க. நா. கணபதிப்பிள்ளை
சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை (மார்ச் 30, 1936 - பெப்ரவரி 4, 2015) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞராவார். நடனம், நாடகம், வில்லிசை போன்ற மூன்று கலைகளிலும் சிறந்து விளங்கினார். இவர் உடுக்கு வாசிப்பதிலும் திறமை பெற்றவர்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சின்னமணி |
---|---|
பிறப்புபெயர் | க. நா. கணபதிப்பிள்ளை |
பிறந்ததிகதி | 30 மார்ச்சு 1936 |
பிறந்தஇடம் | மாதனை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம் |
இறப்பு | பெப்ரவரி 4, 2015 | (அகவை 78)
அறியப்படுவது | வில்லிசைக் கலைஞர் |
பெற்றோர் | நாகலிங்கம், இராசம்மா |
துணைவர் | அன்னமுத்து |
வாழ்க்கைக் குறிப்பு
சின்னமணி பருத்தித்துறை மாதனை என்ற ஊரில் நாகலிங்கம், ராசம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை ஏழாலை உயர்தரப் பாடசாலையிலும் கற்றுக் கொண்டார். 9 வயதிலேயே குறவன் குறத்தி என்ற நாடகத்தில் நடித்து பாராட்டுப் பெற்றார். யாழ் கலாசேத்திராவில் வி.கே.செல்லையாவிடம் கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட சின்னமணி, அவரின் வழிகாட்டலுடன் 1949 ஆம் ஆண்டு கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற கப்பற்பாட்டு நாடகத்தில் நடித்தார். 1951 ஆம் ஆண்டு முதல் கலையுலகில் நுழைந்த சின்னமணி பல மூத்த பெரும் கலைஞர்களோடு இணைந்து நடித்தார். வீரமைந்தன், சரியா தப்பா, தில்பு சுல்தான் ஆகிய சமூக நாடகங்களிலும், காத்தவராயன், அரிச்சந்திரா, ஸ்ரீவள்ளி, சத்தியவான் சாவித்திரி போன்ற சரித்திர நாடங்களிலும் நடித்துப் புகழ் பெற்றார். ஒல்லியான உடலமைப்பைக் கொண்ட இவர் சிறுவயது தொடக்கம் எல்லோராலும் சின்னமணி என்றே அழைக்கப்பட்டார். துப்பதாகே துக்க என்ற சிங்களத் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் கோவில் திருவிழாக்களிலும், பொதுக் கலை நிகழ்வுகளிலும் இடம்பெறும் சின்னமணி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சிகளைக் காண பெரும் திரளாக மக்கள் கூடுவர்.
1954 ஆம் ஆண்டு இரத்மலானை, கொத்தலாவை போன்ற இடங்களிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கூட்டுறவுப் பண்ணைப் பால் சபையில் கணக்காளராகவும் கடமையாற்றியுள்ளார். 1960 ஆம் ஆண்டு ஆசிரியையான அன்னமுத்து என்பவரைத் திருமணம் புரிந்த சின்னமணிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். அச்சுவேலியில் வாழ்ந்து வந்தார்.
மறைவு
கணபதிப்பிள்ளை, பெப்ரவரி 4, 2015 அன்று காலமானார்.
பட்டங்களும் விருதுகளும்
- வில்லிசைக் கலைஞான சோதி
- வில்லிசை வித்தகன்
- வில்லிசைவாணன்
- வில்லிசை மாமணி
- கலாபூசணம் (2008)
- ஆளுனர் விருது (2003)
உசாத்துணை
- வில்லிசைக் கலைஞர் சின்னமணி, யாழ்மண்