க. தணிகாசலம்
க. தணிகாசலம் | |
---|---|
பிறப்பு | 28.09.1946 |
பிறந்த இடம் | அச்சுவேலி, |
யாழ்ப்பாணம் | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
க.தணிகாசலம் தாயகம் இதழின் பிரதம ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர்
அறிமுகம்
1974 இல் வெளிவந்து பின் 1983 இலிருந்து யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து வெளிவரும் 'தாயகம்' இதழின் பிரதம ஆசிரியர். எழுபதுகளிலிருந்து சிறுகதை எழுத்தாளராக மிளிர்ந்து வரும் இவரது சிறுகதைகள் தாயகம், புது வசந்தம், புதியபூமி இதழ்களில் பல்வேறு புனைபெயர்களில் வெளிவந்திருக்கின்றன. அதேபோல் கவிதைகள் பலவற்றை புனைபெயர்களில் தாயகம் இதழில் எழுதியுள்ளமையோடு பல கவியரங்குகளிலும் பங்கெடுத்துள்ளார். இவரது சிறுகதைகள் பிரம்படி, கதைமுடியுமா என்ற தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. இவரது தேர்ந்த கவிதைகள் வெளிப்பு என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தேசிய கலை இலக்கியப் பேரவையினை ஆரம்பிப்பதில் முன்னின்றுழைத்து தற்போது அதன் துணைத் தலைவராகவும் செயற்படும் இவர் 'தாயகம்' மூலம் பல எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றார்.
வாழ்க்கைச் சுருக்கம்
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 28.09.1946 இல் பிறந்தார். கோப்பாய் இருபாலையை இளமைக்காலத்தில் வசிப்பிடமாக கொண்டவர். கொக்குவிலில் திருமணம் புரிந்து வாழ்ந்துவருகின்றார். யாழ். பரமேஸ்ராக் கல்லூரியில் சிரேஸ்ட தராதரம் வரை பயின்றவர். தனது பதினெட்டாவது வயதிலிருந்து எழுதிவருபவர். இருபாலை பாரதி கலாமன்றம் இவரது நாடக எழுத்தாக்கங்களுக்கு களம் அமைத்துக்கொடுத்தது.
பொதுவுடமை வாதியாய்
தமிழ் மக்கள் மீதான சிங்களப் பேரினவாத ஒடுக்கலுக்கெதிராகவும் தனது சொந்தக் கிராமமான இருபாலையிலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் சமத்துவத்துக்கும் சனசமூக நிலையத்தில் சரிநிகர அந்தஸ்த்துக்குமாக சளையாது போராடி வெற்றி கண்டவர்.
தமிழ்த் தேசியம், இலங்கைத் தேசியம் (சிங்களத்தேசியம்) என்பவற்றுக்குமப்பால் விரிந்த சிந்தனையுடன் பல்லினப்பண்பாட்டுப் புதுமையை சிந்திக்கும் வண்ணம் செயற்படும் மக்கள் எழுத்தாளர் க. தணிகாசலம் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் சமகால சான்றாதாரமாக விளங்குகின்றார்.
சொல்லுக்கும் செயலுக்கும் நடைமுறையில் முரண்பாடு காணாதவர். தொழிலாளியாய் - விவசாயியாய் - எழுத்தாளராய் - பதிப்பாசிரியராய் - கதாசிரியராய் - கவிஞராய் - சமூகநலத் தொண்டராய் - அரசியல் தோழராய் தன் வாழ்வைப் பன்முகப்பணியில் பதித்துக் கொண்டவர்.
பேரினவாதத்துடன் விட்டுக்கொடுக்காத போராட்டம் நடாத்திவரும் போராளியாக விளங்கும் அதே சமயம் தமிழ்த்தேசியத்தின் குறுந்தேசியக் குரலுக்குள் தன்னை உட்படுத்தாதுள்ளார். என்றும் ஒடுக்கட்பட்ட மக்கள் மத்தியிலே தனது இருப்பையும் உயிர்ப்பையும் தளராது பேணுபவர்.
மாக்சிய லெனிச மாவோயிச கொள்கையின் பால் தளராத பிடிப்பு கொண்டவர்.
கலை இலக்கியத் தடத்தில்
தேசிய கலை இலக்கியப் பேரவையின் தோற்றத்திலிருந்து அதன் இணைச்செயலாளராக நீண்டகாலம் இருந்து அதன் உயிர்நாடியாக் செயற்பட்டவர். போர்க்காலத்திலும் இடம்பெயராமல் புலம்பெயராமல் தாயகம் இதழை நெருக்கடியான காலத்திலும் கொண்டுவந்ததில் அவரது உழைப்பே முதன்மையாக இருக்கின்றது. 90களில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இலக்கிய அமைப்புக்களை ஒன்றுபடுத்தும் விதத்தில் செங்கையாழியான், செம்பியன் செல்வன், உடுவில்அரவிந்தன் போன்ற பலபடைப்பாளிகளுடன் இணைந்து எழுத்தாளர் ஒன்றியம் அமைப்பு உருவாக்கத்தில் பங்குகொண்டு செயலாற்றியவர். தேசிய கலை இலக்கியப் பேரவையின் இணை அமைப்பாக சமூகவிஞ்ஞான படிப்புவட்டத்தின் உருவாக்கத்தில் முன்னின்று நெருக்கடியான காலகட்டத்திலும் இளந்தலைமுறையினர் மத்தியில் தூரநோக்குச் சிந்தனையை விதைத்து கருத்துரை விவாதம் மூலம் புதிய மாற்றத்தை உருவாக்கும் முனைப்பில் செயற்பட்டவர். இன்றும் செயற்படுபவர்.
வெளிவந்த நூல்கள்
- பிரம்படி (சிறுகதைத் தொகுப்பு)
- கதைமுடியுமா? (சிறுகதைத் தொகுப்பு)
- வெளிப்பு (கவிதைத் தொகுப்பு)