தஞ்சை க. பொன்னையா பிள்ளை
தஞ்சை க. பொன்னையா பிள்ளை (1888 - சூன் 30, 1945) கருநாடக இசைக் கலைஞரும், இசைப் பேராசிரியரும் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது தொடக்கத்திலேயே இசை ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
தஞ்சை க. பொன்னையா பிள்ளை |
---|---|
பிறப்புபெயர் | க. பொன்னையா |
பிறந்ததிகதி | 1988 |
பிறந்தஇடம் | பந்தணைநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம் |
இறப்பு | சூன் 30, 1945 |
பணி | கருநாடக இசைக் கலைஞர், பேராசிரியர் |
கல்வி | PhD (பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், 1970) MA (இலங்கைப் பல்கலைக்கழகம், 1963) |
பெற்றோர் | கண்ணுசாமிப் பிள்ளை |
பிள்ளைகள் | க. பொ. கிட்டப்பா |
வாழ்க்கைக் குறிப்பு
பொன்னையா பிள்ளை 1888 ஆம் ஆண்டில் பந்தணைநல்லூர் என்னும் இடத்தில் கண்ணுசாமிப் பிள்ளை என்பவருக்குப் பிறந்தார். தந்தையார் பரோடாவில் நடன ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் தஞ்சை நால்வர் என அழைக்கப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தா, வடிவேலு ஆகியோரின் வழித்தோன்றல் ஆவார். தனது மாமா நடன ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் 15 ஆண்டுகள் இசை, நடனம், மிருதங்கம் ஆகிய கலைகளைக் கற்றுக் கொண்டார்.
இவரது மற்றொரு மாமா நல்லையப்ப பிள்ளை என்பவர் இவரை சென்னைக்கு அழைத்துச் சென்று பெரிய கலைஞர்களின் முன்னிலையில் பாடச் செய்தார். இதன் மூலம் அவர் பிரபலமான கலைஞரானார். பாலக்காடு அனந்தராம பாகவதரிடம் ஆறு மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்றார்.[1]
தந்தை கண்ணுசாமிப் பிள்ளை பரோடாவில் இருந்து திரும்பி வந்த போது அவருடன் பொன்னையா பிள்ளையும் தஞ்சாவூர் சென்றார். அங்கு தந்தையுடன் சேர்ந்து பல மாணவர்களுக்கு இசை, நடனம், மற்றும் மிருதங்கம் கற்றுக் கொடுத்தார். தந்தை இறந்த பின்னர், சிதம்பரத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ஆரம்பித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியரானார். மாணவர்களுக்கு கருநாடக இசை, மிருதங்கம் ஆகியவை கற்றுக் கொடுத்தார். பல சுவரஜதிகள், வர்ணங்கள், கீர்த்தனைகள், தில்லானாக்களை இயற்றி அவற்றை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார்.[1]
பொன்னையா பிள்ளையின் மகன் க. பொ. கிட்டப்பா பிள்ளை ஒரு பிரபலமான நடன ஆசிரியர் ஆவார்.
குறிப்பிடத்தக்க மாணவர்கள்
- சாத்தூர் ஏ. ஜி. சுப்பிரமணியம்
- டாக்டர் எஸ். இராமநாதன்
எழுதிய நூல்கள்
- இசை இயல் என்ற இசை இலக்கண நூலை எழுதினார்.
- தனது முன்னோர்களின் பாடல்களைத் தொகுத்து தஞ்சைப் பெருவுடையான் பேரிசை எனும் நூலை வெளியிட்டார்.
- இவர் எழுதிய பாடல்களைத் தொகுத்து ராஜா அண்ணாமலை தமிழிசைக் கருவூலம் என்ற பெயரில் ஒரு நூலாக இவரின் பிள்ளைகள் தஞ்சை க. பொ. கிருஷ்ணமூர்த்தி. தஞ்சை க. பொ. சிவானந்தம் ஆகியோர் 1949 ஆம் ஆண்டு வெளியிட்டனர்.
விருதுகள்
- சங்கீத கலாநிதி விருது, 1933. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை[2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Famous Carnatic Composers - PP
- ↑ "AWARDS - SANGITA KALANIDHI". மியூசிக் அகாதெமி. 23 டிசம்பர் 2018. https://musicacademymadras.in/awards/sangita-kalanidhi. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.
உசாத்துணை
பக்கம் எண்:633 & 634, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)