கோணாசல புராணம்

கோணாசல புராணம் இலங்கையின் திருகோணமலை நகரில் வாழ்ந்த பண்டித ராசர் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு தமிழ் நூல். இது தக்கின கைலாச புராணம் (தட்சிண கைலாச புராணம்) என்றும் வழங்கப்படுகிறது. பண்டித ராசர் இந்நூலை சிங்கைச் செகராசசேகர மன்னனின் (1318-1414) வேண்டுகோளுக்கிணங்கி பாடினார்.[1][2] இது திருகோணமலை கோவிலின் தலபுராணத்தைச் சொல்கிறது. திருகோணமலை கோவிலின் கடவுளாகிய கோணேசரைப் பற்றிய நூலாகின் இப்பெயர் ஏற்பட்டது. இப்புராணம் 1887ம் ஆண்டு முதன் முதலில் அச்சில் வெளியானது (கா. சிவசிதம்பர ஐயர் பதிப்பு , சென்னை). பின்னர் 1916 ம் ஆண்டு பு. பொ. வைத்தியலிங்க தேசிகர் பருத்தித்துறையில் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். இரு பதிப்புகளுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முன்னது இதனைச் செகராசசேகரனே பாடியதாகக் கூறுகிறது.[3] கோணாசல புராணத்தைப்பற்றி சில சிறப்பு பாயிரங்கள் கிடைத்துள்ளன. கவிவீரராகவர் என்பார் பாடிய பாயிரம்:

மணிநிறக் கண்டன் வடபெருங் கயிலையின்

அணிநிறக் கொடுமுடி யாயிரத் தொருமுடி
படவரா வொதுக்கப் பறித்தினி திலங்கை
வடகட னடுவண் மாருதம் பதிப்ப
வருமுக் கோண மலைதென் கயிலைப்
பரமர்க் குருத்திரர் பதினொரு பேரும்
ஓருபது முகுந்தரு மொன்பது விரிஞ்சரும்
வருடற் கமடம் வழங்கிய மீனமும்
திருமலை தழுவிய தெசமுக நிருதனும்
பொருமலை மதரிப் புரவலர் பலரும்
பூசையொ டிறைஞ்சிய புராணநூற் கதையைத்
தேசிகன் சொற்படி தென்கலைப் படுத்தி
யந்தா தித்தொடை யடைவொடு தொடுத்து
நந்தா விருத்த நவையறக் கூறினன்
பொன்னாட் டைந்தரு பொருவரு கரதலன்
மறுநில நிருபரை வானிலத் திருத்தி
யுறுநில முழுவது மொருதனி புரப்போன்
தென்னிலங் காபுரித் திசைதொறு மருவும்
மின்னிலங் கியவேல் மேவலர் புயத்துப்
படவரா முடித்தலைப் பார்முழு தாண்ட
இடப வான்கொடி யெழுதிய பெருமான்
சிங்கை யாதிபன் சேது காவலன்
கங்கை நாயகன் கருங்கடற் சேர்ப்பன்
பௌவ மேற்றுயில் பராபரன் சூட்டிய
தெய்வ மாமுடிச் செகராச சேகரன்
அவனது காலத் தத்திரி கோணைச்
சிவனது கோயிற் சிவமறை முதலோன்
அருமறை யுபநிட மாகமஞ் சோதிடம்
விரிதமிழ் வரையற விளங்கிய குரவோன்
சேயினுந் திறலான் றயாநிதி யனையான்
முப்புரி நூற்பயன் முளரியந் தாமன்
செப்பரும் பண்டித ராசசி காமணி
என்னு நாமத் தெங்குரு பெருமான்

மன்னுநாற் கவியும் வல்லநா வலனே

என்று இந்த நூலைப் பாராட்டுகிறது. .

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கோணாசல_புராணம்&oldid=15517" இருந்து மீள்விக்கப்பட்டது