தலிப் கவுர் திவானா

தலிப் கவுர் திவானா ( Dalip Kaur Tiwana ; 4 மே 1935 - 31 ஜனவரி 2020) என்பவர் சமகால பஞ்சாபி இலக்கியத்தின் முன்னணி புதின ஆசிரியரும் மற்றும் சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரும் ஆவார். இவர் பல பிராந்திய மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் பரவலாக மொழிபெயர்ப்பு எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். இவர் பஞ்சாபி பேராசிரியராகவும், பாட்டியாலா, பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். பஞ்சாபி மொழியில் சமகால இலக்கியத்தை உருவாக்குவதில் இவர் பரவலாகப் பாராட்டப்படுகிறார். மேலும் இவரது புத்தகங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் கிராமப்புற வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது.

தலிப் கவுர் திவானா
DalipKaurTiwana.jpg
இயற்பெயர் தலிப் கவுர் திவானா
பிறந்ததிகதி (1935-05-04)4 மே 1935
பிறந்தஇடம் ரப்பான், லூதியானா மாவட்டம், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு 31 சனவரி 2020(2020-01-31) (அகவை 84)
பணி புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர்
வகை புதினம், சிறுகதை

சுயசரிதை

தலிப் கவுர் திவானா, 1935 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ரப்பான் என்ற கிராமத்தில் பிரித்தானிய இந்தியாவில் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தார். இவரது மாமா சர்தார் சாகிப் தாரா சிங் சித்து பாட்டியாலா சிறைச்சாலை அதிகாரியாக இருந்தார். எனவே இவர் தனது கல்வியை தனது மாமா வீட்டில் தங்கி படித்தார். கல்லூரியில் தனது முதுகலை படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று பட்டம் பெற்றார். பின்னர் சண்டிகரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [1]

கல்வியாளர்

1963 இல், இவர் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். பின்னர் பேராசிரியர் [2] மற்றும் பஞ்சாபி துறையின் தலைவராகவும், மொழி பீடத்தின் தலைவராகவும் ஆனார். ஒரு வருடம் பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய விரிவுரையாளராகவும் இருந்தார். இவர் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் அடிக்கடி விரிவுரை ஆற்றினார். இந்த உலகளாவிய தொடர்புகளால் இவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது. அங்கு இலக்கியத்திற்கான இவரது பங்களிப்புகளுக்காக விருதுகளையும் பெற்றார்.

திருமணம்

இவர் சமூகவியலாளரும் கவிஞரும் பேராசிரியருமான பூபிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியல் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் முனைவர் சிம்ரஞ்சித் சிங் என்ற மகன் இருக்கிறார். திவானா தனது குடும்பத்துடன் பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழக வளாகத்தில் வசித்து வந்தார். பல்கலைக்கழக வளாகத்தின் வாழ்நாள் சக மற்றும் எழுத்தாளர் ஆவார்.

விருது

இலக்கியம் மற்றும் கல்விக்கான இவரது பங்களிப்பிற்காக 2004 இல் இந்த விருதைப் பெற்றிருந்தார்.[3] ஆனால் 14 அக்டோபர் 2015 அன்று, நாட்டில் அதிகரித்து வரும் 'சகிப்பின்மை'க்கு எதிராக தனது பத்மசிறீ விருதை துறந்தார். மேலும் இவரது "சாதனா" என்ற சிறுகதைக்காக பஞ்சாப் அரசின் விருது, "எஹோ ஹமாரா ஜீவ்னா" என்ற புத்தகத்திற்கான சாகித்ய அகாதமி விருது, கல்வி மற்றும் சமூக நல அமைச்சகத்தின் விருது, நானக் சிங் புருஸ்கர் மற்றும் சரஸ்வதி சம்மான் ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தலிப்_கவுர்_திவானா&oldid=18821" இருந்து மீள்விக்கப்பட்டது