திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை
திருப்பாம்புரம் என். சுவாமிநாதர் (சுவாமிநாத பிள்ளை) (12 செப்டம்பர் 1898 – 1961) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை புல்லாங்குழல் வாத்தியக் கலைஞர்.
திருப்பாம்புரம் என். சுவாமிநாத பிள்ளை | |
---|---|
1942 இல் சுவாமிநாத பிள்ளை | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 1898 |
பிறப்பிடம் | திருப்பாம்புரம், சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 1961 (அகவை 62–63) |
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | கருநாடக இசைக் கலைஞர் |
இசைக்கருவி(கள்) | புல்லாங்குழல் |
இசைப் பின்னணி
இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமியின் சீடர்களில் குறிப்பிடத் தக்கவர் சாத்தனூர் பஞ்சநதர். தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாதர், பஞ்சநதரை தஞ்சாவூர் வட்டாரத்தின் முக்கியமான இசைக் கலைஞர் என பாராட்டியுள்ளார். இத்தகைய பஞ்சநதரின் இரண்டு முக்கிய சீடர்கள் வீணை தனம்மாள் மற்றும் நாதசுவர வித்துவான் திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் ஆகியோராவர். அவரின் மற்றொரு குறிப்பிடத்தக்க சீடர் வயலின் வித்துவான் திருக்கோடிக்காவல் கிருஷ்ணர். சாத்தனூரின் இராக பாவம் பற்றி வீணை தனம்மாள் குறிப்பிடும்போது அது போன்ற இராக பாவத்தைத் தான் வேறு எவரிடமும் கேட்டதில்லை எனக் கூறினார். வீணை தனம்மாளும் நடராஜசுந்தரமும் முத்துசாமியின் காலடியில் இசை கற்ற சாத்தனூர் பஞ்சு அவர்களே தங்கள் முதன்மை குரு என மகிழ்ச்சி கொண்டிருந்தார்கள். நடராஜசுந்தரமும் அவரது சகோதரர் சுப்பிரமணியமுமே முதன்முதலாக இரட்டையராக நாதசுவரம் வாசித்த பெருமைக்குரியவர்கள்.
பிறப்பு
நடராஜசுந்தரத்தின் மூன்று மகன்களில் முதலாவது மகனாக சுவாமிநாதன் 1898 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் நாள் பிறந்தார்.
இசைப் பயிற்சி
சிலகாலம் நாதசுவரம் வாசிக்கப் பயின்ற பின்னர் வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ளத் தொடங்கினார். குரல் உடைந்தபடியால் வாய்ப்பாட்டை விட்டு புல்லாங்குழல் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். புல்லாங்குழல் வாசிப்பதற்கு வேண்டிய நுட்பங்களை தாமாகவே கற்றுக் கொண்டார். வாய்ப்பாட்டின்போது குரலில் வரும் கமகங்களை புல்லாங்குழலில் கொண்டுவர வேண்டும் என்பது அவரின் குறியாக இருந்தது. இதையும் தானாகவே பயின்றார்; வெற்றியும் பெற்றார். ஆனாலும் இசையின் ஆன்மா தடம் மாறாமல் கவனம் எடுத்துக் கொண்டார்.
தந்தையாரைப் போல சுவாமிநாதர் முத்துசாமி கிருதிகளில் மிகுந்த விருப்பம் உடையவராக இருந்தார். அவற்றில் நல்ல தேர்ச்சியும் பெற்றார். அக்காலத்தில் பல்லடம் சஞ்சீவ, டி. ஆர். மகாலிங்கம் (மாலி) ஆகியோர் புல்லாங்குழல் வாசிப்பதில் முன்னணியில் இருந்தனர். இருந்தும் திருப்பாம்புரம் சுவாமிநாதர் இரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்திருந்தார். சுவாமிநாதர் முத்துசாமி கிருதிகளிலே கூடிய கவனம் செலுத்தினார். அவரின் விளம்பகால நடையையும் கமகங்களையும் பின்பற்றி புல்லாங்குழல் இசையை ஏறக்குறைய பாடுவது போல வெளிக் கொணருவதில் அவர் வெற்றிபெற்றார். சுவாமிநாதரின் இந்தப் பாணியை மாலி பாராட்டினார்.
இசைக் கச்சேரிகள்
திருப்பாம்புரம் சுவாமிநாதர் தனது இசைக் கச்சேரிகளில் அதிகளவு முத்துசாமி கிருதிகளை வாசித்தார். சதுர்தச இராகமாலிகை, ஸ்ரீ விஸ்வநாதம் ஆகியவற்றை கச்சேரி மேடைகளுக்கு அறிமுகம் செய்து அவற்றைப் பிரபலமாக்கினார். அதே போல ஹஸ்திவதனாய நமஸ்துப்யம் கிருதியையும் அவரே பிரபலப் படுத்தினார். இராமசுவாமியின்[கு 1] 108 இராக-தாளமாலிகாவை பொறுமையுடன் கற்று பின்னர் அதனை ஆர்வமுள்ள தனது சீடர்களுக்கு கற்றுக் கொடுத்தார்.
இசை ஆசிரியர்
சென்னையில் 1948 ல் தொடங்கிய மத்திய கருநாடக இசைக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1] மாணவர்களுக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் தீட்சிதர் கிருதிகள் பலவற்றை கற்றுக் கொடுத்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இசைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். அக்காலத்தில் முத்துத்தாண்டவரின் 60 கீர்த்தனைகளை சுரதாளக்குறிப்புடன் வெளியிட்டார். அவற்றில் சில:[2]
கீர்த்தனை | இராகம் | தாளம் |
ஆராராசை | சங்கராபரணம் | மிச்ரசம்பை |
ஆடிக்கொண்டார் | மாயாமாளவகெளளை | ஆதி |
தெரித்தளவில் | கமாசு | ஆதி (திஸ்ரநடை) |
குருகுல முறையிலும் சில மாணாக்கர்களுக்கு இசை கற்றுக் கொடுத்தார். வீணை தனம்மாளின் பேரனான டி. விசுவநாதன் இவரிடம் புல்லாங்குழல் கற்றார். டி. வி. நமசிவாயம், எஸ். நரசிம்மலு, சீர்காழி கோவிந்தராஜன்[3] ஆகியோர் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார்கள்.
மறைவு
1961 பெப்புருவரியில் காலமானார்.
விருதுகள்
- சங்கீத கலாசிகாமணி விருது, 1952, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (முனைவர் யூ. கிருஷ்ணாராவ் தலைமை)
- சங்கீத கலாநிதி விருது, 1953, வழங்கியது: சென்னை மியூசிக் அகாதமி
மேற்கோள்கள்
- ↑ "பழமையான சென்னை" இம் மூலத்தில் இருந்து 2021-10-07 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20211007020852/http://radaswin.blogspot.com/2011/08/blog-post_21.html.
- ↑ முத்துத்தாண்டவர்
- ↑ "திருப்பாம்புரம் சுவாமிநாதர் அவர்களிடம் மூன்று வருடம் குருகுல வாசம்" இம் மூலத்தில் இருந்து 2013-12-31 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131231192447/http://koodu.thamizhstudio.com/thodargal_4_42.php.
வெளியிணைப்புகள்
குறிப்புகள்
- ↑ இவர் முத்துசுவாமியின் தந்தையாக இருக்கலாம். உறுதி செய்யப்பட வேண்டும்