தமிழ் நடை

ஒரு மொழியின் இலக்கணத்திற்கு அப்பாலும் உரைநடையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. உரைநடையின் கருத்துத் தெளிவிற்கு இந்த நெறிமுறைகள் உதவுகின்றன. இந்த நெறிமுறைகளைத் தொகுத்துத் தரும் நூல் நடைக் கையேடு (Manual of Style) என்று அழைக்கப்படுகிறது.

தமிழ் அறிஞர்கள் பலரின் துணையோடு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), தமிழ்ப் பல்கலைக் கழகம் (தஞ்சாவூர்), மொழி அறக்கட்டளை (சென்னை) ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து, 2001ஆம் ஆண்டு தமிழ் நடைக் கையேடு என்னும் நூலை வெளியிட்டன. 2004இல் அந்நூலின் மறு பதிப்பு வெளியானது. இந்நூலில் தரப்படுகின்ற நெறிமுறைகளை எளிமைப் படுத்தி வழங்குவதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.

நடை என்றால் என்ன?

நடை என்பதற்கு எழுத்தில் ஒருவர் தமக்கென்று ஏற்படுத்திக்கொண்ட பாணி என்பது எல்லோரும் அறிந்த பொருள். இதை ஒருவருடைய நடைப் பாங்கு என்னும் தனிநபர் சார்ந்த பொருளில் கொள்ளலாம்.

ஆனால், நடை என்பதற்கு ஒரு பொதுவான பொருளும் உண்டு. ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறை என்பதே இப்பொதுவான பொருள்.

நடையின் இரு பெரும் பிரிவுகள்

தமிழ் நடையில் இரு பெரும் பிரிவுகள் உண்டு. அவை முறையே செய்யுள்நடை, உரைநடை என்று வழங்கப்படுகின்றன. உரைநடையின் நெறிமுறைகளே இவண் விளக்கப்படுகின்றன.

உரைநடையின் நெறிமுறைகள்

கடந்த நூற்றாண்டுகளில் ஓலைகளில் எழுதப்பட்ட தமிழ் உரைநடையிலிருந்து தற்காலத் தமிழின் உரைநடை பெரிதும் வேறுபடுகிறது. எழுதும்போது நெறிகளைப் பின்பற்றுவதில் இன்று மிகுந்த வேறுபாடுகள் இருக்கின்றன. பல வேறுபாடுகள் எழுதுவோரின் அல்லது அச்சிடுவோரின் கவனக்குறைவு, அக்கறையின்மை ஆகியவற்றின் விளைவாக இருந்தாலும், வேறுசில தற்காலத் தமிழில் உள்ள நெகிழ்ச்சியைக் காட்டுகின்றன.

இருப்பினும், தற்காலத் தமிழின் பெரும்பான்மை வழக்குகள் அல்லது விரும்பத் தகுந்த வழக்குகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன. இவற்றை ஆறு தலைப்புகளில் வரிசைப்படுத்தலாம்:

1) நிறுத்தக்குறிகள் (தமிழ் நடை)
2) சொற்களைச் சேர்த்தும் இடம்விட்டும் எழுதுதல்
3) சந்தி
4) சொல் தேர்வும் பொருள் தெளிவும்
5) எழுத்துப்பெயர்ப்பு
6) அடிக்குறிப்பும் துணைநூற்பட்டியலும்

மேற்கூறிய பொருள்கள் தனித்தனி கட்டுரைகளாக விக்கியில் தரப்படுகின்றன. அவற்றைக் காண்க.

"https://tamilar.wiki/index.php?title=தமிழ்_நடை&oldid=15748" இருந்து மீள்விக்கப்பட்டது