செங்கிலாகம் பத்ரேசுவரி அம்மன் ஆலயம்

செங்கிலாகம் அருள்மிகு பத்ரேசுவரி அம்மன் ஆலயம் குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் விளவன்கோடு வட்டத்தில் அமைந்துள்ள அதங்கோட்டில் செங்கிலாகம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையானது இவ்வாலயம். பழைய கோவில் 1992-இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அழிந்ததையடுத்து கட்டப்பட்ட புதுக்கோவில் தான் இப்போது உள்ளது. இக்கோயில் "செங்கிலாகம் குடும்பத்தாருக்கு" சொந்தமானது.

இக்கோயிலில் பத்ரேசுவரி அம்மன், குலசாவு, இசக்கியம்மன் மற்றும் நாகரக்சி ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவில் குலதெய்வ வழிபாட்டு மரபைச் சார்ந்தது.

அமைவிடம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குழித்துறைக்கு மேற்கே அதங்கோட்டில் செங்கிலாகம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையானது.

தல வரலாறு

செங்கிலாகம் குடும்பத்தாரின் தற்போதைய தலைமுறைக்கு பதினான்கு தலைமுறைக்கு முன்னால் செங்கிலாகம் குடும்பத்தை சேர்ந்த பெரியோர்கள் தேங்காப்பட்டணம் அருகே உள்ள குஞ்சாகோடு என்னும் இடத்தில் வாழ்ந்து வந்தனர். அப்போது அங்கு பரவிய காலரா நோய்க்கு பயந்து நதிக்கரை பகுதியான செங்கிலாகத்தில் வந்து குடியேறி அவ்விடத்தில் கோயில் அமைத்து பத்ரேஸ்வரி அம்மனை குலதெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். அந்நாட்களில் திருவிழாவின் போது செங்கிலாகம் குடும்பத்தை சேர்ந்த பெரியோர்கள் கோயிலுக்கு சொந்தமான வில்லையும், குடத்தையும் பயன்படுத்தி வில்லுப்பாட்டு பாடுவார்கள். தொடக்கத்தில் அருள்மிகு பத்ரேஸ்வரி அம்மன், குலசாவு, இசக்கியம்மன் ஆகியோருக்கு மட்டும் சன்னதிகள் இருந்தது. தற்போது கணபதி, சாஸ்தா, சிவன், நகரக்சி ஆகியோர் உப தெய்வங்களாகவும் மல்லன் கருங்காலி வாதை, பூதத்தான், மந்திர மூர்த்தி, கன்னி ஆகியோர் சிறு தெய்வங்களாகவும் உள்ளனர்.

திருவிழா

ஆண்டுதோறும் சித்திரை மாதம்பௌர்ணமி தினத்தில் மூன்று நாட்கள் விழா எடுப்பது வழக்கமாக உள்ளது. முதல் நாள் திருவிழாவின் பொது கணபதி ஹோமம், சுத்தி கலச பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. இரண்டாம் நாள் திருவிழாவின் போது சிறப்பு நாதஸ்வர கச்சேரி, வில்லிசை ஆகியவை நடைபெறுகின்றன. நள்ளிரவு பெரிய படுக்கை மற்றும் பூப்படையல் ஆகியவை நடைபெறும். மூன்றாம் நாள் திருவிழாவில் பூப்படை மற்றும் மஞ்சள்பால் நீராட்டு ஆகியவை சிறப்பு வாய்ந்தது ஆகும்.