செ. து. சஞ்சீவி

புகைப்படத்திற்கு நன்றி - விடுதலை

செ. து. சஞ்சீவி
செ. து. சஞ்சீவி
இயற்பெயர்/
அறியும் பெயர்
செ. து. சஞ்சீவி
பிறந்ததிகதி 17, அக்டோபர், 1929
இறப்பு 20, மே, 2023
அறியப்படுவது தமிழ்க் கவிஞர், பதிப்பாளர்

செ. து. சஞ்சீவி (17, அக்டோபர், 1929- 20, மே, 2023) என்பவர் ஒரு தமிழ்க் கவிஞர், பதிப்பாளர் ஆவார். இவர் கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைகளையும், பிற படைப்புகளையும் தேடி அச்சுக்குக் கொண்டுவந்து அவரின் பல மரிமாணங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். இலக்கிய விமர்சகர் தி. க. சிவசங்கரன் இவரை தமிழ்ஒளிக்குக் கிடைத்த சடையப்ப வள்ளல் என்று பாராட்டினார்.[1]

முன் வாழ்க்கை

சஞ்சீவி 17, அக்டோபர், 1929இல் துரைசாமி - அங்கம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். இளம்வயதிலேயே பெரியாரின் பேச்சிலும், பொதுவுடமைத் தலைவர் கே. எஸ். பார்த்தசாரதியின் பேர்க் குணத்திலும் கவரப்பட்டார்.

தமிழ் ஒளியின் புகழ் பரப்பல்

சஞ்சீவி பாரதிதாசன் கவிதைகளில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அவர் வழியாக கவிஞர் தமிழ்ஒளியைக் கண்டடைந்தார். தமிழின் முதல் தலித் காவியம் என்று கூறப்படும் தமிழ் ஒளியின் வீராயி காவியத்தின் கவிதை வரிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதன் பின்னர் சஞ்சீவி அவரிடம் நட்புணர்வு கொண்டார். கவிஞர் தமிழ்ஒளியின் திடீர் மரணம் சஞ்சீவியைப் பெரிதும் பாதித்தது. அப்போது தமிழ் ஒளியின் கவிதைகள் முழுத் தொகுப்பும் வெளிவந்திருக்கவில்லை. இதனால் சஞ்சீவி தமிழ்ஒளியின் கவிதைகளைத் தேடித் திரட்டி பதிப்பிக்கத் தொடங்கினார். மு. வரதராசனார், க. அப்பாதுரையார் போன்ற தமிழறிஞர்களிடம் அந்த நூல்களுக்கு முன்னுரை பெற்று கவிஞரின் புலமையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்.

தமுஎகச, கலை இலக்கிய பெருமன்றம், போன்றவற்றின் உதவியுடன் தமிழ்ஒளியின் பிறந்த நாள், நினைவு நாள் கூட்டங்களை ஒவ்வொரு ஆண்டும் நடத்திவந்தார். புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உதவியுடன் தமிழ்ஒளியின் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வழிவகுத்தார்.[2]

குடும்பம்

செ. து. சஞ்சீவிக்கு மனைவியும் மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூப்பின் காரணமாக சஞ்சீவி தன் 94 ஆவது வயதில் 2023 மே 20 அன்று சென்னையில் இறந்தார்.[3]

எழுதிய நூல்கள்

  • தமிழ்ஒளி நினைவாக சில பதிவுகள் (தமிழ் ஒளியின் ஆக்கங்களை வெளியிட்ட வரலாறு)
  • தமிழ்ஒளி (சாகித்திய அகாதமி வெளியீடு)
  • தமிழ்ஒளி: கவிதையும் வாழ்வும்
  • தமிழறிஞர் பார்வையில் தமிழ்ஒளி (தொகுப்பு நூல்)
  • தமிழ்ஒளி காவியங்கள் ஓர் அறிமுகம்

பதிப்பித்த தமிழ்ஒளியின் நூல்கள்

  • தமிழ்ஒளியின் கவிதைகள் (1964)
  • கவிஞனின் காதல்
  • நிலைபெற்ற சிலை
  • வீராயி
  • மே தின ரோஜா
  • கோசலக்குமாரி
  • மாதவி காவியம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=செ._து._சஞ்சீவி&oldid=4263" இருந்து மீள்விக்கப்பட்டது