திருப்பாவை 1 (மார்கழித் திங்கள்)

மார்கழி மாதம் முழுவதும் கடைபிடிக்கும் விரதத்தின் ஒரு பகுதியாக ஆண்டாள் எழுதிய திருப்பாவையின் முதல் பாசுரம் (பாடல்) மார்கழி திங்கள்... ஆகும்.

பாரம்பரிய ஓவியம் ஆண்டாள்

பாடல்

 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
 நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
 சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
 கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
 ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
 கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
 நாராயணனே, நமக்கே பறைதருவான்,
 பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

அருஞ்சொற்பொருள்

நேர் இழையீர் - அழகிய ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே, பறை - விருப்பம், ஏல் - கேள், ஓர் - இதை நினைப்பாயாக, ஏலோர் - பாதத்தை நிறைத்து கிடக்கும் சொல், எம்பாவாய் - எம்முடைய பாவையே - காமன்(மன்மதன்) மனைவி ரதி என்றும் கொள்ளலாம். "மேல் காமனை நோற்கையாலே அவன் மனைவியான ரதியை சொல்லியதாகவும் ஆகும்"[1]

பொருள்

அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.[2]

விளக்கம்

இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.[2]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்