கோவிந்த மாரார்


கோவிந்த மாரார் (Shadkala Govinda Marar, மலையாளம்: ഗോവിന്ദ മാരാര്‍, 17981843) பிரபலமாக ஷட்கால கோவிந்த மாரார்) புகழ்பெற்ற ஒரு கருநாடக இசைப் பாடகர். தியாகராஜர் மற்றும் திருவிதாங்கூர் சாம்ராச்சியத்தின் மாமன்னர் சுவாதித் திருநாள் ராமவர்மா காலத்தில் இவர் வாழ்ந்தார். அவர் செண்டை, இடக்கை மற்றும் திமிலை போன்ற இசைக்கருவிகள் வாசிப்பதில் திறமையானவராக இருந்தார். கருநாடக இசையில் 'அதி அதி விளம்பிதம்', 'அதி விளம்பிதம்', 'விளம்பிதம்', 'மத்யமம்', 'துரிதம்', 'அதி-துரிதம்' ஆகிய ஆறு காலங்களிலும் பாடும் ஆற்றலை பெற்றிருந்ததால் "ஷட்கால" என்ற பட்டம் பெற்றார்.[1][2][3]

கோவிந்த மாரார்
கோவிந்த மாரார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கோவிந்த மாரார்
பிறந்ததிகதி 1798
இறப்பு 1843
அறியப்படுவது கருநாடக இசைப் பாடகர்

ஆரம்பகால வாழ்க்கை

கோவிந்த மாரார் கேரள கோயில்களில் பாரம்பரிய பாடல்கள் பாடுபவராக திகழ்ந்தார். மாரார் சமூகத்தைச் சேர்ந்த இவர் ராமமங்கலம் கிராமத்தில் 1798-இல் பிறந்தார். சிறு வயதிலிருந்தே பாட தொடங்கிய இவர் ஹரிப்பாத் ராமஸ்வாமி பாகவதர் என்பவரிடம் இசை பயிற்சி பெற்றார்.

அவர் ஏழு தந்திகள் கொண்ட ஒரு தம்புராவை பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. 21-ஆம் வயதில் வீட்டை விட்டு, நாடோடி போல கேரளா முழுவதும் பல முக்கிய கோவில்களுக்கு சென்று பாடியுள்ளார் என்று நம்பப்படுகிறது.

தியாகராஜ சுவாமியுடன் சந்திப்பு

நரேந்திர மேனன் என்ற அறிஞர் கூறுகிறார் - திருவனந்தபுரத்தில் இருக்கும்போது ஒருமுறை தியாகராஜரின் நேரடி சீடரான கண்ணையா என்பவரிடம் இருந்து சில தியாகராஜ கீர்த்தனைகளை மிகுந்த ஆர்வத்துடன் கேட்கலானார். ஹரிப்பாத் ராமஸ்வாமி பாகவதர் என்பவரும் தியாகராஜரின் சில பாடல்களை கற்றிருந்ததால் அவரிடம் இருந்து திரு மாரார் அவற்றை கற்கலானார். தியாகராஜர் அவருக்கு ஒரு சுடர்விளக்காகிவிட்டார் என்று கூறல் மிகையாகாது. 1837 ஆம் ஆண்டு தியாகராஜரை காண திருவையாற்றிற்கு இவர் பாதயாத்திரை மேற்கொண்டார். தியாகராஜரின் வீட்டை ஏகாதசி நாளன்று வந்தடைந்தார். தியாகராஜர் தலமையில் தினசரி பஜனை நடந்துகொண்டிருந்தபோது வந்து சேர்ந்து சோர்வுற்றிருந்த மாராருக்கு அமர இடத்தை அளித்தார் தியாகராஜர். விருந்தினரை வழக்கமாக பஜனையில் சில பாட்டுகள் பாடசொல்லும் பழக்கம் இருந்தது அன்று. மாரார் பாட அழைக்கப்பட்டார். வைணவருக்கு சிறப்பான ஏகாதசி நாளானதால் கண்ணன் மேல் மாரார் ஒரு பாட்டு பாடலாம் என்று நிர்ணயித்து "சந்தன சர்ச்சித நீல களேபர" என்ற அஷ்டபதி பாடலை பந்துவராளி ராகத்தில் பாட துவங்கினார். தியாகராஜரின் நேரடி சீடர்களான வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர் மற்றும் தஞ்சாவூர் ராமாராவ், பனையோலையில் எழுதிய தியாகராஜரின் வாழ்க்கை வரலாறு கொண்டும், கிருஷ்ணஸ்வாமி பாகவதர் என்ற மற்றொரு நேரடி சீடரின் புத்தகத்தில் இருந்தும் கிடைத்த செய்திகளின்படி பேராசிரியர் சாம்பமூர்த்தி இந்த காட்சியை நமக்கு பிரதிபலிக்கிறார் - "அவர் (மாரார்) பாட ஆரம்பித்தது அதி அதி விளம்ப காலம் (முதல் காலம்). அங்கு கூடிய மக்களுக்கு இவர் ஏன் இவ்வளவு மந்தமான வேகத்தில் பாடுகிறார் என்ற நினைப்பு இருந்தது, ஆனால் அவரின் காலப்பிரமாணம் மிகவும் துல்லியமாக இருந்ததை அவர்கள் உணர்ந்தனர். இடது கையில் தம்புராவை மீட்டிக்கொண்டு கால்கள் இடையில் வைத்த கஞ்சிராவை வலது கையால் வாசித்துக்கொண்டு பாடிய இவரை கண்டு தியாகராஜர் வியப்புற்றார். பிறகு அவர் அதி விளம்ப (அதாவது இரண்டாம்) காலத்தில் அதே பாடலை பாடினார். அதேபோல் மூன்று (விளம்ப), நான்கு (மத்யம), ஐந்து (துரித), ஆறு (அதி துரித) என்று ஒன்றிற்கு பின் ஒன்றாக வேகத்தை இரட்டித்து கொண்டே போனார். அவர் ஐந்தாம் காலத்தில் பாட நெருங்கியபோது பார்வையாளர்கள் இவரின் ஆற்றலை கண்டு மெய்மறந்து போனர். ஆறாம் காலம் பாடிய போது, தியாகராஜர் இவறது லய சம்பத்தை கண்டு வியந்து இவர் ஒரு மாமேதை என்பதை உணர்ந்தார். உடனே தியாகராஜர் மாராரின் ஆற்றலை போற்றும் வகையாக "எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமு" (மகான்கள் இவ்வுலகில் ஏராளம் அவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்) என்ற பிரபலமான பஞ்சரத்ன கீர்த்தனையை இயற்றினார். அன்று தியாகராஜரின் வயது 70, மாராரின் வயது 39, இது அக்காலத்தின் மாபெரும் இசை கலைஞர்களின் அறிய சந்திப்பு என்பது நரேந்திர மேனனின் அபிப்பிராயம்.

மறைவு

நீண்ட காலம் நாடோடியாக அலைந்து வாழ்ந்த காலத்தின் இறுதியில் அவர் பந்தர்பூரில் உள்ள பாண்டுரங்கன் கோவில் வந்தடைந்தார். "பரமஹம்ச கோவிந்த தாஸ்" என்று அங்கு அழைக்கலான இவர் கோவில் பதிவுகளின்படி 1843 இல் காலமானார் என்றும் தெரிகிறது.

ஆதாரங்கள்

வெளி பதிவுகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கோவிந்த_மாரார்&oldid=7325" இருந்து மீள்விக்கப்பட்டது