செரப்பணஞ்சேரி வீமீசுவரர் கோயில்

செரப்பணஞ்சேரி வீமீசுவரர் கோயில் (Veemeeswarar Temple, Serapanancheri) என்பது தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் செரப்பணஞ்சேரி என்னுமிடத்தில் உள்ளது. பெருவஞ்சூர், ராஜேந்திரசோழ நல்லூர், கேசரிநல்லூர் ஆகிய பெயர்களில் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திற்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே காணப்படுகின்ற மாடக்கோயில்களில் இக்கோயில் 18ஆவது கோயிலாகும்.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக வீமீசுவரர் உள்ளார். இறைவி சுவர்ணாம்பிகை ஆவார். மண்ணிவாக்கம் மண்ணீசுவரர், செரப்பணஞ்சேரி வீமீசுவரர் கோயில்கள் ஒரே சிற்பியால் கட்டப்பட்டவையாகக் கருதப்படுகின்றன. மூலவர் ஆறடி உயர லிங்கத் திருமேனியாக உள்ளார். இடப்பாகத்தில் இறைவி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளார்.சுவாமிக்கு எதிரில் யுகத்திலிருந்து வெளிவருவது போல் ஒரு கல்லில் சிவன் நின்ற நிலையில் உள்ளார்.[1]

அமைப்பு

இக்கோயிலில் இரு நந்திகள் மூலவரை நோக்கிய வகையில் உள்ளன.கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறை மண்டபத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. உலக மக்களின் தோஷங்களையும், பாவங்களையும் நீக்குவதற்காக சூரியன் சரியான சிவன் கோயிலைத் தேடி வந்தான். அவ்வாறு செல்லும்போது ஒரு முறை ரத சப்தமி காலத்தில் தன்னுடைய தேரின் சக்கரத்தை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திருப்பினான். அப்போது இவ்விடத்திற்கு வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான். சூரியன் வழிபட ஆரம்பித்த நிலையில் அனைவரும் வழிபட ஆரம்பித்தனர். விண்மீன்களும் அவ்வாறு வழிபடவே இங்குள்ள இறைவர் விண் மீன் ஈசுவரர் என்று அழைக்கப்பட்டு பின்னர் வீமீசுவரர் ஆனார். இதுபோல சுக்கிரன் தனக்காக ஒரு இடம் வேண்டுமென்று இறைவியிடம் வேண்ட அவள் தன் ஆபரணத்தைக் கழற்றித் தந்து நவக்கிரகத் தலைவனே வந்து வழிபடும்போது தனியாக அவன் ஒரு இடம் கோரக்கூடாது என்றார். அதனைக் கேட்ட சுக்கிரன் இறைவியின் சொல் கேட்டான். தான் பெற்றவாறு மற்றவர்களும் இறைவியிடம் சுவர்ணம் ஆன செல்வத்தைப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டான். அதனால் இறைவி சுவர்ணாம்பிகை என்ற பெயரைப் பெற்றார்.[1]

திருவிழாக்கள்

மாதப் பிரதோஷம், மகா சிவராத்திரி, கார்த்திகை, சோம வாரம், தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்