சரஸ்வதி தமிழ்ப்பள்ளி
சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மலேசியா கெடா சுங்கை பட்டாணி நகர்ப் பகுதியில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி.[1] கெடா மாநிலத்தில் வாழும் மக்களிடையே மிகவும் பிரசித்திப் பெற்ற இப்பள்ளி[2] 2014ஆம் ஆண்டு தன் 90ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. தவிர சுங்கை பட்டாணி நகரில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி எனும் பெருமையும் இப்பள்ளிக்கு உள்ளது.
சரஸ்வதி தமிழ்ப்பள்ளி SJK(T) Saraswathy | |
---|---|
அமைவிடம் | |
சுங்கை பட்டாணி கெடா, மலேசியா | |
தகவல் | |
வகை | இரு பாலர் பயிலும் பள்ளி |
தொடக்கம் | 1923 |
நிறுவனர் | ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானம் |
பள்ளி மாவட்டம் | கோல மூடா - யான் |
கல்வி ஆணையம் | மலேசியக் கல்வி அமைச்சின் முழு உதவி |
பள்ளி இலக்கம் | KBD3094 |
தலைமை ஆசிரியர் | கலைச்செல்வன் துணைத் தலைமையாசிரியர்கள் |
தரங்கள் | 1 முதல் 6 வகுப்பு வரை |
மாணவர்கள் | 809 (2014 புள்ளி விவரங்கள்) |
கல்வி முறை | மலேசியக் கல்வித்திட்டம் |
எண்ணற்றக் கல்விமான்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், விரிவுரையாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள், கணினித் துறை விற்பனர்கள், இசைஞர்கள் என பல் துறையினரை உருவாக்கித் தந்த பெருமையும் இப்பள்ளிக்கு அணி சேர்க்கின்றது.[3][4]
சாதாரண பலகைக் கொட்டகையில் 25 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, பல்வகையான உருமாற்றங்களைப் பெற்று இப்போது சுங்கை பட்டாணி வட்டாரத்தில் மிகச் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. அன்றைய கால கட்டத்தில் இன உணர்வோடும் மொழி உணர்வோடும் தொடங்கப்பட்ட சரஸ்வதி தமிழ்ப்பள்ளி படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று ஆல விருச்சகமாய் தோற்றம் அளிக்கின்றது.[5]
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றில் சுங்கை பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி ஒரு மைல்கல் ஆகும்.[6] 1923ஆம் ஆண்டு சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தான உறுப்பினர்களால் இப்பள்ளி தொடங்கப்பட்டது. தற்சமயம் ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களின் அடையாளமாகப் பரிணமிக்கின்றது.
வரலாறு
1900 -களில் சுங்கை பட்டாணி நகரத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் ஆங்கில மொழிப் பள்ளிகளே இருந்தன. கிறிஸ்துவ மத சார்புடைய போதனா முறையே அந்தப் பள்ளிகளில் கற்பிக்கப் பட்டன. தமிழ்ப்பள்ளிகள் எதுவும் இல்லை. அந்தச் சூழ்நிலையில் தமிழ் ஆர்வலர்களும் இந்து சமயப் பற்றாளர்களும் சுங்கை பட்டாணியில் ஒரு தமிழ்ப்பள்ளியைத் தோற்றுவிக்க முனைப்புக் காட்டினர். அந்த வகையில் தான் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டது. அவ்வாட்டாரத்தின் முதல் தமிழ்ப்பள்ளியாகவும் சரித்திரம் படைத்தது.
1920 ஆம் ஆண்டு ஒரு தமிழ்ப்பள்ளியை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுங்கை பட்டாணி தமிழ் ஆர்வலர்கள் அவ்வப்போது கூட்டங்களை நடத்தினர். அங்கு அப்போது வாழ்ந்த தமிழர்கள் பெரும்பாலோர் உடலுழைப்புத் தொழிலாளர்களாகும். பலர் தமிழ் நாட்டில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் சஞ்சிக்கூலிகளாய் வந்தவர்கள். ஒப்பந்தம் முடிந்த பிறகு தமிழ் நாட்டிற்குத் திரும்பிச் செல்லாமல் மலாயாவிலேயே தங்கி விட்டவர்கள். இவர்களும் சுங்கை பட்டாணியில் ஒரு தமிழ்ப்பள்ளியை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானம்
1923 ஆம் ஆண்டு சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தான நிர்வாகத்தினர் முழு முயற்சி எடுத்துக் கொண்டனர். ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தின் வளாகத்திலேயே பள்ளியை உருவாக்கினார்கள். ஒரே ஓர் ஆசிரியரின் மேற்பார்வையில் 25 மாணவர்களுடன் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கியது. அந்த ஆசிரியரின் பெயர் சுவாமி நாயக்கர்.
தொடக்கக் காலத்தில் ஆலயச் செயலவையினரின் ஒத்துழைப்புடன் பள்ளி செயல்பட்டு வந்தது. பள்ளிக்குத் தேவையான தளவாடச் செலவுகள், ஆசிரியரின் சம்பளம், இதர செலவுகள் போன்றவற்றிற்கு ஆலய நிர்வாகத்தினரே பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தலைமையாசிரியர் நடேசன்
1940 களில், தேவஸ்தானத் தலைவர் நா.வீரையா, கோயில் மணியம் எனும் அ.சுப்பிரமணியம், தலைமையாசிரியர் நடேசன் ஆகியோர் ஒன்றிணைந்து பள்ளியை நடத்தி வந்தனர். இந்தக் கால கட்டத்தில் பள்ளிக்கு ஒரு தனித் தோற்றம் அமைய வேண்டும் எனவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளியின் வளர்ச்சியில் அரசாங்கம், பொது அமைப்புகள், அரசியல் வட்டாரங்கள் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்யப் பட்டது.
பள்ளிக்கு தனி ஓர் இடத்தைப் பெறுவதில் தமிழ் ஆர்வலர்கள் தீவிர ஆர்வம் காட்டி முழுக் கவனமும் செலுத்தினர். பெக்கான் அத்தாப் (Pekan Atap) எனும் புறநகர்ப் பகுதியில் பள்ளிக்கு ஓர் இடம் அடையாளம் காணப்பட்டது. அந்த இடத்தை வாங்குவதற்கு அரும்பாடுபட்டனர். நாடு முழுமைக்கும் பயணம் செய்து பொருளுதவிகள் கோரினர். பல நல்ல உள்ளங்கள் இவர்களுக்கு உதவிகள் செய்தனர். தன்னலம் கருதா அர்ப்பணிப்பு உணர்வுகளில் மலாயாத் தமிழர்கள் பலர் இன்றைக்கும் மலாயாச் சரித்திரச் சுவடுகளின் சான்றோர்களாய் மிளிர்கின்றனர்.
அஞ்சல் நிலையத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி
1941 ஆம் ஆண்டு இப்பள்ளி கம்போங் அனாசினா பகுதிக்கு இடம் மாறியது. மலாய் மொழியில் கம்போங் என்றால் கிராமம். கம்போங் அனாசினாவின் பழைய பெயர் பெக்கான் அத்தாப். பள்ளியின் மாணவர் எண்ணிக்கையும் உயர்ந்தது. அப்போதைக்கு மாணவர் எண்ணிக்கை 48 ஆகும். அதன் பின்னர் பதினொரு ஆண்டுகளுக்கு, அதாவது 1952 ஆம் ஆண்டு வரை அதே இடத்தில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி செயல்பட்டு வந்தது.
ஒரு சமயத்தில் பயங்கரமான ஒரு புயல்காற்று சுங்கை பட்டாணி நகரத்தையே தாக்கிக் குலுக்கியது. அதில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி பெரிதும் பாதிக்கப்பட்டு முற்றாகச் சேதமும் அடைந்தது. பள்ளியைப் பயன்படுத்த முடியாத ஓர் அவல நிலையும் ஏற்பட்டது. அதனால், வேறுவழியின்றித் தற்காலிகமாக பழைய அஞ்சல் நிலையத்திற்கு மாற்றம் கண்டது. பின்னர் ஓராண்டு காலத்திற்கு கிர் ஜொகாரி தேசியப் பள்ளியில் அடைக்கலம். அப்போது சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர்கள் அறுவர்; மாணவர்கள் 120 பேர்.
ஐந்து ஏக்கர் நிலம்
சரஸ்வதி தமிழ்ப்பள்ளி இப்படி அடிக்கடி இடம் மாற்றம் கண்டு வந்தது சுங்கை பட்டாணி வாழ் தமிழர்களுக்கு மன உறுத்தலைக் கொடுத்தது. அதனால் ஒரு நிரந்தரமான இடத்தைத் தேடினர். சரியான இடம் கிடைக்கவில்லை. 1954 இல் பள்ளியை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான ஆலய வளாகத்திலேயே நடத்துவது என ஆலய நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
1957 ஆம் ஆண்டு, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் ஐந்து ஏக்கர் நிலத்தை சுங்கை பட்டாணி ஜாலான் தியோங் எனும் இடத்தில் வாங்கியது. அந்த நிலத்தில் புதியப் பள்ளியைக் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பள்ளிக் கட்டட நிர்மாணிப்பிற்காக அரசாங்கம் 15,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியது. அந்தப் புதிய கட்டடத்திற்கு அப்போதைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் அடிக்கல் நாட்டினார்.
பொதுமக்களின் நன்கொடைகளினாலும், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் பொருளுதவிகளினாலும் 1960 ஆம் ஆண்டு புதிய பள்ளிக்கூடக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதே இந்த இடத்தில் தான் இப்போதைக்கு சரஸ்வதி தமிழ்ப்பள்ளியும் கம்பீரமாய்க் காட்சி அளிக்கின்றது. சஞ்சிக்கூலிகளாய் மலாயாவுக்கு வந்த தமிழர்களின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமும் தொடங்கியது.
டத்தோ ஸ்ரீ சாமிவேலு
புதிய இடத்தின் சுற்றுச் சூழல், வட்டார அமைப்பு போன்றவை பள்ளியின் வளர்ச்சிக்கு வித்திட்டன. ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. அதன் காரணமாக 1984 ஆம் ஆண்டு இப்பள்ளிக்கு 12 வகுப்பறைகள் கொண்ட இரு மாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்குப் பள்ளியின் நிர்வாகம், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் ஆகியவை ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கின.
இந்தக் கால கட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியராக டத்தோ வெ.சரவணன்[7] என்பவர் பொறுப்பேற்று இருந்தார். இவருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அணுக்கமான உறவுமுறைகள் இருந்தன. அந்த வகையில் ம.இ.காவின் முழுமையான ஆதரவும் கிடைத்தது. பல்வேறு இன்னல்களுக்கு இடையில் புதியக் கட்டடம் கட்டி முடிக்கப் படுவதற்கு நான்கு ஆண்டுகள் பிடித்தன.
1984 ஏப்ரல் 7 ஆம் தேதி புதியக் கட்டடம் திறப்புவிழா கண்டது. அப்போதைக்கு மலேசியாவின் பொதுப்பணி அமைச்சராகப் பொறுப்பு வகித்த டத்தோ ஸ்ரீ சாமிவேலு புதியக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
இருநேரப் பள்ளி
1970 தொடங்கி பள்ளியின் மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் பள்ளியில் வகுப்பறைப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்குத் தீர்வு காணும் வகையில் 1983 ஆம் ஆண்டு தொடங்கி இப்பள்ளியில் காலைப்பகுதி, மாலைப்பகுதி என இருநேரப்பகுதிகள் அமல்படுத்தப் பட்டன. இருநேரப் பள்ளி முறையில் நான்கு, ஐந்து, ஆறாம் வகுப்பு மாணவர்கள் காலை நேரப் பள்ளியில் கல்வி பயின்றனர். ஒன்று, இரண்டு, மூன்றாம் வகுப்பு மாணவர்கள் மாலை நேரப்பள்ளியில் கல்வி பயின்றனர்.
இருநேரப்பள்ளி முறை அமல் செய்யப்பட்டாலும் பள்ளியின் நிர்வாகம் முழுமையாக ஒரே அணியின் கீழ் இயங்கி வந்தது. பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் முறையாகக் கண்காணித்துச் செயலாற்றி வந்தது.
1978 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை இப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர் நா. திருப்பதி. இவர் இந்தப் பள்ளிக்கு ஒரு திடலை உருவாக்கித் தருவதில் பெரும் பங்காற்றினார். அவரின் கடும் முயற்சிகளினால் மேடும் பள்ளமுமாய் குண்டும் குழியுமாய் இருந்த பொட்டல் நிலம் சீர் செய்யப்பட்டது. ஒரு புதிய மைதானமும் உருவானது. அன்று முதல் வகுப்புகளின் உடற்பயிற்சி நடவடிக்கைகளும், பள்ளியின் ஆண்டு போட்டி விளையாட்டுகளும் இந்த மைதானத்தில் போதிய வசதிகளுடன் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி சிற்றுண்டிச் சாலை
பள்ளிக்கு ஒரு புதியக் கட்டடம் கிடைத்து விட்டது. ஒரு புதியத் திடலும் கிடைத்து விட்டது. ஆனால், முறையான ஒரு சிற்றுண்டிச்சாலை மட்டும் இல்லாமல் இருந்தது. சிற்றுண்டி நேரத்தில் உட்காருவதற்குக் கூட இடம் இல்லாமல் மாணவர்கள் அங்கும் இங்குமாய்த் தடுமாறினர். இந்தச் சூழலில் பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் ஒரு நிரந்தரச் சிற்றுண்டிச் சாலையை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டன.
டத்தோ வெ. சரவணன் அவர்களின் உதவியால் கெடா மாநில அரசு ரிங்கிட் மலேசியா 25,000 நிதியுதவி வழங்கியது. மேலும் பள்ளியின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பலரின் உதவிகளினால் ரிங்கிட் மலேசியா 20,000 திரட்டப் பட்டது. அந்த நிதியைக் கொண்டு ஒரு சிற்றுண்டிச்சாலையும் கட்டப்பட்டது. அதன் பயனாக மாணவர்களும் இப்போது நல்ல முறையில் தங்களின் ஓய்வு நேரங்களைக் கழித்து வருகின்றனர்.
கணித அறிவியல் ஆங்கிலப் போதனாச் சிறப்பு அறை
இன்றைய சூழ்நிலையில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி பலத் தொடர் வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. பள்ளி நிர்வாகத்தின் ஆதரவில் 25 கணினிகளைக் கொண்ட கணினி அறை, புதுப்பிக்கப்பட்ட நூலகம், வாசிப்பு மையம், கணித அறிவியல் ஆங்கிலப் போதனாச் சிறப்பு அறை (PPSMI), பாதுகாவலர் குடில், கற்றல் மையம், கூட்ட அறை, கே.எஸ்.எஸ்.ஆர். அறை, புதுப்பிக்கப்பட்ட கழிப்பறை போன்ற வசதிகள் நவீன மயத்தில் மேம்பாடுகள் கண்டன.
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையே ஒரு முன் உதாரணமாக விளங்கும் வகையில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் இசைக்குழு ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தவிர, பெற்றோர் ஆசிரியர் சங்கம் மலேசிய ரிங்கிட் 500,000 செலவில் மண்டபம் ஒன்றையும், நவீன வகையான கழிப்பறையையும் கட்டித் தந்து பள்ளிக்குப் பெருமை சேர்த்து உள்ளது.
2014 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் 850 மாணவர்கள் கல்வி பயின்றனர். 55 ஆசிரியர்களும் 6 அலுவலகப் பணியாளர்கள் சேவை செய்கின்றனர். இப்பள்ளியில் மேலும் 9 வகுப்பறைகள் கட்ட மலேசியக் கல்வி அமைச்சு ஒப்புதல் வழங்கி உள்ளது. எதிர்காலத்தில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி ஒரு முழுநேரப் பள்ளியாக உருமாறும்.
சாதனைகள்
உலகப் பெலி நடனச் சாதனையாளர் விருது
சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் சிறப்பிற்கு உலகப் பெலி நடனச் சாதனையாளர் விருது மேலும் ஒரு சிகரமாக அமைந்தது. ஹர்ஷினி த/பெ ரமேஸ் எனும் மாணவிக்கு 2014 ஆம் ஆண்டின் உலகப் பெலி நடனச் சாதனையாளர் விருது கிடைத்தது.[8] அவர் அப்போது மூன்றாம் ஆண்டு மாணவியாகும். தற்சமயம் ஐந்தாம் ஆண்டு மாணவியாகும்.
பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஆசிய பெலி (Belly) நடனப் போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெற்றார். பின்னர் 2014 மே மாதம் 21ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற உலக ரீதியிலான போட்டியில் 12 வயதினருக்கும் கீழ்ப் பிரிவில் முதல் நிலையில் வெற்றி பெற்றார்.[9] இவரின் இந்தச் சாதனையைப் பாராட்டி பள்ளியும் மலேசிய மக்கள் கட்சியும் அவருக்குப் பரிசுகளை வழங்கின.
அணிவகுப்பு இசைக்குழு
1986 ஆம் ஆண்டில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி தன்னுடைய சொந்த இசைக்குழுவை அமைத்து மேலும் ஒரு சாதனையைப் படைத்தது. கெடா மாநிலத்தில் முதல் முறையாக ஒரு தமிழ்ப்பள்ளியில் அணிவகுப்பு இசைக்குழு அமைக்கப்பட்டது அதுவே முதல் முறையாகும்.
இசை ஆசிரியர் தவமணி, தலைமையாசிரியராக இருந்த வீரையா அவர்களின் கண்காணிப்பில் இந்த அணிவகுப்பு இசைக்குழு அமைக்கப்பட்டது. முன்னாள் தலைமையாசிரியர்களான தில்லையப்பன், மா. ராஜு அவர்களின் எண்ணங்களில் உருவான இந்த இசைக்குழுத் திட்டம் 1986ஆம் ஆண்டில் நனவானது. ஏறக்குறைய மலேசிய ரிங்கிட் 20,000 செலவில் தொடங்கப்பட்ட இந்த அணிவகுப்பு இசைக்குழுவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கமும் தன் முழு ஆதரவை வழங்கியது.
சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மண்டபம்
சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் புகழுக்கும் பெருமைக்கும் மகுடம் சூட்டுவது அதன் பள்ளி மண்டபம் ஆகும். 1996 ஆம் ஆண்டில் மலேசிய ரிங்கிட் 450,000.00 செலவில் கட்டி முடிக்கப்பட்டது. டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு அவர்களால் திறப்புவிழா கண்டது. அப்போதைய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. சங்கர் அவர்களின் தலைமையில் இந்த மண்டபம் கட்டப்பட்டது. தவிர நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் பிரமுகர்கள், ஸ்ரீ சுப்பிரமணிய ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் போன்றோரும் கணிசமான அளவிற்கு நிதியுதவிகள் வழங்கி உள்ளனர்.
தற்சமயம் இந்த மண்டபம் பள்ளி நடவடிக்கைகளுக்கும், பொது நடவடிக்கைகளுக்கும், திருமணம், விருந்து போன்ற நிகழ்ச்சிகளுக்கும் பயன்பட்டு வருகிறது. மலேசிய ரீதியில் தமிழ்ப்பள்ளிக்கு என தனி ஒரு மண்டபம் பெற்ற பள்ளிகளில் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியும் ஒன்றாகும்.
தலைமையாசிரியர்கள்
சுங்கை பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் 1923 இல் இருந்து பணியாற்றிய தலைமையாசிரியர்களின் விவரங்கள்:
சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர்கள் | ||
---|---|---|
பெயர் | தொடக்கம் | நிறைவு |
திரு. சுவாமி நாயக்கர் | 1923 | NA |
திரு. சி. மோசஸ் | NA | NA |
திரு. எம்.ஆர். நடேசன் | NA | NA |
திரு. ஜோன்பால் | NA | NA |
திரு. என்.திருப்பதி | 1978 | 1982 |
திரு. டத்தோ வெ. சரவணன் | 1982 | 1985 |
திரு. கே. கோவிந்தன் | 1986 | 1987 |
திரு. எஸ். கண்ணன் | 1988 | 1989 |
திரு. ஆர்.கே. சுந்திரம் | 1990 | 1993 |
திரு. எம். சண்முகம் | 1993 | இடைக்காலம் |
திரு. எஸ். தில்லையப்பன் | 1993 | 1995 |
திரு. மா. இராஜு | 16.08.1995 | 01.12.2003 |
திரு. பி. கோவிந்தசாமி | 02.02.2003 | 30.09.2003 |
திரு. ஜி. சிவநேசன் | 01.10.2003 | 14.02.2005 |
திரு. எம். வீரையா | 15.02.2005 | 2014 |
திரு. எஸ்.கே. கலைச்செல்வன் | 2015 | *இன்று வரை |
- 2016 பிப்ரவரி மாதப் புள்ளி விவரங்கள்
- NA - கிடைக்கவில்லை
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள்
சுங்கை பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் 1978 இல் இருந்து பணியாற்றிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களைப் பற்றிய 2014 டிசம்பர் மாத வரையிலான புள்ளி விவரங்கள்:
சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் | ||
---|---|---|
பெயர் | தொடக்கம் | நிறைவு |
திரு. முனியாண்டி (கித்தா) | 1978 | 1980 |
திரு. கிருஷ்ணன் | 1981 | 1990 |
திரு. சின்னையா | 1990 | 1992 |
திரு.கே. வடிவேலு | 1993 | 1994 |
திரு. லெட்சுமணன் | 1994 | 1999 |
திரு. சங்கர் | 1999 | 2006 |
திரு. பத்மநாதன் | 2006 | 2013 |
திரு.ஓ.ஜி. சண்முகம் | 2013 | * இன்று வரை |
பொது
மலேசியக் காலச் சுவடுகளில் கடாரத்து மண்ணின் வரலாற்றுச் சிறப்புகள் தனித்து நிற்பவை. தமிழகத்தின் சோழ மைந்தர்கள் கால் பதித்த புனிதமான மண். ஸ்ரீ விஜய பேரரசு கோலோச்சிய புண்ணியமான மண். அதே அந்த மண்ணில் தான், ஆல விருச்சகமாய் வேரூன்றி நிற்கிறது சரஸ்வதி தமிழ்ப்பள்ளி. பெருமைக்குரிய வரலாற்றையும் பதிவு செய்து வருகிறது.
மலேசியத் தமிழர்கள் தன்மானத்தோடு நெஞ்சை உயர்த்தி நடமாடுவதற்கு இந்தப் பள்ளி ஒரு தன்மானச் சின்னமாகவும், தமிழினத்திற்கு உயிர் கொடுக்கும் ஒரு கேடயமாகவும், சுங்கை பட்டாணி வாழ் தமிழ் மக்களின் தமிழ் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அழகியத் தமிழ்க் கலசமாகவும் விளங்கி வருகிறது.
மேற்கோள்கள்
- ↑ "Sjk(T) Saraswathy,Taman Tiong, 08000 Sungai Petani, Kedah." இம் மூலத்தில் இருந்து 2016-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161105072542/http://ppdkmy.moe.gov.my/index.php/module-styles/jenis-kebangsaan-tamil.
- ↑ சுங்கை பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மாநில அளவில் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியாகும்.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Dr K.Loganathan, also known as Dr K. Loganathan Mutharayan or simply Ulagan, is a well known scholar in a wide range of fields.
- ↑ Bala Ganapathi William is an Indian actor, anchor and producer in Malaysian Indian Cinema.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ SJKT Saraswathy - 12 students with 7As[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ SRJK (T) Saraswathi is also one of the premier Tamil primary schools in Kedah.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Former Bukit Selambau MIC assemblyman Datuk V. Saravanan died of kidney complications this afternoon." இம் மூலத்தில் இருந்து 2014-06-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140603161245/http://www.therakyatpost.com/news/2014/06/03/former-mic-assemblyman-datuk-v-saravanan-dies/.
- ↑ WBDF Competition 2014 Children's Oriental Solo, Champion - Harshiniy Ramesh
- ↑ I choose World Bellydance Festival Competition because belly is graceful and delighting where I get to knew for it too...[தொடர்பிழந்த இணைப்பு]