டி. எஸ். பகவதி

டி. எஸ். பகவதி என அழைக்கப்பட்ட தென்காசி சீனிவாச பகவதி (பிறப்பு: 1925) தமிழ்த் திரையிசைப் பின்னணிப் பாடகியும், வானொலிப் பாடகரும் ஆவார். பராசக்தி, இரத்தக்கண்ணீர், சிவகங்கை சீமை போன்ற பல திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

டி. எஸ். பகவதி
டி. எஸ். பகவதி
இயற்பெயர்/
அறியும் பெயர்
டி. எஸ். பகவதி
பிறந்ததிகதி 1925

வாழ்க்கைச் சுருக்கம்

டி.எஸ். பகவதி தமிழ்நாட்டில் தென்காசிக்கு அருகில் உள்ள இளந்தூரில் பிறந்தார். நான்காவது வகுப்பு வரை மட்டுமே படித்தார் பகவதி. பகவதியின் தந்தையின் மாற்றாந்தாயான கிருஷ்ணம்மா என்பவர் பின்னாளில் பகவதி இசை உலகில் நுழைவதற்குக் காரணமாக இருந்திருக்கிறார். பகவதிக்கு முறையான இசைப் பயிற்சி அளித்தார். தாத்தா நாராயண பாகவதர் காலாட்சேபமாகவும், பாட்டு எழுதிப் பாடுபவராகவும் இருந்ததால் சின்ன வயதிலேயே அவரது பாடல்களை வீட்டில் பாடி வந்தார் பகவதி. பகவதி திருச்சி வானொலியில் மாதம் 20 ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்தார். இந்தக் கால கட்டத்தில் 1942 இல் தமிழிசை இயக்கம் சூடு பெற்று வந்த நேரம் அது.

திரையுலகில்

அதே நேரம் டி. ஆர். மகாலிங்கம், ஜெயலட்சுமி சோடியாக நடித்த ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரின் நாம் இருவர் திரைப்படத்தில் பாடல்கள் பாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஜெயலட்சுமிக்கான பாடல்களை பகவதி பாடினார். தொடர்ந்து வேதாள உலகம், வாழ்க்கை (1949), ஓர் இரவு போன்ற படங்களில் பாடினார். சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி திரைப்படத்தில் ஐந்து பாடல்களைப் பாடினார்.

செல்லப் பிள்ளை (1955), திலகம் போன்ற ஏ.வி.எம். இன் படங்களில் பாடல்கள் பாடியதோடு 50களின் இடைப்பகுதியில் பகவதி ஏ.வி.எம். ஐ விட்டு வெளியேறி, தனிப்பட்ட முறையில் சில திரைப்படங்களில் பாடினார். இரத்தக்கண்ணீர் படத்தில் இரண்டு பாடல்களைப் பாடினார். கண்ணதாசனின் சிவகங்கை சீமையில் "தென்றல் வந்து வீசாதோ தென்பாங்கு பாடாதோ" என்ற பிரபலமான பாடலைப் பகவதி பாடினார். இதன் பின்னர் திரையுலகை விட்டு விலகி மீண்டும் வானொலியில் பாடுவதற்குச் சென்றார்.

பகவதி பாடிய சில பாடல்கள்

  • இகவாழ்விலே ஆனந்தம் (நாம் இருவர்)
  • வசந்தமும் மாலை (நாம் இருவர்)
  • சோலை அழகினில் மாலை வசந்தமே துள்ளி விளையாடுதே (வேதாள உலகம், 1948)
  • ஓடி விளையாடு பாப்பா (வேதாள உலகம்)
  • பொல்லாதனத்தை என்ன சொல்வேன் (ஓர் இரவு)
  • வாழ்வினிலே ஒளி ஏற்றும் தீபம் (பராசக்தி)
  • பூமாலையே நீயே (பராசக்தி)
  • தென்றல் வந்து வீசாதோ தென்பாங்கு பாடாதோ (சிவகங்கைச் சீமை)
  • கனவு கண்டேன் (சிவகங்கைச் சீமை)
  • விடியும் விடியும் என்றிருந்தோம் (சிவகங்கை சீமை)
  • ஒளி படைத்த கண்ணினாய் வா (ரங்கூன் ராதா)
  • பொருளே இல்லார்க்கு தொல்லையா (பராசக்தி)
  • அழாதே பாப்பா அழாதே (பெற்ற மகனை விற்ற அன்னை)
  • தட்டிப் பறித்தார் என் வாழ்வை (ரத்தக்கண்ணீர்)

உசாத்துணை

  • திரையிசை மேதைகள், தொகுப்பு: மோனா, வீரகேசரி, செப்டம்பர் 25, 2011
"https://tamilar.wiki/index.php?title=டி._எஸ்._பகவதி&oldid=8911" இருந்து மீள்விக்கப்பட்டது