சாமித்தம்பி தில்லைநாதன்

சாமித்தம்பி தில்லைநாதன்
தில்லைநாதன்.jpg
முழுப்பெயர் சாமித்தம்பி
தில்லைநாதன்
பிறப்பு 24-07-1948
பிறந்த இடம் துறைநீலாவணை,
மட்டக்களப்பு
தேசியம் இலங்கைத் தமிழர்,
அறியப்படுவது ஈழத்து எழுத்தாள
கல்வி Ph.D, B.A, Dip-in-Ed
வாழ்க்கைத் தவமணி,
துணை


சாமித்தம்பி தில்லைநாதன் (பிறப்பு: ஜூலை 24, 1948) இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்.துறைநீலாவணை யைப் பிறப்பிடமாகவும் மண்டூரை வசிப்பிடமாகவும் கொண்டவர். சைவப்புலவர். கலாநிதி. எஸ். தில்லைநாதன் எனப் பரவலாக அறியப்பட்டவர். தமிழ் இலக்கிய, இலக்கணம், இந்து சமயம் முதலான துறைசர்ந்ததாக இவரது ஆக்கங்கள் பொதுவாக அமைந்துள்ளன. இவரது மூத்த சகோதரர் சாமித்தம்பி முத்துக்குமாரன் (ஓய்வு பெற்ற பதிவாளர் நாயகம்) என்பவரும் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைக் குறிப்பு

சாமித்தம்பி தில்லைநாதன் அவர்கள் துறைநீலாவணையில் காணிமுகாமை சாமித்தம்பிக்கும், தோ.வே.மாரிமுத்துக்கும் 1948 ஜூலை 24 இல் மகனாகப் பிறந்தார். துறைநீலாவணை மகா வித்தியாலயம், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையிலும் தனது ஆரம்பிக்கல்வியைப் பயி்ன்றார். பின்னர் தனது கலைமாணிப் பட்டத்தினை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும், கல்வியியற் பட்டப்பின் டிப்புளோமாவினை இலங்கைத் திறந்த பலக்லைக் கழகத்திலும் பெற்றார். மேலும் தனது கலாநிதிப் பட்டத்தினை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பெற்றார். கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் இவரே முதன்முறையாகத் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.

ஆசிரியப்பணி

இவர் தனது ஆசிரியப் பயிற்சியினை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பெற்றார். இவர் ஆசிரியராக மட்டக்களப்பின் பல பாடசாலைகளிலும், அதிபராக மட்டக்களப்பு மண்டூர் மகாவித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா பாடசலைகளில் முதலாந்தர அதிபராகவும் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பின் மண்முனை வடக்கு பிரதேசக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளராகவும், மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச கல்விப்பணிப்பாளராகவும், போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அலுவலகத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். 1995 தொடக்கம் 2008 இல் ஓய்வுபெறும் காலம் வரை இப்பதவியில் செயற்பட்டுள்ளார்.

சைவப்புலவர் பட்டம்

1973 ஆம் ஆண்டு அகில இலங்கை சைவப்புலவர் பரீட்சையில் தேறி சைவப்புலவர் பட்டத்தினைப் பெற்றார். தற்போது அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் உப தலைவராகவும் உள்ளார்.

இவர் வெளியிட்ட புத்தகங்கள்

  1. சைவமும் நாமும் (1991) இந்துசமய ஆய்வு நூல், கல்வி அமைச்சினால் துணைப்பாட நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
  2. தமிழ் மொழி இலக்கியமும் இலக்கணமும் (1994) மொழி இலக்கிய ஆய்வு நூல். கல்வி அமைச்சினால் துணைப்பாட நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
  3. மண்டூர் முருகன் திருவிருத்தமாலை (2001) செய்யுள் நூல், மண்டூர்க் கலை இலக்கிய அவையினால் வெளியிடப்பட்டது.
  4. தமிழ் மொழியில் இலக்கியச் சிறப்பு (2005) மொழி இலக்கிய ஆய்வு நூல்.
  5. தமிழ் மொழியில் இலக்கணச் சிறப்பு (2005) மொழி இலக்கிய ஆய்வு நூல்.
  6. மட்டக்களப்பில் இந்து சமய கலாசாரம் (2006) ஆய்வு நூல்.
  7. சைவசித்தாந்த எட்டு விரதங்கள் (2007) ஆய்வு நூல்.
  8. மட்டக்களப்புக் கோயில்களும் தமிழர் பண்பாடும் (2008) ஆய்வு நூல்.
  9. மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டு மரபுகள் (2015). வெளியீட்டாளர்: குமரன் புத்தக இல்லம்

ஆய்வுக்கட்டுரைகள்

இவர் சஞ்சிகைகளிலும், பத்திரிகைகளிலும் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் பல வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை வானொலியில் தொகுத்தும் உள்ளார். இருப்பினும் கீழே குறிப்பிடப்பட்வை அவற்றுட் சிலவே. இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பல ஆவணங்கள் பெறமுடியாமற் அழிந்து போயின.

பத்திரிகைகளில் வெளிவந்தவை

  1. வரவுகூறும் காக்கைக்கு விருந்து -தினகரன் (25-01-1981)
  2. வெண்பாவில் வஞ்ச உரை -தினகரன் (03-05-1981, 10-05-1981)
  3. காவேரி நாட்டுக் கண்ணகி அம்மனாய் அமர்ந்த துறைநீலாவணை –வீரகேசரி (15-07-1984)
  4. கூத்தப்பெருமானின் ஆடல் உணர்த்தும் உண்மைகள் –வீரகேசரி (15-05-1988)
  5. அருட்கொடைவழங்கும் மண்டூர்க்கந்தன் –வீரகேசரி (24-03-1991)
  6. தமிழ் மக்களின் மனதை நீங்காதவர் பண்டிதர் வி.சீ.கந்தையா –வீரகேசரி (01-06-1991)
  7. தலச்சிறப்பு வாய்ந்த மண்டூர் –வீரகேசரி (05-08-1991)
  8. சுரம் பிசகாது ஊரி இசைத்தபாடலே யாழ்நூல் பிறப்பின் அடிப்படை
  9. பராசக்தியை பிம்மத்திலும் கும்பத்திலும் வைத்து ஒன்பது நாள் வழிபடும் பெருவிழா –வீரகேசரி (06-10-1991)
  10. விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் –வீரகேசரி (03-11-1991)
  11. ஞாயிறு போற்றுதும் ஞாலம் காப்பதால் –வீரகேசரி (12-01-1992)
  12. அல்லல் தீர்க்கும் மருந்து மண்டூர் முருகனின் திருவருள் –வீரகேசரி (30-08-1992)
  13. எங்கும் நிறை பொருளாய் தோன்றும் சக்தி –வீரகேசரி (27-09-1992)
  14. மண்டூரில் கண்களிகூர காட்சி கொடுக்கும் திருமுருகன் –வீரகேசரி (18-11-1992)
  15. மண்டூர்க் கவிஞர் சோமசுந்தரம் –வீரகேசரி (11-02-1994)
  16. ஆயிரம் மலர்கள் மலர்ந்து குவிந்து காலம் காட்டும் கண்ணியம் –வீரகேசரி (01-05-1994)
  17. மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் பற்றிய வரலாற்றுத்தவறுகள் –தினக்குரல் 09-02-2003.
  18. எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் உள்ளங்களைத் தொட்ட புலவர்மணி –தினக்குரல் 04-01-2004.
  19. மட்டக்களப்பில் சக்தி வழிபாடு - பிருத்தானிய சைப்பேரவையின் 12 ஆவது மாநாடு -2009

சஞ்சிகைகளில் வெளிவந்தவை

  1. உள்ளத்தால் பொய்யாதொழுகின்……. “கலைச்செல்வி” 1974
  2. முத்தமிழின் சுவையும் வழக்குத்தமிழின் ஏற்றமும் - தமிழ்மொழித்தின சிறப்புமலர் கொழும்பு வடக்கு 1994
  3. பாராட்டுமடல் - கந்தையா தியாகராஜா பொன்விழா மலர் 1996
  4. மட்டக்களப்புத் தமிழகத்தின் பாரம்பரியக் கலை: கொம்பு விளையாட்டு – பிரதேச கலாசாரப் பேரவை மண்முனை தென்மேற்கு 1997
  5. தகனக்கிரியை –நினைவு மலர் திருமதி புவனேஸ்வரி சிவப்பிரகாசம் 1997
  6. எம்மண்ணின் மைந்தன் - புகழ்பூத்த புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை “மருதம்” போரதீவுப்பற்று கலாசார பேரவை சிறப்புமலர் 1998
  7. வயிரவர் வழிபாடு –“தேரோட்டம்” கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக சிறப்பு மலர் 1998
  8. அமைதி சுடர்க - “மருதம்” போரதீவுப்பற்று கலாசார பேரவை சிறப்புமலர் 2003
  9. தமிழ்மொழியில் இசைக்கலை –“புலமை” பட்டிருப்பு கல்வி வலய சிறப்புமலர் 2007

வானொலி நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பானவை

  1. நன்னெறி - ஆனி-ஆடி மாதங்கள், 1984
  2. நடராஜ தத்துவம் - 24-09-1991
  3. ஆன்ம ஈடேற்ற வழிகள் - 01-10-1991
  4. நவராத்திரி - 08-10-1991
  5. முப்பொருள் கொள்கை விளக்கம் - 22-10-1991
  6. சிவசின்னங்கள் - 29-10-1991
  7. முப்பொருள் கொள்கை விளக்கம் (ஆன்மா) - 05-11-1991
  8. முப்பொருள் கொள்கை விளக்கம் (பாசம்) - 26-11-1991
  9. மட்டக்களப்புப் பிரதேசத்தில் நாட்டுக்கூத்துக்கள் - 24-01-1992
  10. சிற்பக்கலை – கார்த்திகை 1991, தை 1992
  11. வள்ளுவரின் பொருளாதாரக் கொள்கை 19-06-1992
  12. வள்ளுவரின் வாய்மை வாதம் 05-09-1992
  13. தமிழரின் கோயில்களும் கலைகளும் 19-09-1992
  14. உரைச்சித்திரம்
    1. சுவாமி விபுலானந்தர் 19-07-1984
    2. முத்தமிழ் வித்தகர் விபலானந்தர் 02-04-1991
  15. கவியரங்கு - கவிதைகள்
    1. ஒளிவளர் விளக்கு 21-11-1980
    2. வையம் தழைக்க வழி 25-07-1984
    3. சித்திரையாள் வந்தாள் சிரித்து 14-04-1991
    4. எங்குமே தீப ஒளி 25-10-1992

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  1. வித்தியகலாபமணி விருது -1993 அகில இலங்கை சபரிமலை ஐயப்பன் சாஸ்தாபீடம், இந்துசமய கலாசார முத்தமிழ்ச் சங்கம் இணைந்து நடாத்திய பட்டமளிப்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு ஜே. ஆர். ஜேவர்த்தனா அவர்களால் வழங்கப்பட்டது.
  2. மட்டக்களப்பில் இந்துசமய கலாசாரம் என்னும் நூல்வெளியீட்டின் போது “இலக்கியமணி” பட்டமளித்து கௌரவிக்கப்பட்டது. அன்பு நிறுவகம் மட்டக்களப்பு -2006
  3. சமய எழுத்தாளர் எனப்பாராட்டி விருதும் அன்பளிப்பும் வழங்கப்பட்டது 1995 இந்துசமய திணைக்களம், இந்துசமய கலாசார அமைச்சு.
  4. போரதீவுப்பற்று பிரதேச செயலக கலாசாரப்பேரவை கலாசார சமய அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்தப் பெற்ற கலாசார விழாவில் இலக்கியத்துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டி ‘கலைஞர் கௌரவிப்பு’ அளிக்கப்பட்டது-2008
  5. மட்டக்களப்புக் கோயில்களும் தமிழர் பண்பாடும் என்னும் நூலுக்கான “2008 ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது” 2009 ஆண்டில் வழங்கப்பட்டது.
  6. கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள், காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சினால் நடத்தப்பட்ட சிறந்த நூல் தெரிவில் மட்டக்களப்புக் கோயில்களும் தமிழர் பண்பாடும் என்னும் நூல் 2008 ஆம் ஆண்டிற்குரிய கிழக்கு மாகாண சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்டது, பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
  7. எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் ஈழத்திலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்து தமிழ் படைப்பாளிகளைப் பாராட்டும் நோக்கில் நடாத்தப்பட்ட தமிழியல் விருது-2008 என்னும் நிகழ்வில் 2008ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த ஆய்வு நூலாகத் மட்டக்களப்புக் கோயில்களும் தமிழர் பண்பாடும் என்னும் நூல் தெரிவு செய்யப்பட்டது.
  8. கிழக்குமாகாண அதியுயர் விருதான வித்தகர் விருது (2015)
  9. கிழக்கு மாகாகண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் (2016) புலமைத்துவம் சார் துறையில் சிறந்த நூலுக்கான விருது இவரது “மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டு மரபுகள்” என்னும் நூலுக்கு வழங்கப்பட்டது.