சி. ந. துரைராஜா
சி. ந. துரைராஜா | |
---|---|
முழுப்பெயர் | நடராஜா |
துரைராஜா | |
பிறப்பு | 15-07-1943 |
பிறந்த இடம் | வல்வெட்டித்துறை, |
யாழ்ப்பாணம் | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | நடிகர் |
எழுத்தாளர் | |
பெற்றோர் | நடராஜா, |
செல்லமுத்து |
சின்னத்துரை நடராஜா துரைராஜா (பிறப்பு: ஜுலை 15, 1943) ஈழத்துக் கலைஞரும், எழுத்தாளருமாவார்.
வாழ்க்கைக் குறிப்பு
சின்னத்துரை நடராஜா, சின்னவன் செல்லமுத்து ஆகியோருக்கு வல்வெட்டித்துறை பொலிகண்டியில் பிறந்த துரைராஜா யாழ்ப்பாணம், வதிரி, மெதடிஸ்த மிஷன் பாடசாலை, திருக்கோணமலை புனித சேவியர் பாடசாலை, யாழ்ப்பாணம் வதிரி தேவரையாழி இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். திருகோணமலையில் தற்போது வசித்து வருகிறார். இவரின் துணைவியார்: இராஜகுமாரி. பிள்ளைகள்: மங்கள நாயகி, குமணராஜா, ஜெயந்தி, பத்தமராஜா, பாரதிராஜா, நிருசிதா கௌரிதரன்.
தொழில்
1970ஆம் ஆண்டில் இலங்கைப் போக்குவரத்து சபையின் 'காப்பாளர்' உத்தியோகத்தராகப் பதவி நியமனம் பெற்ற இவர் 1997இல் வீதிப் பரிசோதனைக் குழுத் தலைவராகப் பதவி உயர்வு பெற்று 2003ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஓய்வு பெற்றார்.
கலைத்துறை ஈடுபாடு
1957ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வதிரி மெதடிஸ்தமிஷன் பாடசாலையில் கற்கும் காலத்தில் 'ஒளவையார்', 'குமணவள்ளல்' ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். இந்நாடகங்களே கலைத்துறையில் இவரின் கன்னிப் பயணத்துக்கு அரங்கமைத்துக் கொடுத்தன.
கலைத்துறை வாழ்க்கையில் ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள துரைராஜா இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். 1967இல் திருக்கோணமலை 'ஆதவன் நாடக மன்றம்' எனும் பெயரில் நாடக மன்றமொன்றினை ஆரம்பித்து 'காகிதப்பூ', 'மஞ்சுளா' ஆகிய பெயர்களில் அரங்கேற்றம் பெற்ற நாடகங்கள் இவருக்கும் பெரும் புகழைப் பெற்றுக்கொடுத்தன.
எழுத்துத்துறையில்
திருமலைக் கலைமாறன், குணகௌரி, ஸ்ரீகபியார், சச்சி-துரை, பொலிகைமாறன் ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதிவரும் சி.என். துரைராஜாவின் கன்னிக் கவிதை 1959ஆம் ஆண்டில் 'கல்வெட்டு' எனும் தலைப்பில் கல்லூரிச் சஞ்சிகையில் பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை முன்னூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், ஆத்மீகக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.
இத்தகைய இவரின் ஆக்கங்கள் சுதந்திரன், வீரகேசரி, தினகரன், சுடரொளி, தினக்குரல் ஆகிய தேசிய நாளேடுகளிலும், பல்வேறுபட்ட சஞ்சிகைகளிலும், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, முரசொலி ஆகிய இந்திய பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன.
நினைவு மலர்களில்
இவரின் பல கட்டுரைகளும், கவிதைகளும் இருபத்து நான்கிற்கும் மேற்பட்ட நினைவு மலர்களில் பிரசுரமாகியுள்ளன.
நூல் முயற்சி
இதுவரை சி.என். துரைராஜா தனிப்பட்ட நூலொன்றையும் வெளியிடவில்லை. இவரால் எழுதப்பட்ட ஆத்மீகக் கட்டுரைகளைத் தொகுத்து நூலொன்றினை வெளியிடவுள்ளார்.