திருநறையூர் சித்தநாதேசுவரர் கோயில்
திருநறையூர் சித்தநாதேசுவரர் கோயில் (திருநறையூர்ச்சித்தீச்சரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 65ஆவது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற திருநறையூர் சித்தநாதேசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம்,திருநறையூர்ச்சித்தீச்சரம் |
பெயர்: | திருநறையூர் சித்தநாதேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருநறையூர் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சித்தநாதர், வேதேசுவரர், நரேசுவரர்,சித்தநாதேசுவரர் |
தாயார்: | அழகம்மை, சௌந்தர நாயகி |
தல விருட்சம்: | பவள மல்லிகை |
தீர்த்தம்: | சூல தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர்,சுந்தரர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
தல வரலாறு
சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் வேதேஸ்வரர் என்றும் சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் என அழைக்கபடுகிறது. துர்வாச முனிவரால் பறவை உருவமாகமாறி, சாபம் பெற்ற நரன் வழிபட்டதால் இத்தலத்திற்கு நரபுரம் என்ற பெயரும் உண்டு. மிகப் பழமையான லிங்கம். மாசி மாதத்தில் முன்று நாட்களும், ஆவணி மாதத்தில் முன்று நாட்களும் சூரிய கிரணம் மூலவர் மீது படுகின்றது. இத்தலத்தில் ஸ்ரீமஹாலட்சுமியே மகரிஷி ஒருவருக்கு மகளாக பிறந்தாள். பின் பரமேஸ்வரனும் பார்வதியும் ஸ்ரீநிவாசபெருமானுக்கு மணம் முடித்துவைத்தனர். இங்குள்ள விநாயகர் ஆண்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
அமைவிடம்
கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே 8 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணம் நாச்சியார்கோயில் சாலையில் வந்து நாச்சியார் கோயிலின் முற்பகுதியான திருநறையூரில் இறங்கி கோயிலை அடையலாம்.[1] சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் திருநரையூரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் துருவாச முனிவரால் பறவை உருவச் சாபம் பெற்ற நரன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. அதனால் நரபுரம் எனவும் அழைக்கப்படுகிறது.
அமைப்பு
ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே வரும்போது கொடி மரம், பலி பீடம் நந்தி ஆகியவை உள்ளன. கோயிலின் வலப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. மூலவர் சன்னதிக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன.
திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், சனீஸ்வரன், காசி விசுவநாதர், துவார கணபதி, ஆண்ட விநாயகர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. தொடர்ந்து கால பைரவர், வீர பைரவர், சூரியன், விநாயகர், நாகம்மாள் ஆகியோர் உள்ளனர். அடுத்து சித்தலிங்கம், ரினலிங்கம், வாயுலிங்கம், தேஜஸ்லிங்கம், ஜோதிலிங்கம் ஆகியவை உள்ளன. ரினலிங்கத்திற்கும், தேஜஸ்லிங்கத்திற்கும் அருகே சண்டிகேஸ்வரர் உள்ளார். அடுத்து ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசர், பிராமி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி வராகி, சாமுண்டா, வலம்புரி விநாயகர் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் துர்க்கை, அர்த்தநாரி, பிட்சாடனர், பிரம்மா, லிங்கோத்பவர், மேதா தட்சிணாமூர்த்தி, மேதா மகரிஷி, நடராஜர், வரசித்தி விநாயகர் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் தனிச் சன்னதியில் உள்ளார். இக்கோயிலில் 3 சூன் 1956 மற்றும் 13 டிசம்பர் 1999இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
வழிபட்டோர்
பிரம்மன், குபேரன், மார்க்கண்டேயன், முருகன் ஆகியோர் வழிபட்ட தலம். கோரக்கரும், வேறு பல சித்தர்க்ளும் பல காலம் இங்கு தங்கி தவம் செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். கோவிலுக்குள் பல சித்தர்களின் உருவங்களை இன்றும் காணலாம்.
அருகிலுள்ள கோயில்
நாச்சியார் கோயில் எனும் வைணவக் கோயில் இத்தலத்திற்கு அருகிலுள்ள கோயிலாகும்.
மேற்கோள்கள்
- ↑ வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், கோவிந்தராஜ் நகர், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, 2014