திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் (English: Srivilliputhur Andal Temple) என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும் ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைணவக் கோவில் ஆகும்.[1] விஜயநகரப் பேரரசின் கீழ் (திருமலை நாயக்கரால்) இக்கோவில் கோபுரங்கள் கட்டப்பட்டன.தெற்க்கே திருமலை நாயக்கர் அரண்மனை இன்றளவிலும் செயல் பாட்டில் உள்ளது.[2]

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஆள்கூறுகள்:9°30′29.9″N 77°37′49.4″E / 9.508306°N 77.630389°E / 9.508306; 77.630389Coordinates: 9°30′29.9″N 77°37′49.4″E / 9.508306°N 77.630389°E / 9.508306; 77.630389
பெயர்
வேறு பெயர்(கள்):வன்புதுவை, ஸ்ரீ தன்விபுரம், திருவில்லிபுத்தூர் திவ்யதேசம்
பெயர்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவு:திருவில்லிபுத்தூர்
ஏற்றம்:177 m (581 அடி)
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:ஆனி ஆழ்வார் உற்சவம் (சூன்சூலை), திருவாடிப்பூரம் (ஆகத்து), எண்ணெய்க்காப்பு (டிசம்பர்-சனவரி)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:3 (ஸ்ரீ வடபத்திர சாயி, ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ பெரியாழ்வார்)

வரலாறு

இப்பகுதி மல்லி என்ற பெண் வேடர் இன குறவர் ராணி ஆட்சியில் இருந்தது. அவரது இரு மகன்கள் குற மன்னர்கள் வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது..

புராணம்

திருவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. வில்லி, கண்டன் என்ற இரண்டு குறவர் சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன், வேங்கைப் புலி ஒன்றை துரத்தி செல்கிறார். அவரை, புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை, தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகின்றார். வில்லி கண்முன் காட்சியளித்த பெருமாள் கண்டனுக்கு நேர்ந்த நிலையைக் கூறுகிறார். பின்னர் தாம் இங்கு 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும், பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கப் போவதாகவும் கூறி, இந்தக் காட்டை அழித்து நாடாக்கி தமக்குக் கோபுரத்துடன் கோவில் எழுப்பி வழிபட்டு வரும்படி கூறி மறைகிறார். அதன்படி வில்லி அடித்தளமிட்டு தலத்தை உருவாக்கிய குறிஞ்சி குறவர் வில்லி, கண்டன் ஆட்சி புரிந்த இந்த ஊருக்கு திருவில்லிப்புத்தூர் என்று பெயர் வந்தது என்று தல புராணம் கூறுகிறது.

ஆண்டாள் எண்ணெய்க்காப்பு

திருவில்லிபுத்தூர் திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசுப்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்தத் தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்தத் தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.[3]

தமிழ்நாட்டின் அரசு முத்திரையில்

இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன. அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராசர் தலைமையிலான அரசு, அரசாங்கச் சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அதனை வடிவமைத்த ஓவியர் கிருஷ்ணா ராவ், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மேற்குக் கோபுரத்தை மையமாக வைத்து கோபுரத்திலுள்ள காளை வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் சிவ பார்வதி சிலைகள் உட்பட சேர்த்து வடிவமைத்தார்.[4]

ஆடிப்பூர தேரோட்ட உற்சவம்

பதினெட்டு ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாகக் காட்சியளிக்கும். பத்து கி.மீ. தொலைவிலும் தேர் எந்த ரதவீதியில் உள்ளது என அறியலாம். தேரோட்ட உற்சவத்தில் வடம் பிடித்து மக்கள் இழுக்க, நின்ற தேர் நகர மறுத்தால் தேரின் பின் சக்கரங்களில் பெரிய கனமான மரத்தடியால் உந்தித் தள்ளுவர். எண்ணெய் தடவிய கனமான மர சறுக்குக்கட்டைகளால் தேரை நிறுத்தவும் பக்கவாட்டில் திருப்பவும் செய்வர்.

காலப்போக்கில் மரசக்கரங்கள் சேதமுற்றதால் அதிக செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது. மாற்று சிறிய தேர் பயன்பட்டது. மீண்டும் பெரிய தேரை சீரமைத்து இழுத்தபோது அலங்கார மேலடுக்கு சாரம், கலசம் சரிந்து கீழே விழுந்து பல உயிர்பலி நேர்ந்தது.

முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும். பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிசட்டம், விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது. (தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே).

மேற்கோள்கள்

  1. 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
  2. Thirumalai, Vatsala (2019-06-14). Decision letter: Pretectal neurons control hunting behaviour. doi:10.7554/elife.48114.037. http://dx.doi.org/10.7554/elife.48114.037. 
  3. கண்ணன் திருக்கோயில்கள்; பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன்; பக்கம் 241,242
  4. "தமிழ்நாடு மாநில முத்திரையில் இருப்பது எந்தக் கோபுரம்". டைம்ஸ் ஆப் இந்தியா. 7 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2017.

வெளி இணைப்புகள்