திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோயில்
திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோயில் (பேணுபெருந்துறை) என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் (திருப்பந்துறை என்ற ஊரில்)[1] கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.
தேவாரம் பாடல் பெற்ற திருப்பந்துறை சிவானந்தேசுவரர் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10°55′32″N 79°27′37″E / 10.9256°N 79.4603°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருப்பேணு பெருந்துறை |
பெயர்: | திருப்பந்துறை சிவானந்தேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருப்பந்துறை |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர் |
உற்சவர்: | பிரணவேஸ்வரர் |
தாயார்: | மங்களாம்பிகை, மலையரசி |
தல விருட்சம்: | வன்னி |
தீர்த்தம்: | மங்கள தீர்த்தம் |
சிறப்பு திருவிழாக்கள்: | தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
தொன்மை: | 1000-2000 வருடங்களுக்கு முன் |
அமைத்தவர்: | சோழர்கள் |
பேணு பெருந்துறை
இத்தலத்தில் பிரமன், தேவி, முருகன் ஆகியோர் வழிபட்டனர் என்பது தொன் நம்பிக்கை. மாணிக்கவாசகரை ஆட்கொண்ட திருபெருந்துறையில் இருந்து இந்தத் தலத்தை வேறுபடுத்த திருப்பேணுபெருந்துறை என வழங்கப்பட்டுவந்தது.
அமைப்பு
வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது ராஜகோபுரம் உள்ளது. இடது புறம் நவக்கிரக சன்னதி உள்ளது. கொடி மரம், நந்தியை அடுத்து மூலவர் கருவறைக்கு முன்பாக வலது புறம் விநாயகர் உள்ளார். மூலவர் சன்னதியின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சற்றில் விநாயகர், முருகன், கஜலட்சுமி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. மூலவர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிகோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
தல வரலாறு
பிரம்மனை சிறையிலடைத்ததும், சிவனுக்கு உபதேசம் செய்துவிட்டதும் முருகனுக்கு அகங்காரத்தை ஏற்படுத்தியதாம். இதனால் கோபம் கொண்ட சிவன் முருகனை ஊமையாக்கிவிட்டாரம். வருந்திய முருகன், தனக்கு பேச்சு கிடைப்பதற்காக திருப்பந்துறையில் சிவலிங்கம் அமைத்து, பூஜை செய்து தவத்தில் ஈடுபட்டார். முருகனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பேசும் திறனை கொடுத்தருளினார். இதனால் இத்தல இறைவன் பிரணவேஸ்வரர் ஆனார் என ஒரு வரலாறு இத்தலத்திற்கு உண்டு என்பது தொன் நம்பிக்கை. ஸ்வாமி சந்நதிக்கு அருகிலேயே வடதிசை நோக்கி சின்முத்திரையோடு தியானம் செய்யும் நிலையில் தண்டபாணியின் வடிவம் இருக்கிறது. இன்றும் இந்த ஊரில் பிறக்கும் குழந்தைகள் ஊமையாகப் பிறப்பதில்லை. முருகப்பெருமானே இங்கு பேசும் பாக்கியம் பெற்றதால் பேச்சு சரியாக வராத குழந்தைகளை பெற்றோர்கள் இங்கு கூட்டி வந்து போவதை இன்றும் பார்க்கலாம். கோயிலில் உள்ள பிட்சாடனர் சிறப்பான மூர்த்தியாவார், ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத பரணி நட்சத்திரத்தன்று இவருக்கு அமுது படையல் திருவிழா நடக்கிறது. இங்குள்ள மங்கள தீர்த்தக்கரையில் குக விநாயகர், சாட்சி விநாயகர் என்னும் இரட்டை விநாயகர் சன்னதிகள் காணப்படுகின்றன.
வழிபட்டோர்
விநாயகர், முருகப்பெருமான், உமையம்மை, பிரம்ம தேவர் ஆகியேர் வணங்கிப் பேறு பெற்ற தலம்.
மேற்கோள்கள்
- ↑ "Sivanandeswarar Temple : Sivanandeswarar Sivanandeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.