திருவெக்கா சொன்ன வண்ணம்செய்த பெருமாள் கோயில்
திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில், அல்லது யதோத்காரி பெருமாள் கோயில் (Yathothkari Perumal Temple), காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றான வைணவத் திருத்தலம்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில். | |
---|---|
படிமம்:Yathothkari (9).jpg திருவெக்கா சொன்ன வண்ணம்செய்த பெருமாள் கோயில் | |
புவியியல் ஆள்கூற்று: | 12°49′27″N 79°42′45″E / 12.824056°N 79.712363°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவெக்கா |
பெயர்: | திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில். |
அமைவிடம் | |
ஊர்: | திருவெக்கா |
மாவட்டம்: | காஞ்சிபுரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சொன்ன வண்ணம் செய்த பெருமாள், திரு யதோதகாரி, திருவெக்கனை கிடந்தான். |
உற்சவர்: | திரு யதோதகாரி பெருமாள் |
தாயார்: | கோமளவல்லி நாச்சியார் |
தீர்த்தம்: | பொய்கை |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | பொய்கை ஆழ்வார் (1), பேயாழ்வார் (4), திருமங்கை (6), திருமழிசை (3), நம்மாழ்வார் (1). |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
விமானம்: | வேதாசார விமானம். |
கல்வெட்டுகள்: | உண்டு |
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 103 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°49'26.6"N, 79°42'44.5"E (அதாவது, 12.824056°N, 79.712363°E) ஆகும்.
தலபுராணம்
பிரம்மா அஸ்வமேத யாகம் நடத்த சத்யா விரதத் தலமான காஞ்சிக்கு வந்து, உத்தரவேதி என்னும் யாகசாலையில் யாகம் வளர்த்தார். ஆனால் தனது மனைவியான சரஸ்வதியை விட்டு யாகத்தைத் தொடங்கினர். இதனால் வெகுண்ட சரஸ்வதி உலகை இருளாக்க, நாராயணன் விளக்கொளிப் பெருமாளாகத் திருதன்காவில் தோன்றினர். யாகத்தைத் தொடர்ந்த பிரம்மாவை தடுக்க, சரஸ்வதி சரபம் எனும் பறவை மிருக உருவில் அசுரனை ஏவ, நாராயணன் எட்டுக் கைகளில் திவ்ய ஆயுதங்களுடன் அட்டபுயகரனாய் வந்து சரபத்தை அழித்தார். பின்னர் பிரம்மா மீண்டும் தொடர்ந்த யாகத் தீயை அழிக்க, சரஸ்வதி தேவியே வெள்ளப்பெருக்காய் வேகவதி ஆறாய்ப் பெருகிவர, பெருமாள் தானே அணையாய் நதியின் குறுக்கே கிடந்து நதியின் போக்கை மாற்றி யாகத்தின் புனிதத்தீயைக் காத்த தலமே திருவெக்கா ஆகும். இதனாலே பெருமாள் வெக்கனை கிடந்தான் என ஆழ்வர்களால் அருளப்படுகிறார்.
திருமழிசை ஆழ்வார் வரலாறு
கணிகண்ணன், பக்திசாரர் என்றழைக்கப்பட்ட திருமழிசையாருடைய சீடன். கச்சிப்பதியில் அரசுபுரிந்த பல்லவ அரசன் கணிகண்ணனிடம் தன்னை ஏற்றிக் கவிதைபாடச் சொல்ல அவர் மானிடனைப்பாடுவது குற்றம் என்று கூறித் திருமாலைப் பாடினார். அரசன் அவரை நகரைவிட்டு வெளியே போய்விட உத்தரவிட்டான். அவருடைய குரவர் திருமழிசைப்பிரான், 'உம்முடன் நானும் வருவேன்' என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கச்சிப்பதிக்கோவிலுக்குச்சென்று ஆண்டவனை நோக்கிக்,
கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
- மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
- பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்
என்று விண்ணப்பம் செய்தார். அப்பெருமானும் அப்படியே செய்து திருமழிசைப்பிரானைத் தொடர்ந்து சென்றார். பெருமாளைத் தொடர்ந்து திருமகளும் செல்ல கச்சி நகரம் இருண்டு மங்கலம் குறைந்து. இதை மறுநாள் அறிந்த அரசன் வருத்தமுற்று கணிகண்ணனைத் தேடிச்சென்று அவரையும் அவர் குரவரையும் கச்சிப்பதிக்குத் திரும்பும்படி வேண்டிக் கொண்டனர். கணிகண்ணன் திருமழிசைப் பிரானை வேண்ட அவரும் ஆண்டவனை நோக்கிக
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
- மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
- பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.
என்று வேண்ட திருமகள்நாதனும் அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு. இதனாலே பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் எனப் போற்றப்பெருகிறார்.[1]
மேலும் பார்க்க
மேற்குறிப்பு
- ↑ ஆழ்வார்கள் வரலாறு (இரண்டாம் புத்தகம்) : புலவர் கா. ர. கோவிந்தராச முதலியார். திருநெல்வேலிதென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம். சென்னை. 1967