சண்முக ராஜேஸ்வர சேதுபதி
சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி (1909-1967) என்பவர் இராமநாதபுரம் ஜமீனின் கடைசி ஜமீந்தார் மற்றும் தமிழக அரசியல்வாதியுமாவார். இவர் இராஜ ராஜேஸ்வர சேதுபதியின் மகனும், அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவரும் ஆவார்.
வாழ்கைக் குறிப்பு
1944இல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதியின் ஆட்சிகாலம் ஜமீன் ஒழிப்புச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வந்த 1948-ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. இந்தக் கடைசி மன்னர் அரசியலிலும் ஈடுபட்டு இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராகவும், பின்னர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு 1952 மற்றும் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாகவும், 1957ல் தனித்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அமைச்சரவையில் வீட்டு வாடகைக் கட்டுபாடு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1][2][3][3] மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், இராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவராகவும், இறுதிவரை இருந்தார். இவர் இசைப்பிரியர். இவர் ஒரு விளையாட்டு வீரர். துடுப்பாட்டம், டென்னிஸ், குதிரை ஏற்றத்தில் கைதேர்ந்தவர். சென்னை பந்தயக் குதிரைக்காரர்களது சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
இவரது ஆட்சியில் இராமநாதபுரம் நகருக்கு மேற்கே 18 கல் தொலைவில் வைகை ஆற்றிலிருந்து இராமநாதபுரம் நகருக்குக் குடிநீர் குழாய் வசதிக்கு ஏற்பாடு செய்தார். இராமநாதபுரம் நகருக்கு தெற்கே திருப்புல்லாணி அருகிலும் வடக்கே இராஜசிங்கமங்கலம் அருகிலும் மேற்கே லாந்தை அருகிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் பெரிய பாலங்கள் அமைப்பதற்கு உதவினார். அவர் பயின்ற மதுரையில் உள்ள மதுரைக் கல்லூரியிலும் இராமநாதபுரம் மன்னர் மேல்நிலைப் பள்ளியிலும் பெரிய அறிவியல் கூடங்களை அமைக்கவும் உதவி செய்தார். இராமநாதபுரம் சேதுபதி அரசினர் கல்லூரி இவரது நன்கொடையில் அமைக்கப்பட்டது.[4]
இறப்பு
இவர் 1967 மார்ச் 4 ஆம் நாள் காலமானார்.
மேற்கோள்கள்
- ↑ சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952
- ↑ "Member of the Assembly with their Constituencies (1952-1957)" (PDF). Archived from the original (PDF) on 2011-09-04. பார்க்கப்பட்ட நாள் 2012-01-17.
- ↑ 3.0 3.1 "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2012-01-17.
- ↑ டாக்டர். எஸ். எம். கமால் (2003). சேதுபதி மன்னர் வரலாறு. இராமநாதபுரம்: சர்மிளா பதிப்பகம். pp. 105-105.