திருவடி சாம்பசிவ வெங்கட்ராமன்
ராவ் பகதூர் சர் திருவடி சாம்பசிவ வெங்கட்ராமன் ஐயர் ( Tiruvadi Sambasiva Venkataraman )[1] CIE, இந்திய தேசிய அறிவியல் கழகம், இந்திய அறிவியல் கழகம் (15 ஜூன் 1884 - 18 ஜனவரி 1963) கரும்பு பற்றிய ஆய்வு மற்றும் கலப்பினத்தில் நிபுணத்துவம் பெற்ற இந்தியத் தாவரவியலாளரும், வேளாண் விஞ்ஞானியும் மற்றும் தாவர மரபியல் நிபுணரும் ஆவார்.[2] இவர் பல உயர் விளைச்சல் தரும் கரும்பு சாகுபடியை உருவாக்கினார் அல்லது மேற்பார்வை செய்தார். இது இந்தியாவை உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை உற்பத்தியாளராக நிலைநிறுத்தியது. மேலும், தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா, வங்காளதேசம், இந்தோனேசியா, பாக்கித்தான் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட பல நாடுகளின் சர்க்கரைத் தொழில்களையும் நிலைநிறுத்தியது.[2] [3]
திருவடி சாம்பசிவ வெங்கட்ராமன் | |
---|---|
பிறப்பு | சேலம், சென்னை மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (த்ற்போதைய தமிழ்நாடு, இந்தியா) | 15 சூன் 1884
இறப்பு | 18 சனவரி 1963 மதராஸ், சென்னை மாநிலம் (நவீன சென்னை, தமிழ்நாடு), இந்தியா | (அகவை 78)
தேசியம் | பிரித்தானிய இந்தியர் (1884–1947) இந்தியர் (1947–1963) |
துறை | |
பணியிடங்கள் | |
கல்வி கற்ற இடங்கள் | |
அறியப்படுவது | கரும்பு வகைகளின் கலப்பினம் |
விருதுகள் |
|
ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்
வெங்கட்ராமன், சென்னை மாகாணத்தில் சேலத்தில் ( இப்போது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளது) தமிழ்ப் பிராமண குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பத்தில் மதவாதியாக இருந்தாலும், 16 வயதிற்குள் மதத்தைத் துறந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு இவர் ஒரு சிறந்த அறிஞராக இருந்தார். இவர் சென்னை, மாநிலக் கல்லூரிரியில் சேர்ந்து தாவரவியல் படிக்க முடிவு செய்தார். 1905 ஆம் ஆண்டில், இவர் தாவரவியலில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். பின்னர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், சைதாப்பேட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரியில் (தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான கல்லூரி) நியமனம் செய்யப்பட்டார். அங்கு தாவரவியல் நிபுணர் சார்லஸ் ஆல்ஃபிரட் பார்பரின் உதவியாளராக இருந்தார்.[2] 1908 ஆம் ஆண்டில், கல்லூரி கோயம்புத்தூருக்கு மாற்றப்பட்டது. அங்கு வெங்கடராமன் தனது வாழ்நாள் முழுவதையும் கழித்தார். தனது ஓய்வு நேரத்தில் கலப்பின வகை கத்திரிக்காய்களை வளர்க்க முயற்சித்து, விரைவில் ஆராய்ச்சிக்கான திறனை வெளிப்படுத்தினார். [3]
கோயம்புத்தூர் கரும்பு சாகுபடியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
1900 களின் முற்பகுதியில், இந்திய கரும்பு வகைகளின் மிக மோசமான விளைச்சல் காரணமாக நெதர்லாந்தின் கிழக்கிந்திய தீவுகளில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது அரசாங்கத்திற்கு பெரும் நிதிசுமையை ஏற்படுத்தியது. கரும்பு இனப்பெருக்கம் குறித்து ஆய்வு செய்வதற்கும், உள்நாட்டு கரும்புத் தொழிலை மேம்படுத்துவதற்கும் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தை நிறுவ பிரித்தனிய அரசாங்கம் முடிவு செய்தது. அதன் சிறந்த காலநிலை காரணமாக கோயம்புத்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் 1912 அக்டோபரில் அரசாங்க கரும்பு நிபுணராக சார்லஸ் ஆல்ஃபிரட் பார்பர் நியமிக்கப்பட்டார். அவருடைய உதவியாளராக வெங்கட்ராமன் இருந்தார். வெங்கட்ராமனின் வாழ்க்கை வரலாற்றாசிரியரும், பட்டதாரி மாணவருமான ஜே. துல்ஜாராம் ராவின் கூற்றுப்படி, வேளாண்மைக் கல்லூரி வளாகத்திற்கு அருகில் வளர்ந்து வரும் காட்டுக் கரும்புகள் இரு விஞ்ஞானிகளை கவனிக்க வைத்தது. அதைத் தங்கள் சோதனைகளில் பயன்படுத்தவும் தூண்டியது.[2]
காட்டுக் கரும்புக்கும் முதலலில் பயிரிடப்பட்ட கரும்பு இனத்துக்கும் இடையே முதல் கலப்பின செங்கரும்பு குறுக்கிடப்பட்டாலும், 1914 வாக்கில், வெங்கட்ராமன் சாத்தியமான கலப்பின நாற்றுகளை உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றார். கரும்பு வளர்ப்பு ஒரு புதிய ஆராய்ச்சித் துறையாக இருந்ததால், வெங்கட்ராமன், புதிய நுட்பங்களின் முன்னோடியுடன் நுட்பமான திட்டமிடல் மற்றும் அவதானிப்பு ஆகியவற்றை நம்பியிருந்தார். இதில் ஒளிக்கதிர் சிகிச்சைகள் மூலம் பூக்களை செயற்கையாக தூண்டுதல், மற்றும் தாவரங்களின் மரபணு வேறுபாட்டை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். கரும்பு வேர் அமைப்புகளின் விரிவான ஆய்வுக்கு இவர் முன்னோடியாக இருந்தார். இது தாவரங்களின் மகசூல் திறனைப் புரிந்துகொள்வதில் முக்கியமானதாக இருந்தது. [2]
1927 ஆம் ஆண்டில், இந்தியத் தலைமை ஆளுநர் இர்வின் பிரபு, கரும்பு வளர்ப்பு நிறுவனத்திற்குச் சென்று, வெங்கட்ராமனின் பணியைப் பாராட்டினார். பின்னர் கரும்பு சாகுபடியில் தொடர்புடைய அனைவரையும் பார்வையிட உத்தரவிட்டார்.[2] 1928 ஆம் ஆண்டில், அந்த ஆண்டு இந்திய அறிவியல் மாநாட்டின் விவசாயப் பிரிவுக்கு தலைமை தாங்கிய வெங்கட்ராமன், "இந்திய சர்க்கரைக் கிண்ணம்" என்ற தலைப்பில் விரிவுரை ஆற்றினார். அடுத்த ஆண்டு கரும்பு தொழில்நுட்ப வல்லுநர்களின் சர்வதேச சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சாவகம் சென்றார். அங்கு பல்வேறு பிரிவுக்கு தலைமை தாங்கினார். 1932 இல், இந்திய விவசாய சேவைக்கு நியமிக்கப்பட்டார்.[2]
பிற்காலத் தொழில் மற்றும் வாழ்க்கை
தான் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, வெங்கட்ராமன் இந்தியாவில் கரும்பு ஆராய்ச்சி குறித்து ஒரு கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொண்டார். ஆனால் உடல்நலம் காரணமாக அதைக் கைவிட்டார். பின்னர் சென்னையில் தனது ஓய்வு காலத்தைக் கழித்தார். அங்கு தத்துவப் படைப்புகளைப் படிப்பதிலும், பல்வேறு தலைப்புகளில் தி இந்துவுக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதுவதிலும் தனது நேரத்தை செலவிட்டார். கரும்பு தொழில்நுட்ப வல்லுநர்களின் சர்வதேச சங்கம் 1956 ஆம் ஆண்டு இந்தியாவில் மாநாட்டை நடத்த முடிவு செய்தபோது, இவர் கரும்பு வளர்ப்பு பிரிவுக்கு தலைமை தாங்கினார். மாநாட்டின் போது, கோ. 205 இரகத்தின் வளர்ச்சியை நினைவு கூறும் தகடு ஒன்று கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வெளியிடப்பட்டது. [2]
இறப்பு
வெங்கட்ராமன் 1963 ஜனவரி 18 அன்று தனது 78வது வயதில் சென்னையில் காலமானார். இவருக்கு திருமணமாகி, இராமமூர்த்தி என்ற ஒரு மகன் இருந்தார். பின்னர் அவர் இந்தியத் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடத்தின் உதவி இயக்குநரானார். [2]
விருதுகளும் கௌரவங்களும்
வெங்கட்ராமன் தனது சாதனைகளுக்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்டார். 1920 இல், கோ. 205 சாகுபடியின் வணிக வெற்றிக்குப் பிறகு, பிரித்தானிய அரசாங்கத்தால் இவருக்கு ராவ் சாகிப் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் 1928 இல் ராவ் பகதூர் என்ற பட்டத்திற்கு உயர்த்தப்பட்டார்.[2] 1937 புத்தாண்டு கௌரவப் பட்டியலில் இந்தியப் பேரரசின் துணைவராக நியமிக்கப்பட்டார். 1942 புத்தாண்டு விருதுகள் பட்டியலில், இவர் வீரத்திருத்தகை பட்டம் பெற்றார், இவ்வாறு கௌரவிக்கப்படும் முதல் இந்திய வேளாண் விஞ்ஞானி இவரேயாவார்.[2] பிப்ரவரி 1942 அன்று புது தில்லியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (இப்போது குடியரசுத் தலைவர் இல்லம் ) அப்போதைய ஆளுநர் விக்டர் ஹோப், இரண்டாம் லின்லித்கொ பிரபுவால் முறையாக கௌரவிக்கப்பட்டார் . 1956 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தால் இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. [2]
ஆந்திரப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.[2] 1941 ஆம் ஆண்டில், இவர் இந்திய மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம் சங்கத்தின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருட காலம் பணியாற்றினார். [4] 1934 இல் இந்திய அறிவியல் கழகத்தின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1934-35 இல் அதன் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.[1] 1935 இல் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் அறக்கட்டளை உறுப்பினராவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] [5] சர்வதேச மரபியல் காங்கிரசு சங்கம், இந்திய மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம் மற்றும் கரும்பு தொழில்நுட்ப வல்லுநர்களின் சர்வதேச சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்தார்.[5] மேலும் தென்னாப்பிரிக்க சர்க்கரை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் கெளரவ உறுப்பினராகவும் இருந்தார். [2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Fellowship – Venkataraman, Tiruvadi Sambasiva". Indian Academy of Sciences இம் மூலத்தில் இருந்து 16 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180216085056/http://www.ias.ac.in/describe/fellow/Venkataraman,__Tiruvadi_Sambasiva.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 Thuljaram Rao, J. (1963). "Tiruvadi Sambasiva Venkataraman: 1884–1963". Biographical Memoirs of Fellows of the Indian National Science Academy 11: 122–133. http://insaindia.res.in/BM/BM11_8612.pdf.
- ↑ 3.0 3.1 Maheshwari, Ramesh; Raman, Anantanarayanan (2014). "The knight of sugar industry: T. S. Venkatraman (1884–1963)". Current Science 106 (8): 1146–1149. http://www.currentscience.ac.in/Volumes/106/08/1146.pdf.
- ↑ "Office Bearers". Indian Society of Genetics and Plant Breeding இம் மூலத்தில் இருந்து 19 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180219090424/http://www.isgpb.org/office-bearers.php.
- ↑ 5.0 5.1 "Deceased Fellow – Sir T. S. Venkataraman". Indian National Science Academy இம் மூலத்தில் இருந்து 18 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180218090132/http://insaindia.res.in/detail/F00-0867.
குறிப்புகள்
- ↑ Prior to 1970, the Indian National Science Academy was named the "National Institute of Sciences of India", and its fellows bore the post-nominal "FNI". The post-nominal became "FNA" in 1970 when the association adopted its present name.