ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (ஜனவரி 31, 1942) தமிழ்நாட்டில் புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருக்கோகர்ணம் என்ற சிற்றூரில் ஞானாலயா ஆய்வு நூலகம் என்ற தனியார் நூலகத்தை தன்னுடைய மனைவியுடன் இணைந்து நடத்தி வருபவர் ஆவார்.

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி
தேடலில் தெளியும் திசைகள்

பிறப்பு

ஜனவரி 31, 1942இல் இவர் பிறந்தார். இவரது பெற்றோர் பாலசுப்பிரமணியன், மீனாட்சி ஆவர். புதுக்கோட்டையில் ஆரம்பக் கல்வியைத் துவங்கி இளங்கலை அறிவியல், முதுகலை தமிழ் இலக்கியம் படித்துவிட்டு, பின் கல்வியியலில் முதுகலைப்பட்டம் (எம்.எட்) நிறைவு செய்தார். [1] ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான இவர் 1959-இல் தொடங்கி அரிய வகை நூல்களைச் சேகரித்து வருகிறார். [2]

ஆர்வம்

இளம் வயது முதல் இவருக்கு நூல் சேமிக்கும் பழக்கம் இவருடைய தந்தை மூலமாக உருவாகி, இந்தியாவின் சிறந்த தனியார் நூலகங்களில் ஒன்றான ஞானாலயாவை நடத்திவருகின்றார். இவருடைய நூல்களைச் சேகரிக்கும் ஆர்வத்திற்கு ஏற்றபடி இவருடைய மனைவி திருமதி டோரதி புத்தக ஆர்வலராவார்.[1]

சொற்பொழிவுகள்

நினைவாற்றல் மிக்க இவர் மிகச் சிறந்த தமிழார்வலரும், சொற்பொழிவாளருமாவார். மகாத்மா காந்தி, விவேகானந்தர், மகாகவி பாரதியார் உள்ளிட்ட பலரைப் பற்றியும் இவர் சொற்பொழிவாற்றியுள்ளார். பொதிகைத் தொலைக்காட்சியில் நம் விருந்தினர் பகுதியில் இவரது பேட்டி இடம் பெற்றுள்ளது.

விருதுகள்

  • இலட்சிய தம்பதியர் (திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து) (அன்பு பாலம், குடியரசு தின வைர விழா, 26.1.2009)
  • நூலக நுண்ணறிவாளர் (மலேசியத் தமிழ் வாசகர் தேசிய மாநாடு, வளர்தமிழ் வாசகர் இயக்கம், பினாங்கு, மலேசியா, 15/16.8.2009)
  • பாரதி இலக்கியச் செல்வர் (திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து) (ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம், சென்னை, 2011)

தேடலில் தெளியும் திசைகள்

தேடலில் தெளியும் திசைகள் [3] என்ற நூல் தஞ்சை ப்ரகாஷ், ல.கி.ராமானுஜம், கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் உள்ளிட்ட பல இலக்கியவாதிகள் கிருஷ்ணமூர்த்தி டோரதி இணையரின் குடும்ப நண்பர்கள் கிருஷ்ணமூர்த்திக்கு எழுதிய கடித ஆவணங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இலக்கியவாதிகள் இவரிடம் மேற்கொண்ட விவாதங்களின் ஒரு தொடர்நிகழ்வாக இக்கடிதங்கள் அமைந்துள்ளன. ள்ஞானாலயா நூலகத்தைப் பார்வையிட்டுதிற்கு வந்து பாராட்டியவர்களின் கருத்துக்களைக் கொண்டு அமைந்துள்ளது. பிரபலமான எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தந்துள்ள பதிவுகளைக் காணும்போது இந்நூலகத்தின் இன்றியமையாமையை உணரமுடிகிறது. [4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 சென்னை புத்தகச் சங்கமம் சார்பில் புத்தகர் விருது வழங்கப்பட்ட சான்றோர் பெருமக்களின் வாழ்க்கைக்குறிப்பு, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, விடுதலை, 20.4.2013
  2. புதுக்கோட்டையில் 40,000 புத்தகங்களுடன் தலைமை ஆசிரியர் நடத்தும் நூலகம், மாலை மலர், 15.5.2003
  3. தனிநபரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என்பதற்கு ஞானாலயா நூலகம் சான்று, தினமணி, ஆகஸ்டு 17, 2015
  4. தேடலில் தெளியும் திசைகள், தொகுப்பும் பதிப்பும் வைகறை, பவள விழாக்குழு, புதுக்கோட்டை, 2015

மேலும் பார்க்க

  • கல்வி சேவை குடும்பம், தினகரன், 6,8,1999
  • அரவிந்த் சுவாமிநாதன் சந்திப்பு, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, தென்றல், செப்டம்பர் 2007
  • ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் நூலாலயம், ஒரு பொதுவுடைமைவாதியின் பொக்கிஷம், ஓய்வு பெற்ற ஆசிரியரின் அரிய பணி, விடுதலை, 20.10.2012
  • ஊரகாளி, சாதனை மனிதர்கள், இன்னொரு உ.வே.சா. பல்சுவை காவியம், மார்ச் 2015

வெளி இணைப்புகள்