கோ. புண்ணியவான்

கோ. புண்ணியவான் (ஆங்கிலம்: K. Punniyavaan; பிறப்பு: மே 14 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒரு தலைமை ஆசிரியராவார். மேலும் இவர் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

கோ. புண்ணியவான்
கோ. புண்ணியவான்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கோ. புண்ணியவான்
பிறந்ததிகதி மே 14 1949
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பிறப்பு, கல்வி

கோ. புண்ணியவான் மே 14, 1949-ல் கிளந்தான் மாநிலத்தில் பிறந்தார். தந்தை கோவிந்தசாமி, தாயார் அம்மணி. 4 சகோதர்கள், 3 சகோதரிகள் உள்ள குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். கோ. புண்ணியவான் கிளந்தான் கெனத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் எட்டு வயதுவரை ஆரம்பக் கல்வியைக் கற்றார். 1958இல் இவர் குடும்பம் கெடா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்தது. அங்கு கூலிம் மாவட்டத்தில் அமைந்திருந்த பி. எம் ஆர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்தார். 1961இல் தன் இடைநிலைக்கல்வியை கூலிம் பட்லீஷா இடைநிலைப்பள்ளியில் தொடங்கி 1968இல் நிறைவு செய்தார்.

தனிவாழ்க்கை

கோ.புண்ணியவான்இடைநிலைக் கல்வி முடித்தபின் தற்காலிக ஆசிரியராகப் பணிப்புரிந்தபின் 1979ஆம் ஆண்டு ஈப்போ கிந்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இணைந்தார். பயிற்சி பெற்ற ஆசிரியராக 1982இல் பணியைத் தொடங்கியவர் 2005இல் தலைமை ஆசிரியராக பணி ஓய்வு பெற்றார். 1970இல் ஜானகி என்பவரை மணமுடித்தவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

இலக்கிய வாழ்க்கை

கோ.புண்ணியவான் எழுதிய 'வாழ வழி இல்லையாம்’ என்ற இவரது முதல் சிறுகதையை 1971இல் மலாயா சிங்கை வானொலி நிலையத்தில் ஒலியேற்றியது. அந்த ஊக்குவிப்பில் பல சிறுகதைகள் எழுதினார். 70களின் இறுதியில் கோ.புண்ணியவான் எழுதிய சிறுகதைகள் நாளிதழ்களில் தொடர்ந்து இடம்பெற்றன. கோ. புண்ணியவான் தன் முன்னோடிகளான எம். ஏ. இளஞ்செல்வன், ரெ. கார்த்திகேசு, அரு. சு. ஜீவானந்தன் போன்றவர்களின் கதைகளை வாசித்து தன் எழுத்தின் பலவீனங்களைச் சுயமாகத் திருத்தினார். இணைய பயன்பாடு தொடங்கும்வரை வெகுசன இதழ்களும் வணிக எழுத்தாளர்களும் இவரது வாசிப்பு சூழலில் நிறைந்திருந்தனர். அவ்வறிமுகங்களோடு மலேசியாவில் நடைபெறும் இலக்கியப் போட்டிகளில் அதிகம் பங்கெடுத்து பலமுறை முதல் பரிசுகளை வென்றார். 2005இல் எழுத்தாளர் ஜெயமோகனை வாசித்தபிறகுதான் இலக்கியம் குறித்த தன் புரிதலில் மாற்றம் நிகழ்ந்ததாக தன் நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார். இவர் 2020இல் எழுதிய 'கையறு' நாவல் இலக்கியச் சூழலில் கவனம் பெற்றது.

அமைப்புச் செயல்பாடுகள்

1996 முதல் 2005 வரை கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்தார் கோ.புண்ணியவான். அவ்வியக்கத்தின் வழி நூல் வெளியீடுகள், இலக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றை முன்னெடுத்தார். ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, அப்துல் ரகுமான், சிற்பி, ஈரோடு தமிழன்பன் போன்ற தமிழக இலக்கியவாதிகளுடன் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தார்.

கோ.புண்ணியவான் 2000இல் 'நிறங்கள்’ என்ற தலைப்பில் கெடா மாநில எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியீடு செய்தார். 2010இல் கூலிம் தியான ஆசிரமத்தில் தொடங்கப்பட்ட நவீன இலக்கியக் களத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, கெடா மாநிலத்தில் புத்திலக்கியம் குறித்த உரையாடல்கள் உருவாகப் பங்களித்தார்.

நூல்கள்

சிறுகதை

  • நிஜம் (1999)
  • சிறை (2005)
  • எதிர்வினைகள் (2010)
  • கனவு முகம் (2018)

நாவல்

  • நொய்வப் பூக்கள் (2006)
  • செலாஞ்சார் அம்பாட் (2013)
  • கையறு (2020)

சிறுவர் நாவல்

  • வன தேவதை (2015)
  • பேயோட்டி (2017)

கவிதை

  • சூரியக் கைகள் (2012)

கட்டுரை

  • அக்டோபஸ் கைகளும் அடர்ந்த கவித்துவமும் (2010)

பரிசும் விருதுகளும்

  • மலாயாப் பல்கலையின் தமிழ்ப்பேரவை சிறுகதைப் போட்டியில் 4 முறை முதல் பரிசு பெற்றுள்ளார்.
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் நேசன் நாளிதழ் நடத்திய சிறுகதை போட்டிகளில் 10க்கு மேற்பட்ட தங்கப்பதக்கங்கள் பெற்றிருக்கிறார்.
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 'ஆதி நாகப்பன்’ இலக்கிய விருது - 2001
  • ஆஸ்ட்ரோ வானவில் நடத்திய சிவாஜி கணேசன் புதுக்கவிதையில் போட்டியில் முதல் பரிசான 25,000 ரிங்கிட் பெறுமானமுள்ள வைர நெக்லஸ் வென்றார். - 2002
  • 'எதிர்வினைகள்’ சிறுகதை தொகுப்புக்கு மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மாணிக்க வாசகம் விருது – 2012
  • 'செலாஞ்சார் அம்பாட்' நாவல் தேசிய நில நிதி கூட்டுறவு சங்க அறவாரியத்தின் சிறந்த நூலுக்கான 10,000 ரிங்கிட் பரிசு பெற்றது. - 2014
  • 'செலஞ்சார் அம்பாட்’ நாவலுக்கு மாணிக்க வாசகம் விருது - 2014
  • 'கையறு' நாவலுக்கு கரிகாலன் விருது - 2022

இலக்கிய இடம்

கோ.புண்ணியவான் அதிகமான போட்டிகளில் வென்றிருந்தாலும் 2005க்குப் பிறகு இவர் எழுதிய புனைவுகளே இலக்கியச் சூழலில் கவனம் பெற்றன. கோ.புண்ணியவான் எழுதிய இரண்டு சிறுகதைகள் வல்லினம் பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டன. சயாம் மரண ரயில்பாதை அமைத்த வரலாற்றை ஒட்டி கோ.புண்ணியவான் 2020இல் எழுதிய 'கையறு’ நாவல் மலேசிய இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாகக் கருதப்படுகிறது.

கோ.புண்ணியவான் பற்றி "மூத்த தலைமுறை எழுத்து வகையோடு ஒட்டி தனது படைப்புகளைக் கொடுக்கத்தொடங்கியவர் மேலும் முன்நகர்ந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நவீன கதை கூறல் முறைகளையும் வந்தடைந்திருக்கிறார். ஆகவே, கோ.புண்ணியவான் மலேசியாவில் நவீன சிறுகதை எழுத்தில் மூத்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பாலமாகச் செயல்படுகிறார். அவரது படைப்புகள் மலேசிய நவீன தமிழ் இலக்கிய நகர்ச்சியையும் வளர்ச்சியையும் மிகச்சிறப்பாக அடையாளம் காட்டி நிற்கின்றன." என்று அ.பாண்டியன் மதிப்பிடுகிறார்.

உசாத்துணை

இணைய இணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=கோ._புண்ணியவான்&oldid=6208" இருந்து மீள்விக்கப்பட்டது