திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்

திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோயில், கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று வழங்கப்படுகிறது. நடு நாட்டுத் திருப்பதிகள் இரண்டில் இது ஒன்றாகும். இக்கோயிலில் தேவநாத சுவாமி, அயக்கிரீவர் சன்னதிகள் அமைந்துள்ளன. பாண்டிச்சேரியிலிருந்து 25 கி.மீ தூரத்திலும், கடலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் உள்ள திருவந்திபுரம் அருகே ஓடும் கெடிலம் ஆறு தெற்குலிருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது. இது ஒரு சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம், ஸ்காந்த புராணம், பிருகன் நாரதீய புராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவ நாதன் என்றும் தெய்வநாயகன் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார் (பார்க்கவி). விமானம்: சந்திர விமானம், சுத்தசத்துவ விமானம். திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்
புவியியல் ஆள்கூற்று:11°44′42″N 79°42′34″E / 11.745099°N 79.709341°E / 11.745099; 79.709341
பெயர்
புராண பெயர்(கள்):திருவந்திரபுரம்
பெயர்:திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்
அமைவிடம்
ஊர்:அயிந்தை (திருவந்திபுரம்)
மாவட்டம்:கடலூர் மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தேவநாத சுவாமி, அயக்கிரீவர்
தாயார்:வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி)
தீர்த்தம்:கருடதீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
விமானம்:சந்திர விமானம், சுத்தசத்துவ விமானம்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 42 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°44'42.4"N, 79°42'33.6"E (அதாவது, 11.745099°N, 79.709341°E) ஆகும்.

நூல்கள் மற்றும் பாடல்கள்

இவ்விறைவன் மீது வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவை என்ற நூலை இயற்றியுள்ளார். மணவாள மாமுனிகளாலும் இத்தலம் பாடல்பெற்றுள்ளது. வடமொழியில் தேவநாயக பஞ்சாசத்து என்னும் தோத்திரப் பாடலும், பிராக்ருத மொழியில் அச்யுத சதகம் என்ற தோத்திரப் பாக்களடங்கிய நூலும் இத்தலத்தைப் பற்றிப் பேசுகின்றன.[1]

திருமணம்

இங்கு திருமணம் செய்வோர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே வழங்கப்படுவதால், இத்திருத்தலத்தில் சுபமுகூர்த்த நாளில் 50 திருமணங்கள் அனுமதிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=21200

வெளி இணைப்புகள்