செ. சிவஞானசுந்தரம்

செ. சிவஞானசுந்தரம்
Nanthy.jpg
மறைவு 04-06-2005
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்,
வைத்தியர்
கல்வி கொழும்பு
பல்கலைக்கழகம்
பணி வைத்தியர்,


நந்தி என்கிற செ. சிவஞானசுந்தரம் (இறப்பு: சூன் 4, 2005) சிறுகதை மற்றும் நாவல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த ஈழத்து எழுத்தாளர் ஆவார். வைத்திய கலாநிதியான இவர் வைத்தியம்சார் நூல்களையும் எழுதியுள்ளார்.

வரலாறு

பேராசிரியர் சிவஞானசுந்தரம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1955 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து 1967 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நோய்த்தடுப்பு மருத்துவருக்கான பட்டப்படிப்பையும் பின்பு 1971 இல் கலாநிதிக்கான (இந்தியத் தமிழ்: முனைவர்) பட்டப்படிப்பையும் முடித்தார். 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ விஞ்ஞானக் கலாநிதி பட்டத்தை அளித்துக் கௌரவித்தது.

அரசாங்கத்திற்குரிய சுகாதார சேவையின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறுமட்டங்களில் 1966 ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார். 1967 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகநல மருத்துவ பிரிவில் இணைந்து துணைப் பேராசிரியராக உயர்ந்தார். அத்துடன் மருத்துவ விஞ்ஞானப்பிரிவின் தலைமை நிர்வாகஸ்தராகவும் மேற்படிப்பிற்கான சமூகநல மருத்துவப் பீடத்தின் தலைமை அதிகாரியாகவும் விளங்கினார்.

1978 ஆம் ஆண்டு யாழ் மருத்துவப் பீடம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது சமுகநல மருத்துவப் பீடத்தின் முதல் பேராசிரியராக பதவியேற்றது முதல் தனது கடைசி மூச்சுவரை அப்பதவியிலேயே கடமையாற்றினார்.

1984 ஆம் ஆண்டிலிருந்து 1988 ஆம் ஆண்டு வரை மருத்துவப் பீடத்தின் தலைவராக திகழ்ந்ததுடன் யாழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆலோசனை சபையின் அங்கத்தினராகவும் 1979 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார்.

1981 ஆம் ஆண்டு ஜோர்டான் மாநகரத்தின் சுகாதார மந்திரி சபையில் மருத்துவ உதவியாளர்களுக்கு அறிவுரையாளராக பணிபுரிந்தார். அத்துடன் மருத்துவ உதவியாளர்களுக்கான வழிகாட்டிப் புத்தகமொன்றையும் தயார் செய்து அராபிய மொழியில் மொழிபெயர்த்தார்.

உலக சுகாதார நிறுவனத்திற்காக 1985 ஆம் ஆண்டிலிருந்து 1999 ஆம் ஆண்டுவரை மலேசியா, பங்களாதேஷ், மொங்கோலியா, இந்தியா, மியன்மார், சிம்பாப்வே, வட கொரியா ஆகிய நாடுகளில் சுகாதார ஆராய்ச்சிக்கூடங்களில் சர்வதேச அறிவுரையாளராக பணிபுரிந்தார். இவர் ஆற்றிய சேவை அளப்பரியது. அத்துடன் பல ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக இருந்து பலவற்றை தலைமைதாங்கியும் நடாத்தினார்.

இலக்கியப்பணி

தனது 13 வயதிலே தொடங்கி தமிழிலும் ஆங்கிலத்திலும் மிக ஆர்வமுள்ள எழுத்தாளராக விளங்கினார். அவர் தனது 19 ஆவது வயதில் வீரகேசரி பத்திரிகையில் “சஞ்சலம் சந்தோசம்” என்ற முதல் குறுங்கதையை எழுதினார். 1979 இல் தினகரனில் தொடராக வெளிவந்த இவரது நம்பிக்கைகள் என்ற புதினம் 1989 இல் நூலாக வெளிவந்தது. இவர் எழுதிய மூன்று கதைகளுக்கு இலங்கையின் சாகித்திய சபை விருதும் இன்னொரு கதைக்கு இராஜ விருதும் கிடைத்தது. 1998 ஆம் ஆண்டிலிருந்து சாய் மார்க்கத்தின் பதிப்பாசிரியராக இருந்தார்.

இவர் ஆங்கிலத்தில் எழுதிய கூடுதலான புத்தகங்கள் மருத்துவத்துடன் தொடர்புடையவை. இவர் எழுதிய “ஆராய்ச்சிகள்” என்ற நூல் இரு பதிவுகளைக் கொண்டது. இந்நூல் இலங்கையின் எல்லா மருத்துவ கல்லூரிகளிலும் உபயோகிக்கப்படுவதுடன், ஆராய்ச்சிக்கல்வி பயிலும் மாணவர்களாலும் பாவிக்கப்படுகின்றது. இத்துடன் மட்டுமல்லாது மருத்துவம் சம்பந்தமாகவும் மக்களின் உடல்நலம் சம்பந்தமாகவும் 50 இற்கும் மேற்பட்ட நூல்களை தேச, சர்வதேசரீதியில் வெளியிட்டுள்ளார். 16 நூல்களை தமிழிலும், 4 நூல்களை பாமர மக்களிற்கான மருத்துவ நூல்களாகவும், 2 புத்தகங்களை சிறுவர்களுக்காகவும், மேலும் 2 புத்தகங்களை ஆன்மீகத்திற்குரிய நூல்களாகவும், 1 புத்தகத்தை ஆசிரியர்களுக்காக மனிதனின் உயர்வு என்ற சத்திய சாயி கல்வி நூலையும் வெளியிட்டார்.

கிரிபிட்டியா என்ற இடத்தில் வேலை செய்த போது அங்கிருந்த மருத்துவச்சியை கதாபாத்திரமாக வைத்து “சிங்களத்து மருத்துவச்சி” என்ற நூலை எழுதினார். அத்துடன் கொலரா நோயை கட்டுப்படுத்திய அனுபவத்தை வைத்து “தங்கச்சியம்மா” என்ற நாவலை எழுதினார். நாவலப்பிட்டியில் வேலை செய்த போது அங்குள்ள தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களை வைத்து “மலைக்கொழுந்து” என்ற நாவலை எழுதினார்.

தலைசிறந்த கல்விமான் என்பதுடன் திறமைமிக்க சிருஸ்டிகர்த்தா என்றும் கூறக்கூடியதாக விளங்கினார். பல வருடங்களாக இலங்கை வானொலியில் வானொலி வைத்தியராக சேவையாற்றினார்.

கலை முயற்சிகள்

80 மேடை நாடகங்களிலும் கூடுதலாக நடித்தார். 1952 ஆம் 1953 ஆம் ஆண்டுகளில் 25 தமிழ் வானொலி நாடகங்களில் நடித்துள்ளார். தர்மசேன பதிராஜாவால் இயக்கப்பட்ட பொன்மணி என்ற ஆரம்ப காலத்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரமாக நடித்தார்.

இவரது நூல்கள்

தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.

சிறுகதைத் தொகுப்புகள்

  • ஊர் நம்புமா - 1966
  • கண்களுக்கு அப்பால்
  • நந்தியின் கதைகள் - 1994

சிறுவர் நூல்கள்

  • உங்களைப் பற்றி
  • தம்பி தங்கைக்கு' (சிறுவர் அறிவு நூல்)

நாவல்கள்

  • மலைக்கொழுந்து – 1965
  • தங்கச்சியம்மா
  • நம்பிக்கைகள் – 1992

நாடக நூல்

  • குரங்குகள்

விருதுகள்

  • இலங்கை சாகித்திய மண்டலப்பரிசு - (1965, மலைக்கொழுந்து நாவலுக்கு)
  • இலங்கை சாகித்திய மண்டலப்பரிசு - (1992, நம்பிக்கைகள் நாவலுக்கு)
"https://tamilar.wiki/index.php?title=செ._சிவஞானசுந்தரம்&oldid=2653" இருந்து மீள்விக்கப்பட்டது