒற்று இரட்டும் -24
(யாடு) யாட்டை, யாட்டொடு
  • குற்றியலுகரம் நெடில்-தொடர் செயற்கையும் ஆகும் -25
யாட்டினை, யாட்டினொடு
  • குற்றியலுகர எண்ணுப்பெயர் அன்-சாரியை பெறும் -26
ஒன்றனை, ஒன்றனொடு, -இரண்டனை, இரண்டனொடு
  • பத்து சொல்-முடிபு -27
ஒருபானை, ஒருபானொடு, -ஒருபஃதினை, ஒருபஃதினொடு, ஒருபஃதினை, இருபஃதினொடு
  • யாது, அஃது, இஃது, உஃது சொல்-முடிபு -28
யாதனை, யாதனொடு, -அதனை, அதனொடு, -இதனை, இதனொடு, -உதனை, உதனொடு
  • திசைப்பெயர் முன் கண் என்னும் ஏழன் உருபு வரும்போது நேரும் முடிபு -29
வடக்கின்கண், கிழக்கின்கண், தெற்கின்கண், மேற்கின்கண், (இன்-சாரியை வந்தது) –வடக்கண், கிழக்கண், தெற்கண், மேற்கண் (இயல்பு)

புறனடை -30

சொல்லப்படாத ஏனையவை தொல்காப்பியர் காலத்தில் சாரியை பெறுவதில்லை.
(இக்காலத்தில் மண்ணினை, வேயினை, நாரினை, கல்லினை, முள்ளினை, கிளியினை, என்றெல்லாம் வழங்குகிறோம்)
(இவை தொல்காப்பியர் காலத்தில் மண்ணை, வேயை, நாரை, கல்லை, முள்ளை, கிளியை, என்று மட்டுமே வழங்கப்படன என்பது இந்தப் புறனடை நூற்பாவால் தெரியவருகிறது.) மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் இன் சாரியை தொல்காப்பியர் காலத்தில் இடம்பெறவில்லை

இணைப்பு