சுப்பிரமணியன் பூபதி

சுப்பிரமணியன் பூபதி (Subramanian Bhupathy)(1962-2014) என்பவர் தமிழ்நாட்டு ஊர்வினவியல் ஆய்வாளர் ஆவார். இவர் கோயம்புத்தூரில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் முதன்மை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.[2]

சுப்பிரமணியன் பூபதி
பிறப்பு(1932-07-17)சூலை 17, 1932 [1]
இறப்புஏப்ரல் 28, 2014(2014-04-28) (அகவை 51)
தேசியம்இந்தியர்
பணியிடங்கள்சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம், ஆனைகட்டி
அறியப்படுவதுஊர்வன பற்றிய ஆராய்ச்சிக்காக (பாம்பு மற்றும் ஆமை)

ஆய்வுப்பணி

பூபதி மலைப்பாம்புகளைப் பற்றியும் அவற்றில் வாழ்க்கைச் சூழலையும் பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வுகள் செய்துள்ளார். மேலும் ஆமைகளைப் பற்றியும் ஆய்வுகள் செய்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலைகள், தமிழகக் கடற்கரைப் பகுதிகள், இமயமலையில் சிக்கிம் பகுதி முதலானவற்றில் கள ஆய்வு செய்துள்ளார்.[3] மேலும் இவரது பணி ஆமைகளின் கள்ள வணிகத்தைத் தடுத்திட மிகவும் உதவியாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.[3] மேலும் நன்னீர் ஆமைகளைப் பற்றிய இவரது பணி முன்னோடியானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[4]

இறப்பு

இவர் அகத்திய மலையில் மூன்றாண்டுகளாக நடந்து வந்த ஒரு கள ஆய்வுப் பணிக்குத் தலையேற்று நடத்தி வந்தார். 2014-ஆம் ஆண்டு அகத்திய மலையில் அப்பணியை மேற்பார்வையிட வந்திருந்தபோது மலையில் இருந்து இறங்குகையில் தவறி விழுந்து இறந்து விட்டார்.[2]

இவரது இறப்புக்குப் பின் இவரது அரிய பணியைப் போற்றும் விதமாக திருவில்லிப்புத்தூர் காப்புக்காட்டில் கண்டுபிடிக்கப் பட்ட கேழல்மூக்கன் வகைத் தவளை ஒன்றுக்கு நாசிக்காபாட்ராக்கசு பூபதி என்று பெயரிடப்பட்டுள்ளது.[3] மேலும் கோவையின் ஆனைகட்டி பகுதியில் கண்டறிப்பட்ட கேடயவால் பாம்பின் (Uropeltis bhupathyi) புது இனம் ஒன்றுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சுப்பிரமணியன்_பூபதி&oldid=25489" இருந்து மீள்விக்கப்பட்டது