திருப்போரூர் உத்திர வைத்திய லிங்கேசுவரர் கோயில்

திருப்போரூர் உத்திர வைத்திய லிங்கேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மறையூர் அருகில் திருப்போரூர் என்னுமிடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் முனிவர்கள் இங்கு தங்கி வேதங்ளை ஓதியதால் இவ்வூர் மறையூர் என்று பெயர் பெற்றது. வனமாக இருந்ததாலும், அகத்தியருக்கு இறைவன் காட்சி தந்ததாலும் இவ்வூர் காட்டூர் என்றும் அழைக்கப்படுகிறது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 48 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 12°44'04.7"N, 80°08'14.5"E (அதாவது, 12.734625°N, 80.137370°E) ஆகும்.

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக உத்திர வைத்திய லிங்கேசுவரர் உள்ளார். இறைவி தையல்நாயகி ஆவார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வைத்தீசுவரன் கோயிலைப் போல இக்கோயிலையும் கருதுகின்றனர்.[1]

அமைப்பு

பாண்டியர்களால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் சிதம்பர சுவாமிகள் உள்ளிட்ட பலர் வணங்கிய கோயிலாகும். தொண்டை மண்டலத்தில் வனப் பகுதியில் தவம் புரிய வந்த அகத்தியர் அப்பகுதியில் தண்ணீர் இல்லாததைக் கண்டு வருந்தி நித்திய பூசைகளுக்காகவும், மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காகவும் இறைவனிடம் வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் ஒரு குளத்தை உண்டாக்கி, பின் மணக்கோலத்தில் அகத்தியருக்குக் காட்சி தந்தார்.[1]

திருவிழாக்கள்

பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்