துர்வாசபுரம் சுந்தரேசுவரர் கோயில்

துர்வாசபுரம் சுந்தரேசுவரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் துர்வாசபுரம் என்னுமிடத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

திருமயம்-மதுரை சாலையில் திருமயத்திலிருந்து 10 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.[1] இலங்கையில் போர் முடிந்த பின்னர் ராமர் அயோத்திக்குத் திரும்பினார். அவ்வாறு அனைத்து ரிஷிகளும் திரும்பியபோது துர்வாசர் இப்பகுதி வழியாக வந்தார். அங்கு தான் கண்ட சிவலிங்கத்திற்குப் பூசை செய்தார். துர்வாசர் வழிபட்டதால் இவ்வூர் துர்வாசபுரம் என்றழைக்கப்பட்டது. [2]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக சுந்தரேசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி பாகம் பிரியாள் ஆவார். இக்கோயிலில் கால பைரவர் தனி சன்னதியில் இருக்கிறார். பைரவர் சிறப்பாக வழிபடப்படும் நிலையில் 'பைரவர் கோயில்' என்றும் அழைக்கின்றனர்.கால பைரவருக்கு ஆர்த்தி காட்டப்படும் தட்டை பக்தர்களுக்குக் காட்டுவதில்லை. இறைவன் மற்றும் இறைவி சன்னதியில் பிரதாசம் தரப்படுவதில்லை. தல மரம் வில்வம் ஆகும். தல தீர்த்தம் பைரவர் தீர்த்தம் ஆகும்.[2]

அமைப்பு

கோயில் வாயில் வித்தியாசமான அமைப்பில் காணப்படுகிறது. முன் மண்டபத்தில் சனீசுவரன், சூரியன், சந்திரன், சப்த கன்னியர், கருப்பசாமி ஆகியோர் உள்ளனர்.மூலவரின் தேவக்கோட்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியிடம் காணப்படும் முயலகன் இடப்புறம் திரும்பியுள்ள நிலையில் காணப்படுகிறார். [2]

திருவிழாக்கள்

சம்பாசுரன் மற்றும் பத்மாசுரன் என்னும் இரு அரக்கர்களை அழிக்க சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்த கால பைரவர் தோன்றினார். இவர் கார்த்திகை மாதத்தில் சஷ்டி அன்று அசுரர்களை அழித்ததால் சம்பா சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. ஆனித் திருவிழா 10 நாள்கள் [1] பங்குனியில் திரியம்பகாஷ்டமி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்ற விழாக்களாகும். [2]

திறந்திருக்கும் நேரம்

காலசந்தி (காலை 9.30 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.30 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் நான்கு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 முதல் 8.00 வரையிலும் திறந்திருக்கும்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 புதுக்கோட்டைக் கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 2003
  2. 2.0 2.1 2.2 2.3 அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோயில் திருக்கோயில், தினமலர் கோயில்கள்