தொண்டைமான் நல்லூர் சிதம்பரேசுவரர் கோயில்

தொண்டைமான் நல்லூர் சிதம்பரேசுவரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் திருச்சி புதுக்கோட்டை சாலையில் தொண்டைமான் நல்லூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக சிதம்பரேசுவரர் உள்ளார். இறைவி சிவகாமி ஆவார். [1]

அமைப்பு

கோயிலின் முகப்பினை அடுத்து சிறிய மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில் நந்தி, கொடி மரம், பலி பீடம் காணப்படுகின்றன. அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. இக்கோயிலில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் உள்ளனர். புதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர் விவசாயத்தில் கவனம் செலுத்தி பல நற்காரியங்களைச் செய்தார். மக்களின் குறைகளைத் தீர்த்த வண்ணம் அவர் தொடர்ந்து அவ்வாறான பணிகளில் ஈடுபட்டார். ஒரு முறை நகரைச் சுற்றி வந்தபோது குறைகளைக் கேட்டுக்கொண்டே வந்தார். அப்போது சிலர் வணங்குவதற்குக் கடவுள் இல்லை என்றும், குளிப்பதற்குத் தண்ணீர் இல்லை என்றும், இளைப்பாறுவதற்கு வசதி இல்லை என்றும் தம் ஆதங்கத்தைத் தெரிவித்தனர். அவர்கள் அனைவருமே காசியிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தவர்கள் ஆவார். அவர்களின் குறையைக் கேட்ட மன்னர் முதலில் அவர்களுக்கு உணவையும், பின்னர் பொன்னையும் பொருளையும் தந்தார். அவர்களின் குறையை நிவர்த்தி செய்வதாகக் கூறி தமக்காக ராமேஸ்வரத்தில் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டார். உடனே குளம் வெட்டவும், சத்திரம் அமைக்கவும், கோயில் அமைக்கவும் ஆணையிட்டார். அவ்வகையில் இக்கோயில் அமைந்தது. [1]

திருவிழாக்கள்

பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. [1]

மேற்கோள்கள்