திருவாதவூரார் புராணம்

திருவாதவூரார் புராணம் என்னும் நூல் [1] [2] 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதனை இயற்றியவர் கடவுள் மாமுனிவர் எனப் போற்றப்படும் கவிஞர். இதில் திருவாதவூரார் வரலாறு பற்றிய செய்திகள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பி தொகுத்த 63 நாயன்மார்கள் பட்டியலில் மாணிக்க வாசகர் இடம்பெறவில்லை. நம்பியாண்டார் நம்பியைப் பின்பற்றிச் சேக்கிழார் செயத பெரியபுராணத்திலும் மாணிக்க வாசகரின் வரலாறு இடம்பெறவில்லை. இந்தக் குறையைப் போக்கத் தோன்றிய நூலே இந்தத் திருவாதவூரார் புராணம்.

யாழ்ப்பாணத்துச் சைவப் பெருமக்கள் தில்லை நடராசப் பெருமான் மீதும், மாணிக்கவாசகப் பெருமான் மீதும் அதிக ஈடுபாடு உள்ளவர்கள். அதனால் திருவாதவூரார் புராணத்துக்குச் ‘சிவபுராணம்’ என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

நூல் அமைதி

இந்த நூலில் காப்புச் செய்யுளுடன் 545 பாடல்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்து
மந்திரிச் சருக்கம்
திருப்பெருந்துறைச் சருக்கம்
குதிரையிட்ட சருக்கம்
மண் சுமந்த சருக்கம்
திருவம்பலச் சருக்கம்
புத்தரை வாதில் வென்ற சருக்கம்
திருவடி பெற்ற சருக்கம் [3]

இது பக்திச் சுவை சொட்டும் நூல். வருணனைகள் மிகுதியாக இல்லாதது. திருவைந்தெழுத்தின் மகிமை, சித்தியார் போன்ற சித்தாந்த நூல்களின் நுண்பொருள் முதலானவற்றை விரிவாக எடுத்துரைப்பதோடு அவற்றில் கையாளப்படும் சொற்களையும் பெரிதும் போற்றிக் கையாளுகிறது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒவ்வொரு நடைக்கும், பா-நடைக்கும் ஒரு காலத்தாக்கத்தைக் காணமுடிகிறது. அந்த வகையில் 15 ஆம் நூற்றாண்டைச் சந்தப்பாடல்கள்-காலம் எனலாம். [4] இந்த வகையில் இந்த நூலில் சந்தப்பாடல்கள் மிகுதியாக உள்ளன.

பாடல் – எடுத்துக்காட்டு

ஒப்பரிய சட்டையும் உடுத்திவரு பட்டும்
தொப்பியும் முகத்திடை துலக்கம் உளராகி
செப்பரு நலம் குலவும் செண்டு ஒருகைக் கொண்டே
இப்படியில் இப்படிவம் யாவர் உளர் என்ன [5]

சோமசுந்தரப் பெருமான் குதிரைச் சேவகராக வந்த கோலத்தைக் குறிப்பிடும் பாடல் இது.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 104. 
  2. இந்த நூலுக்கு மூலமும் உரையுமாக பல பதிப்புகள் வெளிவந்துள்ளன
  3. சில பதிப்புகளில் கடைசி மூன்று சருக்கங்களும் திருவம்பலச் சருக்கம் என்னும் ஒரே சருக்கத்தில் இடம்பெற்றுள்ளன
  4. செய்யுளில் திரிபுகள் அதிகம் தோன்றிய காலம் 17-18 ஆம் நூற்றாண்டு.
  5. இப்பாடலில் வரும் 'தொப்பி' என்னும் சொல் முகமதியர் காலத்தை நினைவூட்டுகிறது
"https://tamilar.wiki/index.php?title=திருவாதவூரார்_புராணம்&oldid=17349" இருந்து மீள்விக்கப்பட்டது