கோர்ட் (Court) என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான இந்திய பன்மொழி சட்ட நாடகத் திரைப்படம் ஆகும். இதை அறிமுக இயக்குநர் சைதன்யா தம்ஹானே எழுதி இயக்கியுள்ளார். மும்பை அமர்வு நீதிமன்றத்தில் வயதான போராட்ட பாடகரான நாராயண் காம்ப்ளே (விரா சதிதர்) என்பவரின் மீது நடக்கும் வழக்கு மூலம் இந்த படம் இந்திய நீதி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அச்சு அசலாக காட்டுகிறது. இதில் கீதாஞ்சலி குல்கர்னி, பிரதீப் ஜோஷி, ஷிரிஷ் பவார் ஆகியோர் நடித்தனர்.

கோர்ட்
இயக்கம்சைதன்ய தம்ஹானே
தயாரிப்புவேக் கோம்பர்
கதைசைதன்ய தம்ஹானே
இசைசாம்பாஜி பகத்
நடிப்பு
  • விர சத்திதர்
  • விவேக் கோம்பர்
  • கீதாஞ்சலி குல்கர்னி
  • பிரதீப் ஜோஷி
  • உஷா பேன்
  • சிரிஷ் பவார்
ஒளிப்பதிவுமிருணாள் தேசாய்
படத்தொகுப்புரிகவ் தேசாய்
கலையகம்Zoo Entertainment Pvt Ltd
விநியோகம்Artscope – Memento Films
வெளியீடு4 செப்டம்பர் 2014 (2014-09-04)(வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா)
17 ஏப்ரல் 2015 (India)
ஓட்டம்116 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழி
  • மராத்தி
  • இந்தி
  • குசராத்தி
  • ஆங்கிலம்
ஆக்கச்செலவு35 மில்லியன் (US$4,40,000)[1][2]

இப்படத்திற்கு சம்பாஜி பகத் இசையமைத்தார். மிருணாள் தேசாய் மற்றும் ரிகவ் தேசாய் முறையே ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பாளராகவும் பணியாற்றினர். உண்மையான நீதிமன்றங்களுக்கும் அவை திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் விதத்திற்கும் உள்ள வித்தியாசத்தைக் காண தம்ஹானே ஆர்வம் கொண்டவராக இருந்தார். பல உண்மை வழக்குகளைக் கண்டபின், இந்திய அமைப்பில் "நீதி மன்றக் கனவை" ஆராய விரும்பினார். அவரது நண்பர் விவேக் கோம்பர் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டு, அதில் நடித்தார். படக்குழு புதியவர்களைக் கொண்டிருந்தது. படத்தில் நடித்த நடிகர்கள் தொழில் முறை அல்லாத நடிகர்களாவர். மராத்தி, இந்தி, குஜராத்தி, ஆங்கிலம் என படத்தில் நான்கு மொழிகள் பேசப்படுகின்றன. இது மகாராட்டிரத்தில் நடப்பதாக உள்ளதால் பெரும்பாலான உரையாடல்கள் மராத்தியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. சட்டங்கள் ஆங்கிலத்தில் படிக்கப்படுகின்றன. எதிர் தரப்பு வழக்கறிஞர் குஜராத்தி மொழி பேசுபவராக உள்ளார்.

2014 ஆம் ஆண்டு நடந்த 71 வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கோர்ட் திரையிடப்பட்டது, அங்கு அது ஹொரைசன்ஸ் பிரிவில் சிறந்த திரைப்படம் மற்றும் தம்ஹானுக்காக லூய்கி டி லாரன்டிஸ் விருதை பெற்றது. இந்த திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 18 விருதுகளை பெற்றது. இது 2014 மும்பை திரைப்பட விழாவின் சர்வதேச போட்டி பிரிவில் இந்தியாவில் திரையிடப்பட்டது. இது திரையரங்குகளில் 2015 ஏப்ரல் 17 அன்று வெளியானது. வெளியாகி விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. மேலும் 62 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.

கதை

நாராயண் காம்ப்ளே ஒரு ஆசிரியர், கவிஞர் சமூக ஆர்வலர் மற்றும் எதிர்ப்பு பாடகர் ஆவார். அவர் மேடையில் பாடிய எதிர்ப்புப் பாடல் ஒன்றினால் துப்புறவுத் தொழிலாளியான வாசுதேவ் பவார் என்பவர் தற்கொலை செய்துகொண்டார் என காம்ப்ளே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்கொலைக்கு தூண்டியதாக அவர் கைது செய்யப்படுகிறார். அவரை மீட்க முயல்கிறார் வழக்கறிஞர் வினய் வோரா. அந்த வழக்கு விசாரணை எப்படியெல்லாம் நடக்கிறது. காம்ப்ளே விடுதலை ஆனாரா இல்லையா என்பதை, எந்த திடீர் திருப்பமோ, நீண்ட வசனங்களோ இன்றி படம் அதன் போக்கில் சொல்கிறது.

நடிப்பு

  • விர சதிதர் -நாராயண் காம்ப்ளேவாக
  • விவேக் கோம்பர் -வினய் வோராவாக
  • கீதாஞ்சலி குல்கர்னி -அரசு வழக்கறிஞர் நூதனாக
  • பிரதீப் ஜோஷி -நீதியரசர் சதாவர்தேவாக
  • உஷா பேன் -ஷர்மிளா பவாராக
  • ஷிரிஷ் பவார் -சுரித்தாக

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கோர்ட்&oldid=29453" இருந்து மீள்விக்கப்பட்டது