சங்க யாப்பு

சங்கயாப்பு என்பது மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. யாப்பருங்கலம் என்னும் நூலுக்கு உரை எழுதிய ஆசிரியர் இந்தச் சங்கயாப்பு நூலிலிருந்து சில நூற்பாக்களை மேற்கோள் காட்டியுள்ளார். இந்த நூற்பாக்கள் அடங்கிய நூலின் பெயர் சங்கயாப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (யாப்பருங்கலம் – அடியோத்து 26) உரையாசிரியர் குறிப்பிட்டுள்ள சங்கயாப்பு நூற்பாக்களை ஒன்றுதிரட்டி அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என்னும் திரட்டில் சேர்த்துள்ளார்.

சங்கயாப்பு திரட்டு நூலில் 24 நூற்பாக்கள் உள்ளன. இவை செய்யுள் எழுதப்பட்ட யாப்பு முறையைக் கூறுகின்றன. இதில் கூறப்படும் செய்திகள் பெரும்பாலும் தொல்காப்பியத்தைப் பின்பற்றுகின்றன. எனினும் தொல்காப்பியத்தை இவர் பிறழ உணரந்துள்ளதைப் பேராசிரியர் உரையால் அறிய முடிகிறது.

செய்யுளில் அமையும் தொடை 13,708 என்று தொல்காப்பியம் கூறுகிறது (செய்யுளியல் 101). சங்கயாப்பு 13699 எனக் காட்டுகிறது (நூற்பா 17). தொல்காப்பியத்துக்கு உரை எழுதும் பேராசிரியர் தொடை 13699 என்பது பிழை என்று குறிப்பிடுகிறார். 13699 என்று கூறுபவர் யார் என்று பேராசிரியர் கூறவில்லை. இந்தச் சங்கயாப்புக் கணக்கீட்டையே போராசிரியர் மறுக்கிறார் என்பது இந்த நூல்-தொகுப்பால் அறியமுடிகிறது.

மாத்திரை என்பதற்குத் தொல்காப்பியர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே இடையில் கண் இமைக்கும் நேரத்தை அளவாகக் காட்டுகிறார். சங்கயாப்பு நூல் விரல் நொடிக்கும் நேரத்தை அளபாகக் காட்டுகிறது. அரைநொடி என்பது நொடிக்கும்போது பெருவிரலும் ஆள்காட்டி விரலும் பொருந்தும் காலம் என்கிறது (11). இதனை மேலும் விரித்து முறுகல் முக்கால்-மாத்திரை, நொடித்தல் ஒரு-மாத்திரை எனப் பிற்காலத்தவர் விரிவாக்கிக் கொண்டுள்ளனர்.

கருவிநூல்

  • மயிலை சீனி வேங்கடசாமி, மெய்யப்பன் தமிழ் ஆய்வகம், 2001
  • ச.வே.சுப்பிரமணியன், தமிழ் இலக்கண நூல்கள் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம், 2007
  • தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் உரை, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1959 இரண்டாம் பதிப்பு,
  • யாப்பருங்கலம் Madas Government Oriental Manuscripts Series No. 66 - 1960
"https://tamilar.wiki/index.php?title=சங்க_யாப்பு&oldid=13336" இருந்து மீள்விக்கப்பட்டது