சேரன் செங்குட்டுவன்

சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், அவன் பட்டத்து அரசியான சோழ நாட்டு இளவரசி மணக்கிள்ளிக்கும் பிறந்த மகன். பதிற்றுப்பத்து பதிகம் இவனது தாயின் தந்தை பெயரை ஞாயிற்றுச் சோழன் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இவனது தாயின் பெயர் 'சோழன் மணக்கிள்ளி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] மணக்கிள்ளி என்னும் தாயின் பெயரை 'நற்சோணை' என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

சிறுபாணாற்றுப்படை தரும் செய்தி

இயல்தேர்க் குட்டுவன் (சேரன் செங்குட்டுவன்) வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்தான் என்றும், வஞ்சியில் இருந்துகொண்டு ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறது.

காலம்

இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால், செங்குட்டுவனும் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.

சங்க கால புலவர் மாமூலனார் பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட நந்தர்கள் அவர்களுக்கு பிறகு மகதத்தை ஆண்ட மௌரியர்களின் தமிழக படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார். மாமூலனார் முதிய வயதில் சோழன் கரிகாலன் பற்றி பாடியுள்ளார். பரணர் தன் இள வயதில் கரிகாலன் பற்றி பாடியுள்ளார். சேரர்களில் கரிகாலனால் நெடுஞ்சேரலாதன் வெல்லப்பட்ட பிறகு சில காலம் கழித்து அரியணை ஏறுபவன் சேரன் செங்குட்டுவன். செங்குட்டுவன் பற்றி பரணர் பாடியுள்ளார். இதன் மூலம் கரிகாலன் சேரனை விட சில வருடம் முதியவன் என்பது தெளிவாகிறது. சேரன் செங்குட்டுவன் காலம் பொ.ஊ.மு. 3 ஆம் நூற்றாண்டு ஆகும்.

தமிழ் இலக்கியங்களில், சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்டறிந்த சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகாது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று, இமயமலையில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று, எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும், மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து, அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும், கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.

மேற்கோள்கள்

  1. 'திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள்' என்னும் தொடர் ஞாயிறு குலத்துச் சோழன் என்பதை விளக்குவதாகும். இதனைச் சோழன் பெயர் 'ஞாயிற்றுச் சோழன்' எனச் சிலர் குறிப்பிடுவர். சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம், வாழ்த்துக்காதை, உரைப்பாட்டு மடை 1

வெளி இணைப்புகள்

  • ஸ்ரீசந்திரன், ஜெ., சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2001 (ஒன்பதாம் பதிப்பு).
"https://tamilar.wiki/index.php?title=சேரன்_செங்குட்டுவன்&oldid=129973" இருந்து மீள்விக்கப்பட்டது