சுப்பிரமணிய சிவா
சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 - 23 சூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.[1] அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மண சிவா |
---|---|
பிறந்ததிகதி | 4 அக்டோபர் 1884 |
பிறந்தஇடம் | சென்னை மாகாணம், ஆங்கில அரசு |
இறப்பு | சூலை 23, 1925 | (அகவை 40)
தேசியம் | இந்தியன் |
இளமை
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் 1884, அக்டோபர் 4 ஆம் நாள் 'சிவம்' என்றும், 'சிவா' என்றும் அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா பிறந்தார்.[2] இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள் (நாகலட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பராமன். 1903 இல் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் இவரது பெயருடன் சிவம் என்ற பெயரையும் சேர்த்ததால் சுப்ரமணிய சிவா என்று அழைக்கப்பட்டார். இவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாளென்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோதரரும் இருந்தனர். 1893 திண்ணைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்பு தனது 9 வது வயதில் காட்டுச்செட்டி மண்டபத்தில் ஆரம்ப கல்வி கற்றார். பின் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உணவருந்திக்கொண்டே மேற்படிப்பு படித்தார். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். 1899-இல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1902-இல் திருவனந்தபுரத்திலுள்ள கொட்டாரக் கரையில் நாயர் வகுப்பைச் சேர்ந்த சதானந்த சுவாமிகள் என்ற ராஜயோகியைச் சந்தித்து, அவரிடம் சிலகாலம் ராஜயோகம் பயின்றார். 1906 சிவாவின் தந்தை மறைவெய்தினார்.
1904-1905-ல் நடந்த ரஷ்ய-ஜப்பானியப் போரில் பெரிய நாடான உருஷ்யாவை ஜப்பான் தோற்கடித்தது. இது உலகெங்கும் காலனியாட்சியாளர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. 1905 இல் கர்சான் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் வந்தேமாதரம் எனும் முழக்கங்கள் எழுந்தன.
அரசியல் செயல்பாடும், கைதும்
சிவா 1906-07 திருவனந்தபுரத்தில் 'தர்ம பரிபாலன சமாஜம் அமைப்பை உருவாக்கினார், இளைஞர்களை கூட்டுவித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி தேசபக்தி ஊட்டும் பணியில் ஈடுபட்டார். அரசாட்சிக்கு எதிராக இவரின் செயல்பாடுகள் அமைந்ததால் இவர் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு சிவா கால் நடையாகவே ஊர் ஊராய்ச் சென்று தேசிய பிரச்சாரம் செய்ய முற்பட்டார். தூத்துக்குடிக்கு வந்தபொழுது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' இவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார். 1908இல் சிதம்பரனாரும், சிவாவும் இணைந்து நெல்லை சீமையில் சுற்றுப்பயணம் செய்து தேசிய பரப்புரை செய்தனர். மார்ச்சு 12, 1908இல் சிவா ராஜத்துரோகக் குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார். பின்னர் நவம்பர் 2, 1912இல் விடுதலைச் செய்யப்பட்டார்.
இதழ் துவக்கம்
பிறகு சென்னையில் குடியேறினார். எழுத்துத் தொழிலை கைக்கொள்ள கருதி, ஞானபாநு என்ற மாத இதழைத் துவக்கினார். இதற்கிடையில் 15.5.1915 இல் சிவாவின் மனைவி மீனாட்சி மரணமடைந்தார். ஞானபாநு நின்றதன் பின்பு, 1916இல் 'பிரபஞ்ச மித்திரன்' என்ற வார இதழை ஆரம்பித்து சிலகாலம் நடத்தினார். இதில் 'நாரதர்' என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதிவந்தார். எழுத்துலகில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். சுமார் இருபது நூல்களுக்கு மேலாக எழுதினார்.
மீண்டும் கைது
1920 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதியாகச் சென்றார். 1921 வாக்கில் துறவி போன்று காவியுடை அணியத்துவங்கினார். ஸ்வதந்த்ரானந்தர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார். பாரத மாதாவுக்குக் கோயில் ஒன்று கட்டி முடிக்கத் திட்டம் வகுத்தார். நவம்பர் 17, 1921இல் இரண்டாவது முறையாக, ராஜத்துரோகக் குற்றத்துக்காகச் சிவாவின் மீது அரசு வழக்குத் தொடுத்தது, இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்சி சிறையில் தொழு நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டார். படுத்த படுக்கையாகி விட்ட நிலையில் சனவரி 12, 1922இல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான சிவா திரும்பவும் சென்னைக்கு வந்து, சில நாட்கள் தங்கினார். உடல்நிலை சற்று தேறியதும், திரும்பவும் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். இதன் காரணமாக, ஓராண்டுகாலம் நன்னடத்தை பிணை கேட்டு அரசு வழக்குத் தொடுத்தது. 1923 ஆம் ஆண்டு துவக்கத்தில் தருமபுரி, கோவை, பாப்பாரப்பட்டி முதலான ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சிவாவின் நெறுங்கிய நண்பர் பாப்பாரப்பட்டி வள்ளல் தியாகி சின்னமுத்து முதலியார்[3] கொடுத்த பொருளுதவி மூலம் 6 ஏக்கர் நிலம் வாங்கி பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவ்வூரில் நிலம் பெற்று அதற்கு பாரதபுரம் என்று பெயர் சூட்டினார். கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சித்தரஞ்சன்தாசை கொண்டு செய்வித்தார். 1924இல் காசியில் வசித்து வந்த இவரது தாயார் காலமானார். இவருக்கு வந்திருந்த தொழுநோயைக் காரணம் காட்டி ரயில் பயணம் செய்ய ஆங்கில அரசு தடைவிதித்தது.
எழுதிய நூல்கள்
- மோட்ச சாதனை ரகசியம்
- ஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தர் ஆத்மஞான ரகசியம்
- அருள் மொழிகள்
- வேதாந்த ரகஸ்யம்
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம்
- ஞானாம்ருதமென்னும் பிரஹ்மானந்த சம்பாஷணை
- சச்சிதானந்த சிவம்
- பகவத்கீதா சங்கிலகம்
- சங்கர விஜயம்
- ராமானுஜ விஜயம்
- சிவாஜி (நாடகம்)
- தேசிங்குராஜன் (நாடகம்)
- நளின சுந்தரி (அ) நாகரிகத்தின் தடபுடல் (கதை)
இறப்பு
பாரதமாதா கோயில் திருப்பணிக்காக நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், உடல்நிலை மிக மோசமடைந்ததால் மதுரையிலிருந்து, பாப்பாரப்பட்டியை 22.7.1925 இல் வந்தடைந்தார். 23.7.1925 வியாழக்கிழமை காலை ஐந்து மணிக்கு, தம்முடைய 41ஆவது வயதில் சிவா மறைந்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "வீரத்துறவி சுப்பிரமணிய சிவா...!". 2019-07-23. http://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/07/23130201/Veerathiravi-Subramania-Siva.vpf.
- ↑ "சுப்பிரமணிய சிவா 10" (in ta). https://www.hindutamil.in/news/blogs/61594-10.html.
- ↑ "இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா மரணமடைந்த நாள்: 23-7-1925" இம் மூலத்தில் இருந்து 2021-06-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210607114305/https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2019/07/23034851/1252436/subramaniya-siva.vpf.
- ↑ 100010509524078 (2018-07-23) (in English). இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா மரணமடைந்த நாள் - 23-7-1925. https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2018/07/23043749/1178429/Indian-freedom-fighter-Subramania-Siva.vpf. பார்த்த நாள்: 2021-03-26.
வெளி இணைப்புகள்
- சுப்பிரமணிய சிவாவிடம் பயந்து ஓடிய ஆசிரியர்!
- தியாக சீலர் சுப்பிரமணிய சிவா கட்டுரைகள்,1987 பாலாஜி புத்தக நிலையம்.
- தகடூர் வரலாறும் பண்பாடும், இரா. இராமகிருட்டிணன்