திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில்

திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 72ஆவது சிவத்தலமாகும். அம்பிகை பசு வடிவில் இறைவனை வழிபட்ட தலம். திருத்தலங்கள் தோறும் சென்று இறைவனை பாடி வழிபட்டு வந்த அப்பர் பெருமான் எனப்படுகின்ற திருநாவுக்கரசர் தான் முக்தி அடைந்த தலமான திருப்புகலூருக்குச் செல்லுவதற்கு முன்பாக கடைசியாக இந்தத் தலத்திலிருந்துச் சென்றதாகவும் கூறுவர். காஞ்சி மகாசுவாமிகள் சுமார் 50 வருடங்களுக்கு முன் இங்கு வந்திருந்தபோது இறைவி சந்நிதிக்கு சக்ர யந்திரம் அளித்துள்ளார். [1]

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கொண்டீச்சரம்
பெயர்:திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்கொண்டீச்சரம்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பசுபதீஸ்வரர், பசுபதீசுவரர், பசுபதி நாதர்
தாயார்:சாந்த நாயகி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:க்ஷீர புஷ்கரணி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

அமைவிடம்

"திருக்கண்டீசுவரம்' என்று தற்போது மக்களால் அழைக்கப்படுகின்ற இந்தத் தலம் ஒரு காலத்தில் வில்வமரக்காடாக இருந்த காரணத்தால் அதன் பெயர் "வில்வாரண்யம்' என்றும் கூறப்படுகின்றது. முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் இக்கோயில் உள்ளது.[1] இச்சிவத்தலம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் வட்டத்தில் திருக்கொண்டீஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.

தொன் நம்பிக்கை

ஒரு சமயம், கயிலை மலையில் இறைவனும், இறைவியும் உரையாடிக்கொண்டிந்த சமயத்தில் ஒரு கருத்து வேறுபாடு உருவானது. அதன் காரணமாக இறைவியை பூலோகத்தில் பசுவாக போகும்படி இறைவன் சாபம் இடுகின்றார்.  அந்த. சாபம் காரணமாக பூலோகத்திற்கு வந்த அம்பிகை பசு உருவத்தில் இருந்தார். அப்போது தன் பதியான இறைவனை மீண்டும் சென்று அடைய எண்ணி, வில்வ ஆரண்யத்தில் அவரைத் தேடி  அலைந்து கொண்டிருந்தார். அப்போது இறைவனைக் காணமுடியவில்லை.  பசு வடிவில் இருந்த இறைவி, தன் கொம்புகளைக் கொண்டு பூமியைக் கிளறிப் பார்க்க ஆரம்பித்தார். அக்காலகட்டத்தில் அங்கு சுயம்புவாக இருந்த ஒரு லிங்கத் திருமேனியின் மீது கொம்புப்பட்டு குருதி வழிந்து ஓட ஆரம்பித்தது.  அதனைக் கண்டு இறைவி அஞ்ச ஆரம்பித்தார்.பசுவான தன் மடியிலிருந்து பால் சொரிந்து அக்காயத்தை ஆற்றினார். பின் தொடர்ந்து லிங்கத் திருமேனியாக இருந்த இறைவனை வழிபட ஆரம்பித்தார்.  அதனால் மகிழ்ச்சி அடைந்த இறைவன்ம் ரிஷப வாகனத்தில் தோன்றி இறைவிக்கு சாப விமோசனம் தந்தார். பின்னர்,  ரிஷபா ரூடராய் இறைவிக்கு காட்சி தந்தார். [1]

அமைப்பு

 
மூலவர் விமானம்

கோயில் வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது விநாயகர் உள்ளார். அடுத்து பலிபீடமும், நந்தி மண்டமும் உள்ளன. திருச்சுற்றில் நால்வர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், பிரம்மபுரீஸ்வரர், அகஸ்தீஸ்வரர், நாகம், சூரியன், பைரவர் ஆகியோர் உள்ளனர். நவக்கிரக சன்னதி உள்ளது. மடப்பள்ளியும், யாகசாலையும் உள்ளன. கருவறையில் மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு இடது புறம் சாந்தநாயகி அம்மன் சன்னதி உள்ளது.

இறைவன்,இறைவி

கிழக்கு நோக்கி இத்திருக்கோயிலை சுற்றிலும் அகழி உள்ளது. இத்தல இறைவன் பசுபதீஸ்வரர் என்றும் அம்பிகை சாந்த நாயகி என்றும் வழிபடப்படுகின்றனர். இக்கோயிலின் தலமரம் - வில்வம் ஆகும். இக்கோயிலின் தீர்த்தம் பாற்குளம் ஆகும். அம்பிகை பசு உருவாய்ப் பூசித்த ஐதீகச் சிற்பமும் இக் கோயிலில் உள்ளது. [1]

மூத்ததேவி

ஜேஷ்டா தேவி எனும் ஸ்ரீதேவியின் மூத்த சகோதரியான தவ்வையின் பழைமையான சிலை இங்குள்ளது. இத்தெய்வத்திடம் சோம்பலின்றி சுறுசுறுப்பை வேண்டலாம்.[2]

பேறு பெற்றவர்கள்

தேவலோகப் பசு என்று கூறப்படுகின்ற காமதேனு வழிபட்டு பேறு பெற்ற தலமாக இத்தலம் கூறப்படுகிறது. இத்தலத்தில் தான் வியாழன் எனப்படுகின்ற குரு பகவான் சிவனை வழிபட்டு பல நல்ல பேறுகளைப் பெற்றதாகக் கூறுவர். தலவரலாற்றின் படி, இறைவன் ரிஷபாரூபராய் பசுவாக இருந்த இறைவிக்கு காட்சி தந்து உமையம்மையை ஆட்கொண்டது ஒரு கார்த்திகை மாதம் வியாழக் கிழமை எமகண்ட வேளையில் என்று நம்பப்படுகிறது. அதன் காரணமாக இக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும கார்த்திகை மாதத்தில் வருகின்ற வியாழக்கிழமை நாள் சிறப்புத் திருவிழாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதே நாளில் தான் நவக்கிரக குருபகவானும் பூஜித்து நற்கதி பெற்றதாகவும் கூறப்படுகின்றது. [1]

கல்வெட்டு, குடமுழுக்கு

இக்கோயிலில் சகம் 1439 ஆண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னரான வீரகிருஷ்ண தேவ மகாராயர் கல்வெட்டு ஒன்று உள்ளது. தமிழக இந்து சமய அறநிலையதுறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் 2006 ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடைபெற்றது. அதற்குப் பிறகு, தற்போது சில திருப்பணி வேலைகள் பக்தர்களின் பங்களிப்போடு நடைபெற்று வருகிறது.நூதன கொடி மரத்தை அமைக்கின்ற பணியும், முன்னர் நடைபெற்று பின்னர் நின்று போன தைப்பூச பிரம்மோற்சவம் விழாவும் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 பாவங்களைப் போக்கும் பசுபதி!, தினமணி, 13 டிசம்பர் 2019
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.

வெளி இணைப்புகள்

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

இவற்றையும் பார்க்க