சங்குராம்
1907 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த சௌராஷ்டிர கவிஞர் சங்குராம் மதுரையில் பிறந்த கவிஞராவார், விப்ரபந்து கு. வெ. பத்மநாபய்யரின் சீடரான இவர் தமிழின் இலக்கிய இலக்கண நயத்தைச் சௌராஷ்டிர மொழியிலும் கொண்டுவரமுடியும் என்று எண்ணி அதனடிப்படையில் தமிழில் உள்ள சீர், தளை, அடி, தொடை ஆகியவை சிறிதும் மாறுபடாமல் சௌராஷ்டிர மொழியில் முதன்முதலில் திருக்குறளை மொழிபெயர்த்தார். [1]
சௌராஷ்டிர திருக்குறளை, மதுரை சித்தாச்ரமம், 1993ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளது.
படைப்புகள்
சமஸ்கிருதத்திலும் தமிழிலும் தேர்ந்த இவர், மதுரையில் இயங்கிவரும் சித்தாச்சிரமத்தில் நீதி கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழிலும் சௌராஷ்ட்ர ஒலி வடிவத்தைத் தமிழில் கொண்டும் பல நூல்கள் இயற்றியுள்ளார். [2]
- ஸ்ரீ நிவாசப் பெருமாள் கோவில் தல வரலாறு,
- ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ சதகம்,
- ஞானாமிர்த கீதம்,
- சித்தாச்ரமப் பிரபாவம் மற்றும்
- ஸ்ரீ த்வின (திருக்குறள் மொழிபெயர்ப்பு) ஆகியன இவரின் குறிப்பிடத்தகுந்த படைப்புகளாகும்.
திருக்குறள் பாயிரத்தை மட்டும் முதலில் சௌராஷ்டிர மொழியில் மொழிபெயர்த்து.பின், சித்தாச்சிரம நரஹரி என்பாரின் வேண்டுகோளுக்கிணங்க திருக்குறள் முழுவதையும் சௌராஷ்ட்ரத்தில் மொழிபெயர்த்தார். திருக்குறள் போலவே ஈரடி வெண்பா யாப்பில் கொஞ்சம் கூட சொற்சுவை, பொருட்சுவை குன்றாது மொழிபெயர்க்கப்பட்டிருப்பது இந்நூலின் மற்றொரு சிறப்பாகும்.
கனினுக் கனிஹோன் கனிகர் கனினுக்
கனிஹோன் கனிஹோஸு பொவ்ஸு
என்பது “துப்பார்க்குத் துப்பாய” எனும் குறளின் சௌராஷ்டிர மொழிபெயர்ப்பு.
விருது
2005இல் இவரின் சௌராஷ்டிரப் படைப்புக்கும், திருக்குறள் மொழிபெயர்ப்புக்குமாக “ஸெளராஷ்டிரசிறீ” என்ற பட்டத்தை, மதுரை சௌராஷ்டிர சமூக நலப்பேரவையினர் அளித்தனர்.
மேற்கோள்கள்
- தமிழ்நாட்டில் சௌராஷ்டர்: முழுவரலாறு, கே. ஆர். சேதுராமன், கே. எஸ். மீரா, சென்னை, மூன்றாம் பதிப்பு 2008